தாலுக்கா அலுவலகத்தில் இயங்காத தொடுதிரை கணிணி
ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 16: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள தொடுதிரை கணினி, கடந்த சில மாதங்களாக இயங்காததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர்


ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 16: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள தொடுதிரை கணினி, கடந்த சில மாதங்களாக இயங்காததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா அலுவலகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு தொடுதிரை கணினி மேடை அமைக்கப்பட்டது.
இந்த தொடுதிரை கணினியில் பொதுமக்கள் ரூ.2 நாணயத்தை போட்டு கிராமத்தின் பெயர், சர்வே எண் ஆகியவற்றை பதிவு செய்தால் அந்த குறிப்பிட்ட சர்வே எண் உள்ள இடம் யாருக்கு சொந்தமானது?, யார் பெயரில் பட்டா உள்ளது?, விவசாய நிலமா? அல்லது குடியிருப்புப் பகுதியா? என்பதை எளிதாக தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் அந்த குறிப்பிட்ட இடம் விவசாய நிலமாக இருந்தால் அந்த நிலத்துக்கு ஏரி பாசனமா? அல்லது மானாவாரி நிலமா? என்பதை கூட தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். இந்நிலையில் இந்த தொடுதிரை கணினி தாலுக்கா அலுவலகத்தில் வைக்கப்பட்டதால் பொதுமக்கள் ரூ.2 நாணயத்தை போட்டு தங்களுக்கு வேண்டிய தகவல்களை எளிதாக பெற்று வந்தனர்.
மேலும் பொதுமக்கள் யாராவது புதிதாக நிலங்கள் வாங்க வேண்டும் என்றாலும் குறிப்பிட்ட சர்வே எண்ணையும் கிராமத்தின் பெயரையும் பதிவு செய்தால் அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை தெளிவாக காட்டி விடுவதால் பொதுமக்கள் நில புரோக்கர்களிடம் ஏமாறுவது வெகுவாக குறைந்து வந்தது.
மேலும் பத்திரப் பதிவு செய்வதற்கும் இந்த தொடுதிரை கணினி பெரிதும் பயன்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த பல மாதங்களாக ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள இந்த தொடுதிரை கணினி செயல்படாமல் இருந்து வருகிறது.
இதனால் பழைய படியே பொதுமக்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களை தங்களுக்கு வேண்டிய தகவல்களுக்காக தேடி செல்ல வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தொடுதிரை கணினி இயங்காதது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள கணினி பிரிவு அலுவலர்களை கேட்டதற்கு, "இந்த தொடுதிரை கணினி அமைக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் யாரும் நிலம் சம்மந்தமாக வரும் சந்தேகங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்களை சந்திப்பதில்லை.
இதனால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனாலேயே சில கிராம நிர்வாக அலுவலர்கள் தொடுதிரை கணினியை பழுதுபடுத்திவிட்டனர்' என்றனர். மேலும் புதிய கருவியை விரைவில் வைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...