

திருவெறும்பூர்: திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள ஏரிகளின் தண்ணீர் வீணாவதைத் தடுக்க தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கண்ணாங்குடி ஊராட்சியில் உள்ளது செட்டிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சுற்றி செட்டிப்பட்டி பெரிய ஏரி, வெண்ணாய் பெரிய ஏரி,காந்தலூர் புது பெரிய ஏரி ஆகிய மூன்று ஏரிகள் உள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 1000 ஏக்கர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஏரிகள் புதுக்கோட்டை மாவட்ட எல்லைக்குள் இருந்தாலும், இவற்றின் நீரானது புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான திருவெறும்பூர் பகுதி கிராமங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்குப் பயன்படுகிறது.
இந்த ஏரிகளுக்கென வரத்து வாரிகள் கிடையாது. ஆனால், மழைக் காலங்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்யும் மழை நீர் பல இடங்களைக் கடந்து இந்த ஏரிகளை நிரப்புகிறது. பலத்த மழை பெய்யும் காலங்களில் இந்த ஏரிகளில் உடைப்பு ஏற்படுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.
இவ்வாறாக உடைப்பு ஏற்பட்டு, ஏரிகளின் நீர் முழுவதும் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரியை நிரப்புகிறது. பின்னர், அதை உடைத்துக் கொண்டு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து வாழவந்தான்கோட்டை, தேவராயநேரி, திருநெடுங்குளம் பகுதிகளைக் கடந்து அங்கிருந்து தஞ்சை மாவட்டம், சோழங்கம்பட்டி வழியாக விண்ணாற்றில் கலக்கிறது. இதனால், இந்த தண்ணீர் முழுவதும் எதற்கும் பயன்படாமல் வீணாகிறது.
மேலும், இந்த ஏரிகளில் ஏற்படும் உடைப்பால் திருவெறும்பூர் பகுதிகளான காந்தலூர், எலந்தைப்பட்டி, பழங்கனாங்குடி, தேனீர்பட்டி, அசூர், துவாக்குடி, வாழவந்தான்கோட்டை, தேவராயநேரி, திருநெடுங்குளம் போன்ற பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்கள் நீரில் மூழ்குகின்றன.
கடந்த 2008-ல் இந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டபோது, திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு, சாலையைப் பெயர்த்துக் கொண்டு நீர் சென்றது. ஆண்டுதோறும் பலத்த மழை பெய்யும் நேரங்களில் இதே நிலை தொடர்கிறது.
எனவே, மழை நீரைச் சேமிக்கும் வகையில், இந்த மூன்று ஏரிகளையும் இணைத்து தடுப்பணை கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து திருச்சி மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ஆர். நடராஜன் கூறியது:
இந்த ஏரிகளின் நீரை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் உள்ள காந்தலூர், எலந்தைப்பட்டி, சூரியூர், பழங்கானங்குடி, பூலாங்குடி, தேனீர்ப்பட்டி, அசூர், துவாக்குடி, தேவராயநேரி, வாழவந்தான்கோட்டை, திருநெடுங்குளம் ஆகிய பகுதி மக்களும், புதுக்கோட்டை மாவட்டத்துக்குள்பட்ட கண்ணாங்குடி, காயம்பட்டி, செட்டிப்பட்டி, தென்னாம்பட்டி, புதுப்பட்டி கிராம மக்களும், தஞ்சை மாவட்டத்திலுள்ள சில உள் கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். பலத்த மழை பெய்யும் காலங்களில் ஏரி தண்ணீர் பல கிராமங்களில் புகுந்து விடுகிறது. தடுப்பணை இல்லாததால், இப்பகுதி மக்கள் இந்த ஏரிகளின் பயனை முழுவதும் அடைய முடியாத நிலை உள்ளது.
எனவே, அனைத்து ஏரிகளையும் இணைத்து காந்தலூர் புது ஏரி அருகே தடுப்பணை கட்ட வேண்டும் என்று கடந்த 2005-ஆம் ஆண்டிலேயே அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
மேலும், காந்தலூர் அருகே புது ஏரியில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது என்றார் அவர்.
எனவே, தண்ணீர் வீணாவதைத் தடுத்து இந்த ஏரிகளை இணைத்து, தடுப்பணை கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று மாவட்ட எல்லைக் கிராம மக்களும் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.