சுற்றுலா: பாரம்பரியத்தின் சின்னம் செட்டிநாடு

சுற்றுலா என்றதும் குளிர்ச்சியாகவும், பசுமையாகவும், தண்ணீர் சூழ்ந்த பகுதியாகவும் பெரும்பாலும் கண்டுகளித்துவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் அமையப்பெற்றதுதான் செட்ட
சுற்றுலா: பாரம்பரியத்தின் சின்னம் செட்டிநாடு
Updated on
3 min read

சுற்றுலா என்றதும் குளிர்ச்சியாகவும், பசுமையாகவும், தண்ணீர் சூழ்ந்த பகுதியாகவும் பெரும்பாலும் கண்டுகளித்துவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பாரம்பரியத்தை தெரிந்துகொள்ளும் வகையில் அமையப்பெற்றதுதான் செட்டிநாடு பாரம்பரியச் சுற்றுலாத் தலமாகும்.

 தமிழக சுற்றுலாத் தலங்களின் வரிசையில் உள்நாட்டவரையும், வெளிநாட்டவரையும் மிகவும் கவர்கின்ற செட்டிநாடு பாரம்பரிய சுற்றுலாத்தலம் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, கானாடுகாத்தான், கண்டனூர், சாக்கோட்டை, ஆத்தங்குடி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, அரியக்குடி போன்ற பகுதிகளை உள்ளடக்கியது.

 பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மனை தரிசித்துவிட்டு 85 கி.மீ. தூரத்திலும், திருச்சிராப்பள்ளி உச்சிப்பிள்ளையாரைத் தரிசித்துவிட்டு சுமார் 100 கி.மீ. தூரத்திலும் பயணித்து செட்டிநாடு சுற்றுலாத்தலத்தை அடையலாம். இந்த இரண்டு மார்க்கங்களிலும் அதிக அளவில் பஸ் வசதிகள் உள்ளன.

 செட்டிநாடு வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், செட்டியார் என்றழைக்கப்படும் நகரத்தார்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை இந்தப்பகுதியில் காணலாம். 19-ம் நூற்றாண்டில் கிழக்கு ஆசியாவில் செட்டியார் என்றழைக்கப்படும் நகரத்தார்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

 அப்போது அவர்கள் ஈட்டிய பொருள்களால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் அரண்மனை போன்ற அமைப்புகளில் பிரமாண்டமான வீடுகளை இப்பகுதியில் கட்டினர். இவ்வாறு 76 ஊர்களில் இவர்கள் வசித்து வருகிறார்கள்.

 இவர்கள் வாழும் பகுதி நகரம் போன்ற அமைப்பைப்பெற்றிருப்பதால் நகரத்தார்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.

 அரண்மனை போன்ற செட்டிநாடு வீடுகள்: செட்டிநாடு வீடுகள் 2 வீதிகளை இணைக்கும்வகையில் பெரிய அளவிலான 2 மனை இடங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

 முதல் வீதியில் முகப்பு என்றழைக்கப்படும் நுழைவு வாயிலைத் திறந்து உள்ளே சென்றால் பிரிவுகளாகத் திட்டமிடப்பட்டே உள்புற அமைப்பு உள்ளது. முன்புறத்தில் திண்ணை, பின்னர் வரவேற்பறை, அடுத்ததாக ஒரு அறை, பின்னர் வளவு என்றழைக்கப்படும் பகுதி உள்ளது.

 இந்த வளவுப்பகுதியில் மழைநீர் சேகரிக்கும் வகையிலும் இயற்கை சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வரும்வகையிலும் அமைத்திருக்கிறார்கள். இந்த வளவுப்பகுதியில்தான் சுபநிகழ்ச்சிகளை நடத்தவும் நகரத்தார்கள் பயன்படுத்திவருகிறார்கள்.

 வளவுப் பகுதியைச் சுற்றிலும் அறைகளையும் அமைத்து அதனை தேவைக்கு ஏற்பப்பயன்படுத்திக்கொள்கின்றனர். செட்டிநாடு வீடுகளை காண்பவர் கண்களை பிரமிக்கவைப்பது மரவேலைப்பாடுகள்தான்.

 அனைத்தும் நுணுக்கமான கலைநயத்துடனும் முகப்பு நிலைகளும், அழகிய மரத்தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் குளிருக்கும், வெயில் காலங்களில் வெப்பத்துக்கும் ஏற்ப ஒரே சீதோஷ்ண நிலையில் இவ்வீடுகளை கட்டியிருக்கிறார்கள் என்பதை நேரில் காணும்போது உணரலாம்.

 தரைப்பகுதியில் அழகிய பூ வேலைப்பாடுகளைக்கொண்ட ஆத்தங்குடி பூக்கள் என்ற டைல்ஸ் பதித்திருப்பதும் மனதுக்கு பிடித்தவையாகவே இருக்கும். வீட்டின் பின்கதவு அடுத்த வீதியில்தான் இருக்கும்.

 செட்டிநாடு ராஜா அரண்மனை: கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு ராஜா அரண்மனையைக் காண சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இங்கு அந்தக்காலத்தில் ராஜா பயன்படுத்திய பொருள்களை மியூசியமாக வைத்துப்பாதுகாத்து வருகிறார்கள். அன்றைய ராஜா பயன்படுத்திய செட்டிநாடு ரயில் நிலையப்பகுதியில் உள்ள காத்திருக்கும் சிறப்பு அறையும் உள்ளது.

