சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செம்மை நெல் சாகுபடியில் புதிய வேளாண் தொழில்நுட்பங்கள்

சிதம்பரம்: தமிழக விவசாயிகள் சில ஆண்டுகளாக செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். முன்னோடி விவசாயிகள் பலர் தங்களின் அனுபவம், தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி தற்போதைய செம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:27 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம்: தமிழக விவசாயிகள் சில ஆண்டுகளாக செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். முன்னோடி விவசாயிகள் பலர் தங்களின் அனுபவம், தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி தற்போதைய செம்மை நெல் சாகுபடி கருவிகளுக்கு மாற்றாக புதிய வேளாண் கருவிகளை, புதிய முறையிலான சாகுபடி முறையை பின்பற்றி அதிகளவு மகசூல் பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது: தற்போது செம்மை நெல் சாகுபடியில் முக்கிய பயன்பாட்டு உழவியல் கருவியாக கோனோவீடர் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நடவு செய்து முடிந்த சில நாள்களில் களைகளை கட்டுப்படுத்தவும், அழிக்கவும் பயன்படும் கோனோவீடர் கருவிக்கு மாற்றாக கர்நாடக மாநில விவசாயிகள் சைக்கிள் சக்கர வடிவில் புதிய களை எடுக்கும் கருவியை வடிவமைத்து, அகலத்தை 3 அங்குலம் அளவுக்கு அதிகப்படுத்தி நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய கோனோவீடரில் ஒற்றை கைப்பிடியை மாற்றி இரண்டு கைப்பிடிகளை பொருத்தியுள்ளனர். இதன் மூலம் விவசாயிகள் எளிதாக உறுதியான பிடிப்புடன் கருவியை பயன்படுத்த முடிகிறது.

மேலும் அந்த சைக்கிள் வடிவிலான களையெடுப்பு கருவியுடன் அதிகப்படியாக களை கொத்து கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.

சமுதாய முறையில் ... செம்மை நெல் சாகுபடியில் குறைந்தளவு நாற்றங்கால் நிலமே போதுமானது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு தேவையான நாற்றங்காலை ஒரு சென்ட் நிலத்தில் உருவாக்க முடியும். இருப்பினும் செம்மை நெல் சாகுபடிக்கு தேவைப்படும் பாய் நாற்றங்கால் தயாரிக்க போதிய வேளாண் தொழில்நுட்பத்திறன் தேவை. இவை தெரியாத காரணத்தால் பல பாரம்பரிய விவசாயிகள் செம்மை நெல் சாகுபடியில் ஈடுபட விரும்பவில்லை.

இந்த நிலையை போக்க விழுப்புரம் மாவட்ட பூம்புர் கிராமத்தில் கூட்டுறவு சமுதாய முறையில் 15 முதல் 20 விவசாயிகள் (குறிப்பாக வளங்குன்றிய சிறு மற்றும் குறு விவசாயிகள்) சேர்ந்து சமுதாய அடிப்படையில் ஒரே இடத்தில் பாய் நாற்றங்கால் அமைத்து, நன்றாக பராமரித்து, 14-ம் நாளில் தங்களின் பயன்பாட்டுக்கும் பிற விவசாயிகளின் பயன்பாட்டுக்கும் நாற்றுகளைத் தந்து வெற்றிகரமாக செம்மை நெல் சாகுபடியில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய சமுதாய சூழலில் குறைந்த வேளாண் இடுபொருள்களை பயன்படுத்தி அதிக அளவு மகசூல் பெற்றுத் தரும் செம்மை நெல் சாகுபடியை புதிய வேளாண் தொழில்நுட்பங்கள், சமுதாய அளவிலான நாற்றங்கால் உற்பத்தி முறைகள் ஆகியவற்றை செயல்படுத்தி உணவு தானிய உற்பத்தியை பெருக்கி விவசாயிகள் பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.