மெய்யாலுமா..?
ஊழலே ஊழலை எதிர்த்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் விசித்திரத்தை எப்படி வர்ணிப்பது என்று கேட்கிறார்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலக ஊழியர்கள். நவம்பர் இரண்டாவது வாரத்தில் எல்லா அரசு அலுவலக


ஊழலே ஊழலை எதிர்த்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் விசித்திரத்தை எப்படி வர்ணிப்பது என்று கேட்கிறார்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலக ஊழியர்கள். நவம்பர் இரண்டாவது வாரத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்வது வழக்கம். துறையின் தலைவர் உறுதிமொழியை வாசிக்க, ஊழியர்கள் அதைத் திருப்பிச் சொல்வார்கள். நவம்பர் 12 விடுமுறை என்பதால் ஒரு நாள் முன்னதாகவே இந்தச் சடங்கு நடைபெற்றது. தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரின் பிடியில் சிக்கி வழக்குகளைச் சந்தித்து வரும் நிலையில் அவர்கள் ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது, ஊழியர்கள் சிரிப்பாய்ச் சிரித்தார்களாமே, மெய்யாலுமா?
கேரள அரசியல்வாதிகளே சற்று வித்தியாசமானவர்கள். புத்திசாலிகளும்கூட. தில்லி வந்திருந்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் யாரையோ சந்திக்க வந்திருந்தார். வழக்கம்போலக் கதர் வேஷ்டி, சட்டை. சட்டையில் கிழிசல் தைக்கப்பட்டிருந்தது. சில வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களும், தலைநகரப் பத்திரிகையாளர்களும், "அட, முதல்வராக இருந்தாலும் மனிதர் எவ்வளவு எளிமையாகவும், ஏழ்மையாகவும் இருக்கிறார்' என்று ஏதோ வேற்றுகிரகத்திலிருந்து வந்திறங்கிய மனிதனைப் பார்ப்பதுபோல அதிசயமாக அவரைப் பார்த்து வியந்துக் கொண்டிருந்தனர். "இதற்கு முன்னால் இதேபோலக் கிழிந்த சட்டையைத் தைத்துப் போட்டுக் கொண்டு தில்லியில் வலம்வந்த இன்னொரு முன்னாள் முதல்வர் இப்போது ராணுவ அமைச்சராகத் தலைநகரில் வலம் வருவது தெரிந்து அவரைக் காப்பி அடிக்கிறார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?' என்று கேட்டுச் சிரிக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர்கள். மெய்யாலுமா?
தன் விரலை எடுத்துத் தனது கண்ணையே குத்திக் கொள்ள வைக்கும் துன்பியல் நாடகத்தை மத்தியப் புலனாய்வுத் துறை அரங்கேற்றப் போகிறது என்கிறார்கள் 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சில வழக்குரைஞர்கள். முதல் குற்றப்பத்திரிகையில் 125 சாட்சிகளும், இரண்டாவது குற்றப் பத்திரிகையில் 28 சாட்சிகளும் அரசுத் தரப்பில் விசாரிக்கப்படுவார்கள். அரசுத் தரப்பு சாட்சிகளாக விசாரிக்கப்பட இருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் 60% பங்குதாரர் தயாளு அம்மாளும், இயக்குநர் அமிர்தமும் கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் எதிராக சாட்சி அளிக்க வேண்டுமாமே, மெய்யாலுமா?
சிவனே என்று முடங்கிக் கிடப்பதற்கு அவர் என்ன பரதேசிப் பண்டாரமா இல்லை திருமடத்து ஆண்டியா? ஆட்சிகள் மாறினாலும், காட்சியை மாற்றி அமைத்து அதிகார மையத்தில் தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ளும் வித்தையை முற்றாகக் கற்று வைத்திருக்கும் காக்கிச் சட்டைக்காரர், மீண்டும் தலைநகரத்துக்கே வந்துவிடுவார் என்று தகவல். ஆடல் வல்லானின் அருட்பார்வை இவர்மீது பட்டிருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக செயல்பட்டுத் துப்புத் துலக்குவதற்காகவும் புலனாய்வுத் துறையின் காவல் துறை அதிகாரியாக, இவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் கூறுகிறார்கள். சிவனும், வேலும் சேர்ந்தால், நாமெல்லாம் "சிவ, சிவா...'வாகி விடுவோம் என்று பயப்படுகிறதாம் காக்கிச் சட்டைப் பட்டாளம். மெய்யாலுமா?