 செட்டிநாடு கைவினைப்பொருள்கள் தயாரிப்பு: செட்டிநாடு கைவினைப்பொருள்களை தயாரிப்பதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டுள்ளது. மரவேலைப்பாடுகள், கைகளால் தயாரிக்கப்படும் ஆத்தங்குடி பூக்கள், வெள்ளிச்சாமான்கள் தயாரிப்பு, கைத்தறி கண்டாங்கிச்சேலை, பனை ஓலையில் தயாரிக்கப்படும் கூடைகள் (கொட்டான்), செட்டிநாடு தங்க நகைகள் தயாரிப்பு போன்றவற்றைப் பார்வையிடலாம்.

 கோவில்கள்: செட்டிநாடு நகரத்தார்களுக்கு குலதெய்வங்களாக வழிபட 9 நகரக் கோவில்கள் உள்ளன. இதில் சுமார் 1600 ஆண்டுகள் கொண்ட பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர் கோவில் உலக அளவில் பிரசித்திபெற்றது.

 இக்கோவில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களால் நகரத்தார்கள் வழிபாட்டுக்காகக் கட்டப்பட்டதாகும். சிவபெருமான் வீற்றிருக்கும் இக்கோயிலில் ஒரே பாறையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட கற்பக விநாயகர் முக்கிய மூர்த்தியாக எழுந்தருளியதால் பின்னாளில் பிள்ளையார்பட்டியானது.

 இங்கு விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டு தோறும் 10 நாள் விழாவாக மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை நிர்வகித்து வருபவர்கள் முற்றிலும் நகரத்தார்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

 சுற்றுலாப்பயணிகள் இக்கோவிலை காணும்போதும், கற்பக விநாயகரை தரிசிக்கும்போதும் புதியதொரு அனுபவத்தைப் பெறமுடியும்.

 மேலும் அருகில் குன்றக்குடித் தலம் அமைந்துள்ளது. குன்றின் மீது எழுந்தருளியிருக்கும் அருள்மிகு சண்முகநாதப்பெருமானை தரிசனம் செய்யலாம்.

 செட்டிநாடு பகுதியில் ஒரே வைணவக் கோவில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் காரைக்குடியிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் அமையப்பெற்ற அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோவிலுக்குச்சென்று பெருமாளை தரிசிக்கலாம்.

 செட்டிநாடு உணவுகள்: செட்டிநாடு சாப்பாடு மிகவும் புகழ்பெற்றது. செட்டிநாடு உணவு வகைகளில். சைவ உணவும், அசைவ உணவும் உண்டு. இந்த உணவுகளுக்கு சேர்க்கும் பொருள்களை கச்சிதமாக சேர்த்து மிகவும் சுவையாக தயாரிப்பதையே நகரத்தார்கள் விரும்புகிறார்கள்.

 அதுபோன்று செட்டிநாடு உணவு வகைகள் காரைக்குடி, கானாடுகாத்தான் பகுதியில் மேன்ஷன்களில் தயாரித்து வழங்குகிறார்கள். மிகவும் விரும்பும் வகையிலான உணவு வகைகள் பள்ளத்தூர் மட்டன் மசாலா, மதுரை மல்லி சிக்கன், அப்பு கருவாட்டுத்தொக்கு, விரால் மீன் வருவல், நாட்டுக்கோழி மிளகு வருவல் போன்றவையும், சைவ உணவில் உக்காரை, கந்தரப்பம், கருப்பட்டிப்பணியாரம், கவுனிஅரிசி, வெள்ளைப்பணியாரம், தேன்குழல் மற்றும் சீப்புச்சீடை போன்றவையும் முக்கிய உணவாகும்.

 தங்குமிடங்கள் விவரம்: ஸ்பிக் டீலர்ஸ் வெல்பர் அசோசியேஷன் பங்களா கானாடுகாத்தானில் உள்ளது. மேலும் கானாடுகாத்தான் செட்டிநாடு ராஜா வீடு பின்பகுதியில் செட்டிநாடு மேன்ஷன் என்ற நேர்த்தியான அறைகள் கொண்ட தங்குமிடமும், காரைக்குடியில் தி பங்களா என்ற தங்கும் இடமும் உள்ளன. இங்கு புகைப்படங்களையும், மர வேலைப்பாடுகளையும் பார்வையிடலாம். செட்டிநாடு உணவு வகைகளையும் தயாரித்து வழங்குகிறார்கள். மேலும் விசாலம் என்ற வணிக ரீதியிலான பாரம்பரிய ஹோட்டலும் கானாடுகாத்தானில் உள்ளது.

 தங்குமிடங்கள் குறித்த தொடர்புக்கான தொலைபேசி எண்கள் சுற்றுலாத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி ஸ்பிக் டீலர்ஸ் வெல்பர் அசோசியேஷன் கானாடுகாத்தான் தொ.பேசி: 04565-283297, தி. பங்களா காரைக்குடி தொ.பேசி: 04565-220221, செட்டிநாடு மேன்ஷன் கானாடுகாத்தான் தொ.பேசி: 04565-273080, விசாலம் கானாடுகாத்தான் தொ.பேசி: 22 24042211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். காரைக்குடியில் தனியார் தங்கும் விடுதிகளும் அதிக அளவில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com