வாச்சாத்தி: அனைவரும் குற்றவாளிகள்

வாச்சாத்தியில் நடைபெற்ற பாலியல் மற்றும் வன்கொடுமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு...
வாச்சாத்தி: அனைவரும் குற்றவாளிகள்

தருமபுரி, செப். 29: வாச்சாத்தியில் நடைபெற்ற பாலியல் மற்றும் வன்கொடுமை தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட வனத் துறை, காவல் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த 269 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இதில், 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். குமரகுரு வியாழக்கிழமை தீர்ப்பளித்தார்.

269 நபர்களில், அவரவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அதிகபட்சமாக 3 ஆண்டுகளும், குறைந்தபட்சமாக 9 மாதங்களும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றவர்களில் 54 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேர்களும் ஒவ்வொரு பிரிவின் கீழ் தண்டனை பெற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் (இப்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்) சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ளது பேதாம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட சிறிய கிராமம் வாச்சாத்தி. 1992-ல் இங்கு 290 குடும்பங்களைச் சேர்ந்த 655 பேர் இருந்தனர்.

இதில், 183 குடும்பங்கள் மலையாளி எனும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

இக் கிராமத்தில், 20.6.1992 அன்று, சந்தனக் கட்டைகள் உள்ளிட்ட வனப் பொருள்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக சோதனை நடத்தப்பட்டது.

இச் சோதனையின்போது, பெண்கள், குழந்தைகள் உள்பட கிராம மக்கள் பலர் தாக்குதலுக்கும், சித்திரவதைக்கும் ஆளானதாகவும், கிராமத்துப் பெண்கள் 18 பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச் சம்பவத்தில் தொடர்புடையதாக 5 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட 155 வனத் துறையினர், ஒரு டி.எஸ்.பி. உள்பட 108 போலீஸôர், ஒரு தாசில்தார் உள்பட 6 வருவாய்த் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1995-ல் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் 1996-ம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டமாக இருந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்த அமர்வு நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டு வரை வழக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், சி.பி.ஐ. மற்றும் எதிர்தரப்புவாதங்கள் முடிந்து செப்டம்பர் 26-ல் தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது.

ஆனால், அப்போது குற்றம் சுமத்தப்பட்ட நபர்களில் மூவர் ஆஜராகாததால் தீர்ப்பு செப்டம்பர் 29-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிற்பகல் 2.10 மணிக்கு அனைவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி எஸ். குமரகுரு, தீர்ப்பை பின்னர் அறிவிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.

மீண்டும் பிற்பகல் 3.30 மணிக்கு நீதிமன்றம் கூடியபோது, 269 பேர்கள் மீது புகார் கூறப்பட்ட பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் தண்டனையை அறிவித்தார். அதன், விவரம்:

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3(2) (5)-வனத்துறையைச் சேர்ந்த பி. அருணாசலம், டி. ஆறுமுகம், பி. ராஜகோபால், டி. ராஜமாணிக்கம், கே. கோவிந்தன், பி. ரத்னவேலு, ஏ. வேடியப்பன், பி. சிதம்பரம், எம். பெருமாள், கே. அழகிரி, சி. காளியப்பன், வி. ஜானகிராமன் ஆகிய 12 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், இந்த 12 பேருக்கு பாலியல் வன்கொடுமை (376) தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவை தவிர மேலும் சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல், பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வனத் துறையைச் சேர்ந்த ஏ. பெரியநாயகம், கே. பச்சியப்பன், ஆர்.ஜி. பெருமாள், எல். பழனி, கே. மாதையன் ஆகிய 5 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பல பிரிவுகளிலும் தண்டனை பெற்றுள்ளனர். இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் எதிரியான அப்போதைய முதன்மை வனப் பாதுகாப்பு அலுவலரான ஹரிகிருஷ்ணனுக்கு (ஐ.எப்.எஸ்.) 2 பிரிவுகளில் (எஸ்.சி., எஸ்.டி. சட்டம்) 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 201 ஐ.பி.சி. பிரிவின் கீழ் 9 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு ஐ.எப்.எஸ். அதிகாரியான (2-வது எதிரி) பி. முத்தையனுக்கு 342 ஐ.பி.சி. பிரிவின் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 3-வது எதிரியும், ஐ.எப்.எஸ். அதிகாரியுமான எல். நாதனுக்கு 4 பிரிவுகளில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, 147 ஐ.பி.சி. பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல், மேலும் 4 பிரிவுகளில் தலா ஓராண்டு கடுங்காவல் தண்டனை ஆகியவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

நான்காவது எதிரியும், ஐ.எப்.எஸ். அதிகாரியுமான எஸ். பாலாஜிக்கு 3 பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல், 147 ஐ.பி.சி. பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல், 3 பிரிவுகளில் தலா ஓராண்டு கடுங்காவல் ஆகியவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்து.

சம்பவத்தின்போது அரூர் வட்டாட்சியராக இருந்தவரும், 264-வது எதிரியுமான பி. சதாசிவத்துக்கு ஐ.பி.சி. 147-வது பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல், 2 பிரிவுகளில் தலா ஓராண்டு கடுங்காவல் விதிக்கப்பட்டுள்ளது. அப்போது அரூர் டிஎஸ்பி-யாக இருந்த வி. நல்லுசாமி தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் இறந்துவிட்டதால் வழக்கு முடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 269 பேருமே ஏதாவது ஒரு பிரிவின் கீழ் தண்டனை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

198 பேருக்கு உடனடி சிறை இல்லை!

வாச்சாத்தி வழக்கில் 269 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டாலும் 17 பேர்கள் மட்டுமே சிறையில் அடைக்க போலீஸôர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் மீது பாலியல் குற்றம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் (5 பேருக்கு 7 ஆண்டு) வரை அளிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள 198 பேர்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள், குறைந்தபட்சமாக 9 மாதங்கள் என்ற அடிப்படையில் கடுங்காவல் தண்டனையை ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் அவரவர் குற்றத் தன்மைக்குத் தகுந்தபடி அறிவிக்கப்பட்டது. அனைத்தும் ஏக காலத்தில் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர்கள் 36 மாதங்களுக்குள்ளான தண்டனைப் பெற்றிருப்பதால் ஜாமீனில் செல்ல அனுமதிக்குமாறு வழக்குரைஞர்கள் கோரினர். இதையடுத்து, 198 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. எனவே, இவர்கள் சிறைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com