/

அரசு கலைக் கல்லூரிகளில் செயலிழக்கும் மொழி ஆய்வக திட்டம்

சென்னை, செப். 4: அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து வருகிறது. அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழித்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 pm

சென்னை, செப். 4: அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட மொழி ஆய்வகத் திட்டம் செயலிழந்து வருகிறது.

அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க தமிழக அரசு சார்பில் மொழி ஆய்வகம் என்ற சிறப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக 60 அரசு கலைக் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் நிறுவனங்களில் இத் திட்டம் அமல் செய்யப்பட்டது.

இந்தக் கல்லூரிகளில் ஆய்வகம் அமைக்கத் தேவையான கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்க ஒவ்வொரு கல்லூரிக்கும் தலா ரூ. 5.5 லட்சம் 2009-ல்  ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 60 கல்லூரிகளிலும் 10 கணினிகளுடன் கூடிய மொழி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம், ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் செயலிழந்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டு ஆகிறது. ஆனால், சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் ஆய்வகம் இன்னும் செயல்படாமலே உள்ளது. பொதுப் பணித் துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கணினிகள் இன்னும் முழுமையாக இணைக்கப்படாததோடு, ஆய்வக அறைக்கு குளிர்சாதன வசதியும் செய்யப்படவில்லை. இதனால், கணினிகள் அனைத்தும் புழுதி படிந்து வீணாகின்றன. மின் விசிறியோ, மின் விளக்கோ இல்லாததால் ஆய்வகம் இருண்டு கிடக்கிறது என அந்த கல்லூரி விரிவுரையாளர் கூறினார்.

நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறை மாணவர்களுக்கு மட்டும் ஆய்வகத்தில் பயிற்சி தரப்படுகிறது என பிற மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சென்னை காயிதே மில்லத் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் ஆய்வகம் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அனைத்துத் துறை மாணவிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், ஆசிரியர் பற்றாக்குறை, போதிய கணினிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் திட்டம் மாணவிகளை முழுமையாகச் சென்றடையவில்லை என பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த கல்லூரி விரிவுரையாளர் கூறியது:

அரசு ஒதுக்கிய நிதியில் 10 கணினிகள் மட்டுமே வாங்க முடிந்தது. எஞ்சியிருந்த நிதி, குளிர்சாதன வசதி செய்வதற்கும், இதர உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் செலவிடப்பட்டது. ஆய்வகத்துக்கு தேவையான ஹெட் ஃபோன்களை, ஆசிரியர்களே தங்கள் சொந்த பணத்தில் வாங்க வேண்டியிருந்தது.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் இந்தக் கல்லூரியில், 10 கணினிகளை வைத்துக்கொண்டு மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்துவது என்பது இயலாத காரியம். கணினிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதோடு, திட்டமும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

கல்லூரியில் இளநிலை ஆங்கிலத் துறையில் ஒரு தலைவர், 18 ஆசிரியர்கள்  இருக்க வேண்டும். முதுநிலை ஆங்கிலத் துறையில் ஒரு தலைவர், 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். மொத்தமாக 25 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இத்துறையில் இப்போது 16 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் 2 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் பல அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால், மொழி ஆய்வகத்துக்கு தனி ஆசிரியரை நியமிக்க முடியாத நிலை உள்ளது.  மேலும், கணினி படிப்பில் பட்டயம் பெற்ற ஒருவரை ஆய்வக உதவியாளராகவும், தூய்மைப் பணியாளர் ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும். திட்டத்துக்கான பாடங்களை விரிவுப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார்.

தனி பாடத்திட்டம் தேவை

மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்த மொழி ஆய்வகங்கள் போதுமா என்ற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்புகின்றனர்.

தன்னாட்சி சுயநிதி கல்லூரிகளில், மாணவர்கள் சேரும்போதே தேர்வுகள் மூலம் அவர்களின் ஆங்கிலத் திறன் கண்டறியப்பட்டு, திறன் குறைந்தவர்களுக்கு தனி பாடத்திட்டம் வழங்கப்படுகிறது. அரசு கல்லூரிகளிலும் ஆரம்பத்திலேயே மாணவர்களின் ஆங்கிலத் திறன் கண்டறியப்பட்டு, அதனடிப்படையில் பாடத்திட்டத்துடன் கூடிய மொழித் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என சென்னையில் உள்ள தன்னாட்சி சுயநிதி கல்லூரியின் அடிப்படை கல்வித் துறை டீன் ஜேம்ஸ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.