"ஏட்டுச் சுரைக்காயாக' மாறிய ரயில்வே திட்டங்கள்
சென்னை, ஜன. 22: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 11 மாதங்களாகியும் இதுவரை பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 2010-11-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்


சென்னை, ஜன. 22: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 11 மாதங்களாகியும் இதுவரை பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
2010-11-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இதுவரை நடைமுறைக்கு வராததால், இந்தத் திட்டங்கள் "ஏட்டுச் சுரைக்காயாக' மாறியுள்ளன. இதன் விவரம்:
புறக்கணிக்கப்படும் ரயில்வே பாதுகாப்பு: ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுவது "அறிவிப்போடு' நிற்கிறது.
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே காவல் பாதுகாப்புப் படையில் 12 கம்பெனிகள் கொண்ட "மகிளா வாகினி' என்ற புதிய படைப் பிரிவை அமைத்தல், முன்னாள் ராணுவத்தினரை ரயில்வே பாதுகாப்புப் படையில் அதிக எண்ணிக்கையில் சேர்ப்பது உள்ளிட்ட திட்டங்களும் "நித்திரையில்' உள்ளன.
ரயில்வே பாதுகாப்புப் படையிலும் காலியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. ரயில்கள், சரக்கு வேகன்கள் செல்லும் இடத்தை அறிய ஜி.பி.எஸ். தொழில்நுட்ப அடிப்படையிலான வசதிகள் இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுப்படுத்தப்படவில்லை.
இதே போல ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதைத் தடுப்பதற்கான சாதனங்கள், ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை வசதியும் இன்னமும் சோதனை முறையில்தான் உள்ளன.தமிழகத்தில் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் கேட் கீப்பர்கள் நியமிக்கும் திட்டமும் "ஏட்டளவில்' மட்டும்தான் உள்ளது.
மாதிரி ரயில் நிலையங்கள்: தமிழகத்தில் திருவாரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களை மாதிரி (ஆதர்ஷ்) ரயில் நிலையங்களாக மேம்படுத்துதல், தனியார் பங்கேற்புடன் பல அடுக்கு மாடி வாகன நிறுத்தும் இடங்கள், பல்நோக்கு வளாகங்கள், மாவட்டத் தலைநகரங்கள், ஊராட்சிகளில் டிக்கெட் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களும் கிடப்பில் உள்ளன.
ரயில்வே மருத்துவமனைகள்: தமிழகத்தில் செங்கல்பட்டு, ஈரோடு, கரூர், காட்பாடி, கும்பகோணம், நாகர்கோவில், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய இடங்களில் ரயில்வே மருத்துவமனைகளும், சோதனை மையங்களும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான பூர்வாங்கப் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை.
இதுதவிர, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், 10 உறைவிடப் பள்ளிகள், மாதிரி பட்டப் படிப்புக் கல்லூரிகள், ரயில்வே ஊழியர்களுக்கான தொழில்நுட்ப, நிர்வாகப் பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிறுவனங்கள் எதுவும் தென் மாநிலங்களில் தொடங்கப்படுவதற்கான "அறிகுறியே' இதுவரை இல்லை.
சென்னையில் விளையாட்டு அகாதெமி...சென்னையில் புதிய விளையாட்டு அகாதெமி தொடங்கும் திட்டமும் பட்ஜெட் அறிவிப்போடு நிலுவையில் நிற்கிறது.
பயணிகள் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக தங்க ரயில் தடங்கள் அமைக்கும் திட்டமும் இதுவரை தொடங்கப்படவில்லை. தேசிய அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்கத் திட்டமிடவும், செயல்படுத்தவும் தனி ஆணையம் அமைக்கும் திட்டம் "சலனமின்றி' உள்ளது.
பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை விரிவாக்கம்: ரயில் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ரயில் பெட்டிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, ஆண்டுக்கு 1,500 பெட்டிகள் தயாரிக்கும் வகையில் பெரம்பூரில் இப்போதுள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை வளாகத்திலேயே 2-வது புதிய ஆலையை அமைத்து விரிவாக்கம் செய்யப்படும் திட்டமும் "குளத்தில் போட்ட கல்லாக' மாறியுள்ளது.
விரைவு ரயில்களில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. இந்தத் திட்டமும் அறிவிப்புடன் அமைதியாகிவிட்டது.
அறிமுகமாகாத ரயில் சேவைகள்: சென்னை- கோவை துரந்தோ (நான்-ஸ்டாப்) அதிவேக விரைவு ரயில் (12243, 12244), கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயில் (12758, 12757), மதுரை- திருப்பதி வாரம் இருமுறை விரைவு ரயில் (12762, 12761), திருச்சி- மங்களூர் வாராந்திர விரைவு ரயில் (12653, 12654), நாகர்கோவில்- பெங்களூர் வாராந்திர விரைவு ரயில் (16538, 16537) உள்ளிட்ட ரயில்கள் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை.
தமிழகத்துக்கான அகலப்பாதை திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...