தேங்காய் விலை வீழ்ச்சி

பேராவூரணி: காவிரி நீரின்றி குறுவை சாகுபடி பொய்த்துள்ள நிலையில், தேங்காய் விலையும் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். நாட்ட
தேங்காய் விலை வீழ்ச்சி
Published on
Updated on
2 min read

பேராவூரணி: காவிரி நீரின்றி குறுவை சாகுபடி பொய்த்துள்ள நிலையில், தேங்காய் விலையும் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால், காவிரி டெல்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனர். நாட்டில் கேரளத்துக்கு அடுத்தபடியாக, தேங்காய் அதிகமாக விளையும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி நதிநீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா விவசாயிகள், நெல் சாகுபடிக்கு ஆற்றுப் பாசனத்தை நம்ப முடியாத நிலையில், பெரும்பாலானோர் தென்னை விவசாயத்திற்கு மாறினர்.

இந்த நிலையில், தேங்காய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளால் அவர்கள் தற்போது கவலை அடைந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேங்காய் என்ன விலைக்கு விற்றதோ அதே விலையில்தான் தற்போதும் விற்கப்படுகிறது.

ஆனால், தென்னைக்கான இடுபொருட்கள், பாசனம் செய்வதற்கான செலவினங்கள், தொழிலாளர்கள் ஊதியம் உள்ளிட்டவை தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய அரசின் தவறான இறக்குமதி கொள்கையே காரணம் என கூறப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து தேங்காயை எண்ணெய் பிழியாமல் புண்ணாக்கு என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இதற்கு வரி கிடையாது. அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட புண்ணாக்குகளை இங்குள்ள ஆலைகளில் இட்டு எண்ணெயாகப் பிழிந்து குறைந்த விலைக்கு விற்கின்றனர். இதனால், இங்கு உற்பத்தியாகும் தேங்காய்க்கு விலை கிடைப்பதில்லை.

மத்திய, மாநில அரசுகள் தேங்காய் விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆயிரக்கணக்கான டெல்டா விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவர்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் ஆ. பழனிவேல் கூறியது: தென்னை விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொப்பரை விலையை உயர்த்துவது, உரித்த தேங்காயை அரசு கொள்முதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பா. பாலசுந்தரம் கூறியது:மும்பை, சென்னை, கோவை, பொள்ளாச்சி போன்ற நகரங்களில் உள்ள பெரிய தேங்காய் வியாபாரிகள் நாடு முழுவதும் உள்ள சில்லறை வியாபாரிகள் மூலம் தேங்காயை கொள்முதல் செய்கின்றனர். இவற்றை ஓரிடத்தில் திரட்டி, வெளிநாட்டு இறக்குமதி, உள்நாட்டு தேங்காய்களின் இருப்பு ஆகியவற்றை கணக்கிட்டு, தாமாகவே விலையை நிர்ணயிக்கின்றனர்.

இதனால், விலையேற்றமும், கடுமையான விலை இறக்கமும் ஏற்படுகிறது. இவர்களை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காய் புண்ணாக்கு இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டும் அல்லது அதற்கு கடுமையாக வரிவிதிக்க வேண்டும். தமிழக அரசு மற்ற பயிர்களுக்கு வழங்குவதுபோல ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றார். தற்போதைய சூழலில், ஒரு தேங்காய்க்கான உற்பத்தி செலவு ரூ. 8 அளவுக்கு வருகிறது. விற்பனை விலையோ 3 அல்லது 4 ரூபாயாக உள்ளது. எனவே, தென்னை சாகுபடியை காப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com