முழுக்க முழுக்க சுதந்திரப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றும் மேலை நாடுகளிலும், அரபு நாடுகளிலும்கூட, மருந்துத் தொழில் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது. அங்கு மருந்தியல் படிக்காதவர்கள் மருந்துகளைத் தயாரிப்பதோ, பகுப்பாய்வு செய்வதோ, விற்பதோ முடியாது. முழுவதும் மருந்துத் தொழில் மருந்தியல் படித்தவர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் தவிர பிறர் வேலை செய்ய முடியாது. கடை உரிமையாளர் காசை மட்டும் தான் தொடலாம், எடுக்கலாம், கொடுக்கலாம். மருந்துச் சீட்டையோ, மருந்தையோ எடுப்பதும், கொடுப்பதும் குற்றம். விற்பனை கவுண்டருக்குப் பின்னால், வெள்ளைக் கோட்டில், பெயர் பொறித்த பிளேட்டுடன் கூடிய மருந்தாளுநர் மட்டுமே நிற்க வேண்டும். பிறர் நின்றால் தண்டனை உண்டு. நம் நாட்டில் 8, 9-ம் வகுப்பு கூட முடிக்காத சேல்ஸ் பாய் முதல் கடை முதலாளி வரை அனைவரும் மருந்து தருவார்கள், வைத்தியமும் செய்வார்கள்.