கோவையில் குறைந்துவரும் விவசாய சாகுபடி பரப்பு
கோவை: கோவை மாவட்டத்தில், 2005-06ம் நிதியாண்டைவிட 2009-10-ம் ஆண்டில் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு விவசாய நிலத்தின் பரப்பளவு குறைந்துவருவதே காரணம். கோவை மாவட்டத்தில் மொத்த விவசாயப் பரப்பளவு ஒர


கோவை: கோவை மாவட்டத்தில், 2005-06ம் நிதியாண்டைவிட 2009-10-ம் ஆண்டில் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. இதற்கு விவசாய நிலத்தின் பரப்பளவு குறைந்துவருவதே காரணம்.
கோவை மாவட்டத்தில் மொத்த விவசாயப் பரப்பளவு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர். இதில், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள் பி.ஏ.பி. பாசனம், கிணற்றுப் பாசனம் உள்ளிட்ட இறவைப் பாசன வசதி கொண்டவை. 64 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு வானம் பார்த்த மானாவாரி நிலங்கள்.
நெல் சாகுபடி குறைந்தது: 2005-06-ம் நிதியாண்டில் 3,488 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. பின்னர், இப்பயிரின் சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்து, 2009-10-ல் 2,816 ஹெக்டேராகிவிட்டது.
அதேபால, சிறுதானியங்களான சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, பயறு வகைகளான உளுந்து, துவரை, மொச்சை, பாசிப்பயறு, கொள்ளு, நறுமணப் பயிர்களான மஞ்சள், மிளகாய் உள்ளிட்டவற்றின் சாகுபடி பரப்பளவும் குறைந்துள்ளது.
இம்மாவட்டத்தில், 3,100 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்ட நிலையில், 2009-10ம் ஆண்டில் 1,800 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பழவகை உற்பத்தி அதிகரிப்பு: 2005-06-ம் ஆண்டில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பழவகைகள், 2009-10ல் 13 ஆயிரம் ஹெக்டேராக பரப்பளவு அதிகரித்துள்ளது. காய்கறிகள் சாகுபடி 7,800 ஹெக்டேர் என்பதில் இருந்து 6,500 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
பருத்தி சாகுபடி வீழ்ச்சி: 4,400 ஹெக்டேர் பரப்பளவாக இருந்த பருத்தி சாகுபடி தற்போது மிகவும் குறைந்துவிட்டது. 2009-10ம் ஆண்டில் ஆயிரம் ஹெக்டேரில் மட்டும் பருத்தி சாகுபடி நடந்தது.
எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, சூரியகாந்தி, எள், தென்னை சாகுபடி, 87 ஆயிரம் ஹெக்டேராக இருந்தது, 85 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இதில், நிலக்கடலை சாகுபடி பாதியாகக் குறைந்துவிட்டது.
கோவை மாவட்டத்தில் பெருகிவரும் தொழில் வளர்ச்சி காரணமாக வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் விவசாய நிலங்கள் மாற்றப்படுகின்றன. விவசாய விளைபொருள் சாகுபடிப் பரப்பளவு கணிசமாகக் குறைந்து வருகிறது.
இது தொடர்பாக அரசும், வேளாண்மைத் துறையும் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், உணவுக்குத் திண்டாடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம்.
விவசாய சாகுபடி பரப்பளவு விவரம்
பயிர் ரகம் 2005-06 2009-10
(ஹெக்டேர்) (ஹெக்டேர்)
நெல் 3,488 2,816
சிறுதானியங்கள் 54,000 41,000
பயறு வகைகள் 14,400 12,600
கரும்பு 3,100 1,800
பருத்தி 4,400 1,000
எண்ணெய்
வித்துகள் 87,000 85,000
நறுமணப்
பொருள்கள் 7,400 7,000
காபி, தேயிலை 13,700 13,760
பழ வகைகள் 10,000 13,000
காய்கறிகள் 7,800 6,500
மலர் வகைகள் 955 800
காரணம் என்ன? விவசாயிகள் கருத்து
விவசாய உற்பத்தி பாதிப்பு குறித்து விவசாயி பரமசிவம் கூறியது:
விவசாய விளைபொருள் உற்பத்தி குறைந்ததற்கு முக்கிய காரணம் கூலிஆள் பற்றாக்குறைதான். கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியில், கிராமத்தில் உள்ள விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கின்றனர். இதனால், அவர்கள் விவசாய வேலைக்கு வருவதில்லை.
அடுத்ததாக, விவசாயக் கூலி உயர்வு, இடுபொருள் விலை உயர்வு காரணமாக விளைபொருள் உற்பத்திச் செலவு கட்டுபடியாவதில்லை. இதனால், சிறுதானியப் பயிர்கள், பருத்தி, நிலக்கடலை சாகுபடி கடந்த 15 ஆண்டுகளாக படிப்படியாகக் குறைந்துள்ளது.
முன்பு கோவை மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடி அதிகமாக இருந்தது. திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கூலித் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கோவைப் பகுதிக்கு வந்து, நிலக்கடலை அறுவடைப் பணியில் ஈடுபடுவார்கள். அந்த நிலை இன்று மாறி விட்டது. தற்போது, பருத்தி, நிலக்கடலை சாகுபடியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
காணாமல் போன சிறுதானிய உற்பத்தி: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் வழுக்குப்பாறை பாலு கூறியது:
சிறுதானியங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாவட்டமாக முன்னர் கோவை மாவட்டம் இருந்தது. தற்போது சிறுதானியம், பயறு வகை உற்பத்தி அழிந்து விட்டதென்றே சொல்லலாம்.
ஆள்பற்றாக்குறையால் விவசாயிகள், தங்கள் விளைநிலங்களை விற்று வருகின்றனர். தங்கள் நிலத்தை பலர் தரிசாகப் போட்டுவிடுகின்றனர். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களை விவசாயப் பணிக்குப் பயன்படுத்தும் வகையிலான திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...