புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நிறைவேறாத சுற்றுலாத் திட்டங்கள்: குமரி பயணிகள் அதிருப்தி

கன்னியாகுமரி, : நிறைவேற்றப்படாத சுற்றுலாத் திட்டங்களால், கன்னியாகுமரி பொலிவிழந்து காணப்படுவதாக பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான கன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:16 am

தி. ராமகிருஷ்ணன்

கன்னியாகுமரி, : நிறைவேற்றப்படாத சுற்றுலாத் திட்டங்களால், கன்னியாகுமரி பொலிவிழந்து காணப்படுவதாக பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஆண்டுதோறும் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் வருவாயும் அதிகரித்து வருகிறது. வாகன நிறுத்த கட்டணம், கடை வாடகை, சீசன் கடைகள் அமைத்தல் உள்ளிட்டவை மூலம் மட்டும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு ரூ. 2 கோடிக்கும் மேல் வருவாய் கிடைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பேரூராட்சி நிர்வாகம் பல ஆண்டுகளாக எவ்வித சிறப்புத் திட்டங்களையும் நிறைவேற்றாதது சுற்றுலாப் பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

முக்கியப் பகுதியான முக்கடல் சங்கமத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். புனித நீராடும் பகுதியில் 2004-ல் ஏற்பட்ட சுனாமி அலைகளால் இழுத்து வரப்பட்ட ராட்சதக் கற்கள் இன்றுவரை அகற்றப்படவில்லை.

சூரிய உதயத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் குவியும் இடத்தில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கற்கள் குவிந்துள்ளன.

நிறைவேறாத திட்டங்கள்: சுற்றுலாப் பயணிகள் பெரிதும் எதிர்பார்த்த திட்டமான ரோப்-கார் திட்டம் ஆய்வுப் பணியுடன் நின்றுவிட்டது. ரூ. 10 கோடிக்கும் அதிகமான செலவில் இத் திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்கள் தயாராக இருந்தும் அத் திட்டம் இன்றுவரை தொடங்கவில்லை. விவேகானந்தபுரத்திலிருந்து காந்தி நினைவு மண்டபம் வரை நிலத்துக்கடியில் மின் கம்பி பதிக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைகளை இணைக்கும் விதத்தில் பாலம் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

காந்தி, காமராஜர் நினைவு மண்டபங்கள் அமைந்ள்ள பகுதியில் மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படவில்லை. காந்தி நினைவு மண்டபம் முன் அமைந்துள்ள அலங்கார நீரூற்று பூங்கா பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது.

சிலுவை நகர் சன்செட் பகுதியில், ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட கார் பார்க்கிங் பராமரிப்பின்றியும், அங்குள்ள பூங்கா சேதமடைந்தும் உள்ளன. இப் பூங்கா இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாக மாறிவிட்டது.

சுற்றுலா நட்பு ஆட்டோ, சுற்றுலா சைக்கிள் திட்டம் தொடங்கியதுடன் நின்றுவிட்டன. கடலில் உல்லாசப் படகு விடும் திட்டம், கடற்கரையில் குடில்கள் அமைக்கும் திட்டம், வீதிகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிப்புகளோடு சரி.

மொத்தத்தில், கேரள மாநில அரசு போல சுற்றுலாவுக்கு தனிச்சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே இவை அனைத்துக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்கின்றனர் சுற்றுலா ஆர்வலர்கள். கன்னியாகுமரி கடற்கரையோரம் உள்ள பகவதியம்மன் கோவிலில் 17 உண்டியல்கள் மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

ஆனாலும், கோவிலின் உள்பிராகாரத்திலோ, வெளிப்பிரகாரத்திலோ குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள தெருவிளக்குகள் எரியாததால் பக்தர்கள் பிரகாரத்தை அச்சத்துடன் சுற்றிவர நேரிடுகிறது. பேரூராட்சி நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் அடிப்படை வசதிகளைக்கூட நிறைவேற்றாமல் இருப்பது சுற்றுலாப் பயணிகள், பக்தர்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.