தனுஷ்கோடி: மறக்கப்பட்ட ரயில் பாதை திட்டம்
சென்னை: புயலின் கோரத் தாக்குதலில் உருக்குலைந்து போன தனுஷ்கோடி - ராமேசுவரம்ரயில் பாதையை மீண்டும் அமைக்கும் திட்டம் 47 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் இந்தத


சென்னை: புயலின் கோரத் தாக்குதலில் உருக்குலைந்து போன தனுஷ்கோடி - ராமேசுவரம்ரயில் பாதையை மீண்டும் அமைக்கும் திட்டம் 47 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2004 டிசம்பர் 26-ல் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில், தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்கள் பேரழிவைச் சந்தித்தனர். அதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே, கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த ஆழிப்பேரலைகளின் அகோரப் பசிக்கு தனுஷ்கோடி இரையானது.
ராமேசுவரம் தீவின் தென்கோடியில் இருந்த தனுஷ்கோடி நாட்டின் புண்ணியத் தலமாக இன்றும் கருதப்படுகிறது. வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் இடமாகவும் இது உள்ளது.
1964 டிசம்பர் 23-ல் ஏற்பட்ட புயல் காரணமாக, ராட்சத அலைகள் பொங்கி எழுந்ததால், தனுஷ்கோடி நகரம் முழுவதும் கடலில் மூழ்கியது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், தனுஷ்கோடி வாழத் தகுதியற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இப்போது அந்தப் பகுதியில் சேதமுற்ற வீடுகள், தேவாலயம், ரயில் நிலையம் ஆகியவை குட்டிச் சுவர்களாக, தனுஷ்கோடியின் சோக வரலாற்றைக் கூறும் சுவடுகளாக எஞ்சியுள்ளன.ரயில் தண்டவாளங்களும் மணல் திட்டுகளின் இடையே பேரழிவின் பதிவுகளாக இன்னமும் தெரிகின்றன.
தென்னிந்திய மக்கள் காசி யாத்திரை செல்வதுபோல வட மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் ராமேசுவரத்துக்கு புண்ணிய யாத்திரை வருவது இன்றும் வழக்கமாக உள்ளது.
1964-க்கு முன்புவரை ராமேசுவரம் வரும் பக்தர்கள் தனுஷ்கோடியில் புனித நீராடி, இங்குள்ள கோதண்ட ராமர் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரத்துக்கு "போட் மெயில்' என்ற ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் தனுஷ்கோடி வரை இயக்கப்பட்டு வந்தது. இங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னார் வழியாக இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்துக்கு பயணிகள் சென்று வந்தனர். ரயில் சேவை, கப்பல் சேவைகளுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அந்தக் காலத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது.
இதனால், இலங்கை- தமிழகம் இடையே வணிகம், போக்குவரத்து பெருகியது. ஆனால், தனுஷ்கோடியைத் தாக்கிய ஆழிப்பேரலைகள் இந்த ரயிலையும் கபளீகரம் செய்தன. இதில் பயணம் செய்த 123 பயணிகளும் உயிரிழந்தனர்.
சுனாமி தாக்குதலுக்குப் பின் மத்திய, மாநில அரசுகளும், உலக நாடுகளின் பல்வேறு அமைப்புகளும் சேதமுற்ற குடியிருப்புகளின் மறுகட்டமைப்புக்கு உதவிக்கரம் நீட்டின.
ஆனால், ஜல சமாதியான தனுஷ்கோடியை மீண்டும் சீரமைக்க இதுவரை யாரும் முன்வரவில்லை.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு: சில ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், கொழும்பு- தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதில் இலங்கை- இந்திய அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
எனவே, கடல் கொண்ட தனுஷ்கோடியை மீண்டும் கட்டி எழுப்பும் வகையில், முதல் முயற்சியாக 47 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாராணசியில் இருந்து ராமேசுவரத்துக்கு வாராந்திர விரைவு ரயில் (14260, 14259), சென்னை எழும்பூர்- ராமேசுவரம் இடையே தினமும் 2 ரயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் நிரம்பி வழியும் இந்த ரயில்கள் மூலம் ராமேசுவரம் தீவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, குறைந்தபட்சம் தனுஷ்கோடிக்கு மீண்டும் ரயில் சேவையைத் தொடங்கும் வகையில் ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே துறை அனுமதி அளிக்க வேண்டும். தமிழக சுற்றுலாத் துறையும், தனுஷ்கோடியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த முன்வர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...