அரியலூர் : தமிழகத்தில் "ஆதார்' அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தாலும், அந்த அட்டையின் பயன்பாடு, அதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடம் சென்றடையாத நிலையே உள்ளது.
இந்தியாவில் குடியிருப்பவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் வகையில், அவர்களின் பெயர், வசிப்பிட முகவரி, பயோ மெட்ரிக் (கைரேகை பதிவு) போன்ற விவரங்கள் பெற்று 12 இலக்க அடையாள எண் கொண்ட "ஆதார்' அட்டையை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கும் வகையில், இந்திய அரசு பிரத்யேக அடையாளத்துக்கான தேசிய ஆணையத்தை உருவாக்கி நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், "ஆதார்' அட்டைக்கான பணிகள் தமிழகத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல் தொடங்கியது. மத்திய அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, தமிழக அஞ்சல் வட்டம் ஆகியவை இணைந்து இப்பணியை தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் "ஆதார்' அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு நடைபெறுவதற்காக தலைமை மற்றும் முக்கிய அஞ்சல் நிலையங்கள் என 38 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த இடங்களில் பதிவுப் படிவம் வழங்கப்படுகிறது.
அந்த பதிவுப் படிவத்தை பெறுபவர்கள் பாஸ்போர்ட், நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு), குடும்ப அட்டை, தேர்தல் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு அளித்த புகைப்படம் உள்ள அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அடையாள அட்டை, அரசு ஒப்புதலுடன் இயங்கும் கல்வி நிறுவனம் அளித்த புகைப்படம் உள்ள அடையாள அட்டை, ஏ.டி.எம். அட்டை, புகைப்படம் உள்ள கடன் அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, விவசாயிகளுக்கான அடையாள அட்டை, அஞ்சல் துறையால் வழங்கப்பட்ட புகைப்படம் உள்ள அடையாள அட்டை உள்ளிட்ட 17 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை புகைப்பட ஆவணமாக அளிக்க வேண்டும்.
இதேபோல, மின் வாரியம், குடிநீர் வாரியம், தொலைபேசித் துறை வழங்கிய ரசீது, சொத்து வரி ரசீது (3 மாதங்களுக்குள்பட்டது), வங்கி சார்பில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய முகவரிச் சான்றிதழ், வருமான வரி மதிப்பீடு சான்றிதழ், வாகனப் பதிவுச் சான்றிதழ், சொத்து விற்பனைப் பத்திரம், வாடகை, குத்திகை பத்திரம் மற்றும் புகைப்பட ஆவணமாக அளிக்க வேண்டும் எனக் கூறப்பட்ட 17 வகையான ஆவணங்கள் என மொத்தமாக 28 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை முகவரி சான்றாக பதிவு செய்பவர்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்பவர்கள் பதிவுப் படிவத்துடன் புகைப்படம் உள்ள ஆவணம் மற்றும் முகவரிக்கான ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களை அளிக்க வேண்டும். நகல் சரிபார்க்கப்பட்ட பின்னர், அசல் ஆவணங்கள் உடனடியாகப் பதிவுதாரரிடம் திருப்பி வழங்கப்படும். புகைப்படம் மற்றும் முகவரிச் சான்று இல்லாத நிலையில், "ஆதார்' தனிப்பட்ட அடையாள அட்டை பெற்ற குடும்பத் தலைவர் அல்லது வேறு நபர் அறிமுகப்படுத்தும் வசதியும் உள்ளது. பதிவு செய்பவர்களுக்கு 14 இலக்கங்கள் கொண்ட ஒப்புகை ரசீது வழங்கப்படும். பதிவு செய்தவர்களுக்கு 12 இலக்கங்கள் கொண்ட ஆதார அடையாள அட்டை எண் அஞ்சல் மூலமாக பிரத்யேக அடையாளத்திற்கான தேசிய ஆணையத்தால் அனுப்பி வைக்கப்படும்.
மத்திய அரசின் திட்டமாக இது இருந்தாலும், மாநில அரசின் சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் இத் திட்டத்தின் பயன், எப்படி விண்ணப்பிப்பது போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
விளம்பரம் உதவும்: போலியோ சொட்டு மருந்து புகட்டப்படும் காலத்தில் தொடர்ந்து வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விளம்பரப்படுத்துவது போன்று, ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கான விழிப்புணர்வுப் பணிகளை அரசு மேற்கொள்ளலாம்.
இல்லையெனில், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாக மேற்கொள்ளலாம்.
சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில்... வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது, தங்களின் பெயர் பட்டியலை இருப்பதை உறுதி செய்ய சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது போன்று, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஆதார் அட்டைக்காக சிறப்பு கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, அந்த அட்டை பெறுவதன் அவசியம், விண்ணப்பிப்பது எப்படி, எங்கே விண்ணப்பிக்க வேண்டும், ஆவணங்களாக எதை வழங்க வேண்டும் என்பன போன்ற விவரங்களை அறிவிக்கலாம் அல்லது கிராமப்புறங்களில் உள்ள இளைஞர் மன்றங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவும் விழிப்புணர்வுப் பணியை மேற்கொள்ளலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆதார் அடையாள அட்டை பெறுவது குறித்து தற்போது செய்யப்பட்டுள்ள அறிவிப்பு பலருக்கும் குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே, ஆதார் அட்டை பெறுவது குறித்த விழிப்புணர்வுப் பணியை மாநில அரசு அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.