சிங்கப்பூரில் ஒரு மாதம் ஓய்வு எடுக்க ரஜினி முடிவு
சென்னை, ஜூன், 10: சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கி முழுமையாக ஓய்வு எடுக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்து


சென்னை, ஜூன், 10: சிங்கப்பூரில் ஒரு மாதம் தங்கி முழுமையாக ஓய்வு எடுக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார்.
சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த்துக்கு, சிறுநீரக பாதிப்புக்கு உரிய டயாலிஸிஸ் சிகிச்சை நிறுத்தப்பட்டு நல்ல குணம் அடைந்துள்ளார்.
இதையடுத்து இன்னும் ஓரு வாரத்தில் மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையிலிருந்து சிங்கப்பூரில் வாடகைக்கு எடுக்கப்பட்ட "அபார்ட்மென்ட்டில்' தங்கி ஓய்வு எடுக்க அவர் முடிவு செய்துள்ளார். "ராணா' படத்தில் மீண்டும் நடிக்கும் அளவுக்கு அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு... சென்னையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி "ராணா' படப்பிடிப்பு தொடக்கத் தினத்தன்று, நடிகர் ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் இரண்டு முறை சிகிச்சை பெற்று நடிகர் ரஜினி வீடு திரும்பினார்.
எனினும், கடந்த மே 13-ம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறுநீரக பாதிப்புக்கு உரிய டயாலிஸிஸ் சிகிச்சை செய்யப்பட்டது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக கடந்த மே 27-ம் தேதி ஸ்ரீ ராமச்சந்திராவின் இரண்டு மருத்துவ நிபுணர்கள், குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்கு ரஜினி சென்றார்.
நடிகர் அமிதாப்பச்சனின் அறிவுரைப்படி, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசெபத் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் கடந்த மே 28-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவருக்கு தொடர்ந்து சிறுநீரக பாதிப்புக்கு உரிய டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. நடிகர் ரஜினியுடன் சிங்கப்பூர் சென்ற ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் நிபுணர்கள், அங்குள்ள மருத்துவ நிபுணர்களுடன் ரஜினியின் சிகிச்சை குறித்த விவரங்களை கலந்து ஆலோசித்து விட்டு ஜூன் முதல் வாரத்தில் சென்னை திரும்பி விட்டனர்.
உடல் நிலையில் முன்னேற்றம்-உறுதியானது எப்படி? தொடர் மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் நடிகர் ரஜினியின் உடல் நிலை முன்னேற்றத்தை சிங்கப்பூர் மருத்துவமனையின் மருத்துவர்கள் மதிப்பிட்டு வருகின்றனர். ரத்தப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவரது சிறுநீரகங்கள் செயல்பாட்டில் முன்னேற்றம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலில் வீக்கம் குறைந்து, இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. டயாலிஸிஸ் செய்யப்படும் நேரம் 6 மணி நேரத்திலிருந்து படிப்படியாக 4 மணி நேரமாகக் குறைந்து, இப்போது டயாலிஸிஸ் செய்யப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. அவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை தேவையில்லை என்று சிங்கப்பூர் டாக்டர்கள் கூறிவிட்டனர்.
அசைவ உணவுகூட சாப்பிடுகிறார்: சிறுநீரக பாதிப்புக்கு தொடர்ந்து நடிகர் ரஜினி மாத்திரைகள் சாப்பிடுவதால், மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் உணவு ஆலோசனை நிபுணரின் (டயட்டிஷியன்) அறிவுறுத்தல் அடிப்படையில், அதிக புரதச் சத்து இல்லாத உணவைச் சாப்பிடுகிறார்.
சிங்கப்பூரில் உள்ள ரஜினியின் குடும்ப நண்பர்கள் வேளைக்கு வேளை அவருக்கு இட்லி-சாதம் உள்ளிட்டவற்றையும் அசைவ உணவு வகைகளையும் சமைத்து அளித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தினமும் டி.வி. பார்த்துக் கொண்டு, மகிழ்ச்சியாக இருக்கிறார். ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ஆம்புலன்ஸில் பயணித்து, விமானம் மூலம் சிங்கப்பூர் சென்ற ரஜினி, அவரது வழக்கமான வேகமான நடையில் மருத்துவமனையிலிருந்து, இன்னும் ஒரு வாரத்தில் வெளியே வருவார் என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மீண்டும் ராணா படப்பிடிப்பில்...சிங்கப்பூரில் உள்ள "அபார்ட்மென்ட்டில்' ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா, அவர்களது மகன்கள் யாத்ரா-லிங்கா, மகள் சௌந்தர்யா ஆகியோர் தங்கியுள்ளனர். மருத்துவமனையிலிருந்து திரும்பிய
பிறகு, அதே அபார்ட்மென்டில் தனி அறை எடுத்து நடிகர் ரஜினியும் தங்கி முழுமையாக ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார்.
ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது முதலே அவரது குடும்பத்தினருக்கு ராணா படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் உதவி வருகிறார்.
இதையடுத்து, ஒரு மாதம் கழித்து நடிகர் ரஜினி சென்னை வந்து, ராணா படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.
திருஷ்டிதான் காரணமா?
உடல் நலம் பெற்றுள்ள ரஜினியின் புகைப்படம் எதுவும் வெளிவராமல் இருப்பதற்கு "திருஷ்டி' குறித்து அவரது குடும்பத்தினர் கவலைப்படுவதே காரணம் எனக் கூறப்படுகிறது.
சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து, கடந்த மே 27-ம் தேதி நடிகர் ரஜினி சிங்கப்பூர் சென்றபோது ரசிகர்களுக்காக ரஜினி பேசிய தகவலை, தனது செல்ஃபோனில் அவரது மகள் சௌந்தர்யா பதிவு செய்து இண்டர்நெட்டில் வெளியிட்டார்.
அதன் பிறகு ரஜினியின் உடல் நிலை குறித்து ஆதாரப்பூர்வ தகவல் எதையும் அவர்களது குடும்பத்தினர் ரசிகர்களுக்கு வெளியிடவில்லை.
ரஜினியின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு ஏராளமான ரசிகர்கள் பிரார்த்தனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உடல் நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நடிகர் ரஜினியின் இப்போதைய விடியோ பதிவு அல்லது அவர் புகைப்படத்தை வெளியிடுவதில் குடும்பத்தினர் தொடர்ந்து தயக்கம் காண்பித்து வருகின்றனர்.
இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டால், "திருஷ்டி' ஏற்பட்டு மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விடும் என குடும்பத்தினர் பயப்படுவதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...