திருவாரூர்: திருவாரூரில் உள்ள உழவர் சந்தை மக்களுக்குப் பயன்படும் சந்தையாக மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பு மக்களிடமும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 1996-2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற திமுக ஆட்சியில் விவசாயிகளும், நுகர்வோரும் இடைத்தரகர்களின்றி நேரடியாகச் சந்தித்து, பொருள்களை விற்பனை செய்யும் நடைமுறையை ஏற்படுத்த, முக்கிய நகரங்களில் அரசின் வேளாண் வணிகத் துறை சார்பில் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டன.
இதன்மூலம் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையும், நுகர்வோருக்கு தரமான பச்சைக் காய்கறிகள் நியாயமான விலையிலும் கிடைத்தன என்பதை மறுக்க முடியாது.
அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுக, இந்த உழவர் சந்தைகளைக் கண்டுகொள்ளாததால், உழவர் சந்தைக்கு விவசாயிகள், நுகர்வோரின் வருகை பெருமளவில் குறைந்தது. மீண்டும் 2006-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, உழவர் சந்தைகளுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியது.
ஆனால், 28.10.2000-ல் தொடங்கப்பட்ட திருவாரூர் உழவர் சந்தை மட்டும் இன்றுவரை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் சந்தையாக மாறவே இல்லை. திருவாரூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பக்கத்தில் இதற்கென கடைகள் கட்டப்பட்டு, குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் உழவர் சந்தைக்கு சிமிழி, மருதப்பட்டினம், புதுக்குடி, பூங்காவூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் கீரை, கத்தரி, தேங்காய், வெண்டை, கொத்தவரை, புடலங்காய், பாகல்காய், பூசணி, பரங்கி, வாழை உள்ளிட்ட காய்கறிகளை இங்கு தினந்தோறும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகக் கொண்டு வருகின்றனர். தினந்தோறும் 5 முதல் 7 டன் அளவிலும், நல்ல பருவத்தில் 8 முதல் 10 டன் வரையிலும் காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வருவதாகக் கூறுகின்றனர் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள்.
ஆனால், காலை 6.30 மணிக்கு இந்த உழவர் சந்தைக்குச் சென்றாலே நாட்டுக் காய்கறிகள் எதுவுமே இருக்காது. தற்போது இதன் உள்ளே ஆவின் பால் விற்பனையகம் ஒன்றும், கேரட், உருளை, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட வெளியூர் காய்கறிகளை விற்பனை செய்வதற்கான ஒரு கடையும்தான் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கின்றன.
இந்த உழவர் சந்தைக்கு மக்கள் அதிக அளவில் வராததற்கு காரணம், இதற்குப் பக்கத்தில் உள்ள கருவாட்டு சந்தைதான். வாரத்தில் புதன், வியாழக்கிழமை நடைபெறும் இந்த கருவாட்டு சந்தையிலிருந்து வரும் துர்நாற்றம் வாரம் முழுவதும் அந்தப் பகுதியில் வீசுகிறது. இதனால் கொசு, ஈக்கள் அதிக அளவில் இந்த காய்கறிகளில் மொய்க்கின்றன. எனவே, அவற்றை எப்படி வாங்கி உண்பது என மக்கள் இங்கு வருவதில்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
தினந்தோறும் அதிகாலை 4.30 மணிக்கு இங்கு பேருந்துகளிலும், சைக்கிள்களிலும் கொண்டு வரப்படும் காய்கறிகளை சுற்றுவட்டாரத்தில் உள்ள சில்லறை வியாபாரிகள் 5 கிலோ, 10 கிலோ என மொத்தமாக வாங்கிச் சென்று விடுகின்றனர்.
இதனால் காலை 6 மணிக்கே காய்கறிகள் விற்பனையாகிவிடுகின்றன. அதன் பின்னர் வரும் ஒரு சில பொதுமக்களுக்கும் காய்கறிகள் கிடைப்பதில்லை.
உழவர் சந்தைக்குச் சென்றால் காய்கறிகள் கிடைக்காது என்பதால் மக்களும் வருவதில்லை. எனவே, கொண்டு வந்த காய்கறிகளை சீக்கிரமாக விற்றுவிட்டு, ஊருக்குப் புறப்படுவதில்தான் விவசாயிகளும் ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார் சந்தைக்கு காய்கறி எடுத்து வரும் விவசாயி ஒருவர்.
இந்த உழவர் சந்தையை மக்கள் பயன்படுத்தும் சந்தையாக மாற்ற திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட பால்வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை.
அமைச்சர் அல்லது ஆட்சியர் ஆய்வுக்கு வரும் நாளன்று மட்டும் காலை 8 மணி வரையிலும் சந்தையில் விவசாயிகள் காய்கறிகளுடன் ஆஜராகியிருப்பார்கள். மறுநாள் முதல் பழைய கதைதான்.
"உழவர் சந்தையை மக்கள் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள சாலையிலிருந்து உள்ளடங்கியிருக்கும் உழவர் சந்தையை சாலை வரை நீட்டிக்க வேண்டும்.
மேலும், உழவர் அட்டை பெற்றுக் கொண்டு காய்கறிகளை விளைவித்து, திருவாரூர் நேதாஜி சாலை வளைவு அருகேயும், நேதாஜி சாலையில் உள்ள ஓடம்போக்கி பாலத்திலும் விற்பனை செய்வோரைத் தடுத்து, அனைவரையும் உழவர் சந்தையில் கொண்டு வந்து தங்களது காய்கறிகளை விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்' என்கிறார் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலர் ஆர். ரமேஷ்.
சைவ உணவுகளை உள்கொள்வோர் உள்ளிட்ட அனைவரும் இந்தச் சந்தைக்கு வந்து செல்லும் வகையில், கருவாட்டு சந்தையால் ஏற்படும் பிரச்னைக்கு உரிய நல்ல தீர்வை அரசு காண வேண்டும்.
அதேபோல, நல்ல நோக்கத்துக்கென தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தைகள் மக்கள் பயன்படுத்தும் சந்தையாக மாற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

தோ்தல் பாதுகாப்பு: இரு மாநில காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வாக்கு சேகரிப்பு

தவெகவில் இணைந்த ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் நிா்வாகி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


