தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தமிழக பக்தர்களை கவர்ந்துள்ள சபரிமலை இணையதளம்

சென்னை, நவ. 26: தமிழகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது கேரள மாநில காவல்துறை உருவாக்கியுள்ள www.sabarimala.kerala police.gov.in  என்ற இணைய தளம்.  இந்த இணையதளம் சபரிமலை யாத்திரைய

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:37 pm

சென்னை, நவ. 26: தமிழகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி பக்தர்களை பெரிதும் கவர்ந்துள்ளது கேரள மாநில காவல்துறை உருவாக்கியுள்ள www.sabarimala.kerala police.gov.in  என்ற இணைய தளம்.

 இந்த இணையதளம் சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு உடனக்குடன் தகவல்களைத் தருகிறது. மேலும் இந்த இணையதளத்தில் ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தகவல்கள் உள்ளன.

 இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல பூஜையின்போது அதிகமாகச் செல்லும் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு இந்த இணையதளம் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

 இந்த ஆண்டு மண்டல கால பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதம் முதல் நாள் (நவம்பர்.17) முதலே பக்தர்கள் வருகையின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

 ஆனால் இம்முறை கேரள காவல்துறை இணையதளத்தில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அட்வான்ஸ் கியூ பிளேஸ்மென்ட் கூப்பன் ((Advance Q-Placement Coupon) திட்டம் பக்தர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 இந்தத் திட்டத்தை பயன்படுத்தி பக்தர்கள் தங்களுடைய பெயர் மற்றும் முகவரியுடன் புகைப்படத்தையும் இணையத்தில் பதிவு செய்யவேண்டும்.

 முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் கூப்பன் ஆகியவற்றுடன், பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக சென்றால் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்தில் பதினெட்டாம் படியை ஏறி சுவாமி தரிசனம் செய்து விடலாம்.

 காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை இந்த முன்பதிவு வசதியைப் பெற்று சுவாமி தரிசனம் செய்யலாம். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம். இந்தத் திட்டத்துக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்ககப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சம்.

 வாகனங்கள் நிறுத்துமிடம்: சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு வாகனங்களை எங்கெங்கு நிறுத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையும் இந்த இணையதளத்தில் அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது.

 சபரிமலைக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமான நிலக்கல், சக்குபாலம்-1, சக்குபாலம்-2, திரிவேணி, ஹில்டாப் ஆகிய இடங்களில் எவ்வளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவல்களும் உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது.

 வரிசையின் நீளம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பம்பையில் இருந்து சென்றால் எவ்வளவு நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்ற தகவலும் இணையத்தில் வழங்கப்படுகிறது. "பம்பையில் இருந்து பயணத்தை காலை 6 மணி அளவில் தொடங்கினால், பதினெட்டாம் படியை 8.05 மணிக்கு அடையலாம்' என்ற அறிவிப்பு அவ்வப்போது இணையத்தில் வந்து கொண்டே இருக்கும். இது தொலைதூரத்தில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

 மேலும் பக்தர்கள் மலை ஏறும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த அறிவிப்பும் வந்துகொண்டே இருக்கும்.

 இது குறித்து அஷோக்குமார் (பக்தர்) கூறியது: "நான் இந்த ஆண்டுதான் முதல்முறையாக சபரிமலைக்குச் சென்றேன். என்னுடைய செல்போனில் இணையதளங்களைப் பார்க்கும் வசதியுள்ளது. இதனால் கேரள மாநிலக் காவல்துறை வடிவமைத்துள்ள சபரிமலை குறித்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இந்த இணையத்தைப் பயன்படுத்தி தரிசனத்துக்கு முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசித்தேன். மேலும் இந்த இணையத்தில் சபரிமலை தரிசனச் செயல்பாடுகள் குறித்து உடனுக்குடன் வெளியான முன்னறிவிப்புகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. குறிப்பாக பக்தர்கள் நடக்க வேண்டிய தூரம், அதற்கான நேரம், ஓய்வு எடுக்கும் நேரம் போன்றவை குறித்தத் தகவல்கள் மலைப்பயணம் மேற்கொண்டபோது மிகவும் பயனுள்ளதாக இருந்தன' என்றார்.

 இந்தப் பிரத்யேக இணையதளத்தில் இவற்றைத் தவிர கேரள மாநிலக் காவல்துறை சபரிமலையில் ஆற்றும் பணிகள், பக்தர்கள் மலையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள், தொலைந்த பொருள்கள் குறித்தப் புகார்கள் தெரிவிக்கும் இடங்கள், வானிலை நிலவரங்கள், சபரிமலை சன்னிதானத்தை அடைவது எப்படி, மருத்துவச் சேவைகள், அவசரத் தேவைக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 இதனால் கேரள மாநிலக் காவல்துறை வடிவமைத்துள்ள இந்த இணையதளம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் அனைத்து பக்தர்களும் அவசியம் பார்க்க வேண்டிய வகையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.