எம்.பி.பி.எஸ்.: பொதுப் பிரிவு கட்-ஆஃப் 199.25
சென்னை, மே 9: தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை, செங்கல்பட்டு,


சென்னை, மே 9: தமிழகத்தில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான பொதுப் பிரிவு கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருச்சி, மதுரை, சேலம் உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீடு போக மொத்தம் 1,653 இடங்கள் உள்ளன. இதில் அனைத்துப் பிரிவினரும் (ஓ.சி.) போட்டி போடக்கூடிய பொதுப் பிரிவு இடங்கள் 512. இந்த கணக்கீட்டு அடிப்படையில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பொதுப் பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும்.
கடும் கட்-ஆஃப் போட்டி ஏன்? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்கள் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்றிலும் 65 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று, ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கியுள்ளனர்; ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 199.75-ஐ 71 பேரும், 199.50-ஐ 114 பேரும், 199.25-ஐ 121 பேரும் வாங்கியுள்ளனர். இதில் கட்-ஆஃப் மதிப்பெண் 199.75-க்கு மேல் 65 பேர், 199.50-க்கு மேல் 136 பேர், 199.25-க்கு மேல் 250 பேர் உள்ளனர். ஆக, எம்.பி.பி.எஸ். படிப்பில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 199.25 மதிப்பெண்ணுக்குள் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கட்-ஆஃப் என்ன? எம்.பி.பி.எஸ். படிப்பைப் பொருத்தவரை சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேருவதற்கே மாணவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். முதல் நாள் கலந்தாய்வு நடக்கும்போதே இந்த மூன்று கல்லூரிகளிலும் மொத்தம் உள்ள 352 எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பி விடும்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்களில், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைக் காட்டிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால், அனைத்துப் பிரிவினருக்கு உரிய இடங்களிலேயே பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விதிப்படி இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அனைத்துப் பிரிவினருக்கு உரிய 512 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்பட மொத்தம் 950 எம்.பி.பி.எஸ். இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ளன. அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு என தனியாக 438 ஒதுக்கீட்டு இடங்கள் (26.5 சதவீதம்) உள்ளன. எனினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் இந்த ஆண்டு (கடந்த ஆண்டு கட்-ஆஃப் 195.5) அதிகரித்து 197.25-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற பிரிவினருக்கு... எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 196-ஆகவும் (கடந்த ஆண்டு 194), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 195.25-ஆகவும் (கடந்த ஆண்டு 193.25) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 190.50-ஆகவும் (கடந்த ஆண்டு 188.50) தாழ்த்தப்பட்ட (அருந்ததியினர்) வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 186.75-ஆகவும் (கடந்த ஆண்டு 184.75), பழங்குடி வகுப்பினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 181.50-ஆகவும் (கடந்த ஆண்டு 179.50) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.டி.எஸ். படிப்பு: இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளதால், பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு பி.டி.எஸ். படிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பொதுப் பிரிவில் மாணவர்கள் சேருவதற்கு கட்-ஆஃப் மதிப்பெண் 193.75-ஆக இருந்தது; இந்த ஆண்டு இந்த கட்-ஆஃப் மதிப்பெண் 195.75-ஆக இருக்கும்.
மிக அதிக மதிப்பெண்: ""மாணவர்கள் மிகவும் நன்றாகப் படித்தால்தான் அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சிறந்த கல்லூரிகளில் சேர முடியும் என்பது இந்த ஆண்டு பிளஸ் 2 முடிவின் அடிப்படையிலான பி.இ.-எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண்கள் மூலம் தெளிவாகியுள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆவன செய்தல், புதிய மருத்துவக் கல்லூரிகளை விரைவில் தொடங்குவதன் மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்' என்றார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...