எங்கள் கட்சி கீதையின் வழியில் நடக்கும் கட்சி என்று கூறிச் சிரிக்கிறார்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஆளும்கட்சியின் தலைமை நிலையத்தில் சந்தித்த பதவி பறிபோன மாவட்டச் செயலாளர்கள். பகவத் கீதை அப்படி என்னதான் கூறுகிறது?
""எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்''.
ஆளும் கட்சியின் பொறுப்பில் இருக்கும் பலரும் தங்கள் வீட்டு வரவேற்பறையில் கீதாசாரத்தை மாட்டி வைத்திருக்கிறார்களாமே, மெய்யாலுமா?
நெஞ்சை நிமிர்த்தி நடக்கும் மதுரைக்கார வாரிசு இப்போதெல்லாம் சென்னைப் பக்கம் வருவதையே தவிர்க்கிறாராம். மதுரையில் புறநகர்ப் பகுதியிலுள்ள இரண்டு தோப்புகளில்தான் தனது தொண்டர் படை சூழ அவர் சென்று தங்குவதாகத் தகவல். நெருங்கிய நண்பர்கள், நம்பிக்கைக்குரிய முன்னாள் அமைச்சர்கள் சிலர், ஆதரவாளர்களான சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் என்று குறிப்பிட்ட சிலர் மட்டுமே சந்திக்கிறார்கள். அடுத்த மக்களவைத் தேர்தலுடன் அரசியலிலிருந்தே ஒதுங்கி பெங்களூரூலிலோ வெளிநாட்டிலோ குடியேறிவிட்டால் என்ன என்றுகூட யோசிக்கிறாராமே, மெய்யாலுமா?
நீங்கள் மீண்டும் காவல் துறை இயக்குநராகப் போகிறீர்களாமே, போலோ, போலோ' என்று நண்பர்கள் அவரை நச்சரிக்கத் தொடங்கிவிட்ட அளவுக்கு, மாற்றத்திற்கான அறிகுறிகள் காவல் துறைத் தலைமை அலுவலகத்தில் தென்படத் தொடங்கிவிட்டன. இரட்டைப் பொறுப்பைப் பெயரளவில் சுமந்து கொண்டிருந்தாலும், இப்போதைய நிலவரப்படி இயக்கமே இல்லாமல் பொறுப்பில் இருப்பவர் முடக்கப்பட்டிருப்பதாகத்தான் தகவல். சமீபத்தில் நடந்த பல மாற்றங்கள் கையெழுத்துக்கு வந்தபோதுதான் அவருக்கே தெரியுமாம். பெருமாள் கோயிலில் பாஷியக்காரர் சந்நிதிக்குத் தரப்படும் மரியாதைதான் அவருக்குக் கிடைக்கிறதே தவிர மூலவர் பொன்னுக்கும், மாணிக்கத்துக்கும் அதிபதிதான் என்று பரவலாகப் பேசப்படுகிறதே, மெய்யாலுமா?
கட்சிக்காரர்கள் அவரை ராஜாவையோ இந்திரனையோ பார்ப்பது போலத்தான் பார்க்கிறார்கள். சிற்சில பாக்கங்களில் மட்டுமே அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டுமல்ல, பெருவாரியான நகராட்சிகளையும், பஞ்சாயத்து யூனியன்களையும் திமுக கைப்பற்றியும் இருக்கிறது. முக்கியமான நகராட்சிகளைக் கோட்டை விட்டாலும்கூட கோட்டையில் இவரது செல்வாக்குக் குறையாததன் மர்மம் என்ன என்று தலையைப் பிய்த்துக் கொள்கிறார்களாமே ரத்தத்தின் ரத்தங்கள். மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...