அறுவைச் சிகிச்சைக்கு அரசு அனுமதித்த பணம் பயனாளிகளுக்கு கிடைப்பது எப்போது?

அறுவைச் சிகிச்சைக்கு அரசு அனுமதித்த பணம் பயனாளிகளுக்கு கிடைப்பது எப்போது?

பேராவூரணி : தமிழ்நாடு மாநில நோயாளர் நிதியுதவி அமைப்பு நிதியிலிருந்து, உயிர்காத்த அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிதியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர். க

பேராவூரணி : தமிழ்நாடு மாநில நோயாளர் நிதியுதவி அமைப்பு நிதியிலிருந்து, உயிர்காத்த அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிதியை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு இதயம், புற்றுநோய், சிறுநீரக மாற்று போன்ற உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள, தமிழ்நாடு மாநில நோயாளர் நிதியுதவி அமைப்பு நிதியிலிருந்து (மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு ஆணை எண் 150, 01.06.2002) | 25 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இருதய, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிக அளவு செலவு செய்ய வேண்டியுள்ளதால், அதில் ஒரு பகுதியை ஈடுகட்டும் வகையில் இந்தத் தொகை வழங்கப்பட்டு வந்தது.

நோயாளிகளின் கோரிக்கையை, மாநில அமைச்சர்கள் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரிந்துரை செய்து அனுப்பினால் மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படுவது வழக்கம்.

இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த என். வரதராஜன், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த சி. பாலசுப்பிரமணியன், மா. நதியா, தி. குழந்தை ஆகியோருக்கு இருதய அறுவைச் சிகிச்சைக்கும், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த பா. வெங்கடசுப்பிரமணியனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கும் (அரசு ஆணை எண். 2277, 04.12.2009) தலா | 25 ஆயிரம் வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணை கிடைக்கப் பெற்றவுடன் மாவட்ட ஆட்சியரால் பராமரிக்கப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில நோயாளர் நிதியுதவி அமைப்பு, அறுவைச் சிகிச்சை செய்ய இருக்கும் மருத்துவமனைக்கோ அல்லது அறுவைச் சிகிச்சைக்கான தொகையை நோயாளி ஏற்கெனவே மருத்துவமனைக்கு செலுத்தியிருந்தால் அவருக்கோ சிகிச்சைக்கான நிதியை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என அரசு துணைச் செயலரின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு 9 மாதங்களைக் கடந்த நிலையிலும், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட யாருக்கும் இந்தத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இதேபோல, வேறுவேறு தேதிகளில் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழகம் முழுவதும் பலருக்கும் இந்தத் தொகை வழங்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரைப்படி, அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட இவர்கள் அனைவரும் சாதாரண ஏழை விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட செருவாவிடுதி வடக்கைச் சேர்ந்த சி. பாலசுப்பிரமணியன் கூறியது:

கடந்த 2009 ஆம் ஆண்டு | 2 லட்சம் செலவில் மிகுந்த சிரமத்திற்கிடையே விவசாய நிலத்தை விற்றும், கடன் வாங்கியும் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டேன்.

அதில் ஒரு பகுதியாக அரசிடமிருந்து | 25 ஆயிரம் நிதி வழங்கப்படும் எனக் கூறப்பட்டதால், அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதற்கான அனைத்து ஆதாரங்களுடன் அரசிற்கு விண்ணப்பித்தேன்.

இதையடுத்து, நிதி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் கடந்த நிலையிலும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை. என்னைப்போல, அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பலருக்கும் இந்தத் தொகை வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் நேரடியாக பலமுறை மனு அளித்தும் எந்தப் பயனுமில்லை. இந்த நிதி கிடைக்காது என்று கூறிவிட்டாலாவது, அலைச்சல் இல்லாமல் இருந்துவிடலாம்.

ஒவ்வொரு முறையும் ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஏதாவது ஒரு காரணம் கூறி, திருப்பி அனுப்புகின்றனர் என்றார் அவர்.

தற்போது, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சைக்கு | ஒரு லட்சம் வரை அனுமதிக்கும் தமிழக அரசு, உயிரைக் காத்த அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிதியை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com