முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!

தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:30 pm

தமிழ்நாட்டில் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று(ஏப்.9) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி என்னும் குடும்பத்தில், அதிமுக, பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை உருவாக்குவது என்ற ஒரே குறிக்கோளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.

தமிழ்நாடு மிகப்பெரிய ஆற்றல் கொண்ட மாநிலம், கலாசாரம், நமது பாரம்பரியம், மரபு ஆகியவற்றின் மீது நம் அனைவரையும் பெருமிதமடைய வைக்கிறது. ஆனால், கவலையளிக்கும் விதமாக திமுக என்னும் ஒரு குடும்பத்தால் தமிழ்நாடு அரசு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினின் சகோதரி கனிமொழி, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோரின் தலைமையில் தமிழ்நாட்டில் மிக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை வீழ்ச்சியடையச் செய்வதற்கு இந்த குடும்பத்தினர்தான் பொறுப்பு. தமிழ்நாட்டில் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை.

திமுகவின் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு எதுவும் சரியில்லை. எல்லாம் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது. ஒரே குடும்பத்தால் நடத்தப்பட்டு வந்த தி.மு.க. அரசு, ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டை பின்நோக்கி கொண்டு சென்றுள்ளது. போதைப் பொருள்களால் இளைஞர்கள் சீரழிந்துள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு, அரசு வேலைக்கு லஞ்சம் போன்றவற்றால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததற்கு எதிர்மாறாக சென்று மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலிலும்கூட திமுக அரசை எதிர்ப்பவர்களை அவர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்கிறார்கள். யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை உருவாக்க அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்துகின்றனர்.

ஸ்டாலின் குடும்பத்தினரின் தவறுகளை மறைப்பதற்காக விமர்சிக்கும் ஊடகங்களை கேபிள் டிவியில் இணைப்பை துண்டிக்கின்றனர்.கோவையில் அனைத்து துறைகளிலும் திமுக அரசு தோல்வியடைந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். கடனால் தமிழகம் திணறி வருகிறது. மோசமான நிதி நிர்வாகம் காரணமாக பலவீனமான மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. குடிக்கும் தண்ணீர் விநியோகமும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருகிறது. கோவையின் உயிர்நாடியாகக் கருதப்படும் கௌசிகா நதியும் திமுகவின் ஆட்சியில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது.

ரூ. 1,000 கோடியில் ஆழியார் கூட்டுக் குடிநீர் திட்டம், உக்கடம் குளம் மேம்பாடு ஆகியவை செயல்படுத்தப்படவில்லை. 75 சதவிகித வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை நாடு முழுவதும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் குறைத்துள்ளன. ஆனால், திமுக அரசு அதனைச் செயல்படுத்தவில்லை. இந்தியாவிலேயே அதிகளவில் கடன் வாங்குவதின் மூலம் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது” என்றார் பியூஷ் கோயல்.

Summary

Union Minister Piyush Goyal has stated that the DMK does not desire development in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.