அதிகரித்து வரும் சுத்திகரிக்கப்படாத குடிநீர் பாட்டில் விற்பனை

அரியலூர்: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறி, சாதாரணக் குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும்,
அதிகரித்து வரும் சுத்திகரிக்கப்படாத குடிநீர் பாட்டில் விற்பனை
Updated on
2 min read

அரியலூர்: மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறி, சாதாரணக் குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 நாட்டில் விஞ்ஞானம் வளர்ச்சி அடைய அடைய நன்மைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், மக்களை ஏமாற்றும் செயல்பாடுகள் மற்றொரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 அந்த வகையில், தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அல்லது வந்து செல்லக் கூடிய இடங்களில், சாதாரண குடிநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. எந்தப் பருவ காலத்திலும் விற்பனை நடைபெறும் தொழில்களில் ஒன்றாக குடிநீர் விற்பனை உள்ளது. காசு கொடுத்து குடித்தாலும் பரவாயில்லை, நல்ல குடிநீராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான மக்களிடம் உள்ளது.

 உள்ளூரில் உள்ள சிறிய அளவிலான நிறுவனங்கள் குடிநீர் விற்பனை மேற்கொண்டிருந்த நிலையில், குளிர்பான நிறுவனங்களும் சுத்திகரிக்கப்பட்ட (மினரல் வாட்டர்) குடிநீர் விற்பனையை செய்து வருகின்றன.

 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் எந்தத் தேதியில் பாட்டில்களில் அடைக்கப்பட்டது என்பது முதல் எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம் என்பதும், குடிநீரை பாட்டில்களில் அடைக்கும் இடம் போன்ற அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்கும்.

 இந்த விற்பனை ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் குடிநீர் பாட்டில்களில் சாதாரணக் குடிநீரை அடைத்து வைத்து விற்பனை செய்வது பல இடங்களிலும் தொடர்ந்து வருகிறது. அவசரத்தில் பேருந்திலோ அல்லது ரயிலிலோ பயணம் செய்பவர்கள் வாங்கி அருந்தும் போதுதான், அந்தக் குடிநீர் சாதராண தண்ணீர் என்பது தெரிய வரும்.

 சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குடிக்கும் போது இருக்கும் சுவை, சாதாரணக் குடிநீரில் இருப்பதில்லை.

 அசுத்தமான குடிநீரால் பல நோய்களுக்கு இலக்காகும் நிலையில், இப்படி குடிநீரை ஏமாற்றி விற்பனை செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அரியலூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர்.

 கண்காணிப்பு தேவை:

 சாதாரணமாக எந்தப் பொருள் விற்பனைக்கு வந்தாலும், அந்தப் பொருள் தயாரிக்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட தேதி, பொருளின் எடை, எத்தனை மாதங்கள் அல்லது எத்தனை நாள்கள் பயன்படுத்தலாம் போன்ற விவரங்கள் முக்கியமாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், பல பொருள்களில் ஏதேனும் ஒரு விவரம் இருப்பதில்லை.

 அந்த வகையில், தற்போது தூய்மையான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறி, அதற்குப் பதிலாக சாதாரண நிலத்தடி நீரோ அல்லது வேறு குடிநீரோ கொண்டு பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் அவ்வப்போது கடைகளுக்குச் சென்று விற்பனைப் பொருள்களைச் சோதனையிட்டு, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்குரைஞர் முத்துக்குமரன்.

 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களில் சாதாரணக் குடிநீரை அடைத்து விற்பனை செய்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் அதிரடிச் சோதனை நடத்தினால்தான், இதுபோன்ற விற்பனையில் ஈடுபடுபவர்களைத் தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com