/

புதிய மின் இணைப்பு உள்ளிட்ட பிற சேவைக் கட்டணங்களை உயர்த்த மின் வாரியம் முடிவு?

சென்னை, ஆக. 4: புதிய மின் இணைப்புக்கான கட்டணம், பழுதடைந்த மீட்டர் பெட்டியை மாற்றுவதற்கான கட்டணம், மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் என மின் பயன்பாட்டுக் கட்டணம் அல்லாத பிற கட்டணங்கள் அனைத்தையும் பன்மடங்கு

Updated On :26 செப்டம்பர் 2012, 5:38 am

சென்னை, ஆக. 4: புதிய மின் இணைப்புக்கான கட்டணம், பழுதடைந்த மீட்டர் பெட்டியை மாற்றுவதற்கான கட்டணம், மீட்டரை மாற்றுவதற்கான கட்டணம் என மின் பயன்பாட்டுக் கட்டணம் அல்லாத பிற கட்டணங்கள் அனைத்தையும் பன்மடங்கு உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கான பரிந்துரையை மின் வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. ஏற்கெனவே பன்மடங்கு மின் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு, பிற சேவைகளுக்கான கட்டண உயர்வு அதிர்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிற கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை, கடுமையான நிதி நெருக்கடியிலிருந்து மின் வாரியம் மீள, இந்த கட்டண உயர்வு அவசியமாகிறது என்றனர்.

மின் வாரியம் சமர்ப்பித்துள்ள இந்த கட்டண உயர்வுக்கான உத்தேச பட்டியலின்படி, புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணமும், பழுதடைந்த அல்லது அளவீட்டை சரியாக காண்பிக்காத மீட்டர்களை மாற்றுவதற்கான கட்டணமும் 3 மடங்குக்குமேல் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இணைப்புக் கட்டணம் 4 மடங்கு உயர்த்த திட்டம்: குடியிருப்புக்கான புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை ஒருமுனை இணைப்புக்கு ரூ. 250-லிருந்து ரூ. 900-ஆக உயர்த்த மின் வாரியம் பரிந்துரைத்துள்ளது.

மும்முனை இணைப்புக்கு (18.6 கிலோ வாட்டுக்கு குறைவான) ரூ. 500-லிருந்து ரூ. 1,600 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. மும்முனை இணைப்பு (18.6 கிலோ வாட்டிலிருந்து 50 கிலோ வாட் வரை) ரூ. 3000-ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மும்முனை இணைப்பு (50 கிலோ வாட்டிலிருந்து 112 கிலோ வாட் வரை) ரூ. 10,000 ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

இதுபோல், குடிசைகள், அரசு மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட பிற அமைப்புகளுக்கான புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மீட்டர் வாடகை: நுகர்வோர் சொந்தமாக வாங்கும் மீட்டர்களுக்கு புதிதாக மீட்டர் வாடகை என்ற திட்டத்தை மின் வாரியம் அறிமுகம் செய்ய பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, குடியிருப்புகளுக்கான ஒருமுனை மீட்டர்களுக்கு மாதம் ரூ. 10 வாடகை வசூலிக்கப்படும். மும்முனை மீட்டர்களுக்கு ரூ. 40 வசூலிக்கப்படும். "சிடி' மும்முனை மீட்டர்களுக்கு ரூ. 50 வாடகை வசூலிக்கப்படும்.

பழுதடைந்த மீட்டர் பெட்டிகள் மற்றும் மீட்டரை மாற்ற...பழுதடைந்த மீட்டர் போர்டு அல்லது பெட்டிகளை மாற்ற வீடுகளுக்கான ஒரு முனை இணைப்புக்கு இப்போது வசூலிக்கப்படும் ரூ. 150 கட்டணத்தை ரூ. 500-ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுபோல், மும்முனை மீட்டர் இணைப்புக்கு இப்போதுள்ள ரூ. 150 கட்டணத்தை ரூ. 750 ஆகவும், மும்முனை (18.6 கிலோ வாட் முதல் 50 கிலோ வாட் வரையுள்ள) இணைப்புக்கு ரூ. 150-லிருந்து ரூ. 2,000 ஆகவும் உயர்த்த பரிந்துரைத்துள்ளது.

பழுதடைந்த எல்டிசிடி பெட்டியை மாற்ற இப்போதுள்ள கட்டணமான ரூ. 150-லிருந்து ரூ. 2,600-ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுபோல், மின் பயன்பாடு அளவீடில் குறைபாடின்றி பிற காரணங்களால் மீட்டரை மாற்ற நுகர்வோர் கோரும்போது, வீடுகளுக்கான ஒருமுனை இணைப்புக்கு இப்போதுள்ள ரூ. 50 கட்டணத்தை ரூ. 250-ஆகவும், மும்முனை இணைப்பு மீட்டருக்கு இப்போதுள்ள ரூ. 50 கட்டணத்தை ரூ. 500-ஆகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மீட்டர் வைப்பு தொகை: வீடுகளுக்கான ஒருமுனை மீட்டருக்கான இப்போதுள்ள வைப்புத் தொகையான ரூ. 700-லிருந்து ரூ. 825-ஆக உயர்த்த மின் வாரியம் பரிந்துரைத்துள்ளது. மும்முனை எலக்ட்ரானிக் மீட்டருக்கு ரூ. 2,500-லிருந்து ரூ. 3,650 ஆகவும், மும்முனை எலக்ட்ரானிக் எல்டிசிடி மீட்டருக்கு ரூ. 2,500-லிருந்து ரூ. 4,600 ஆக உயர்த்தவும் பரிந்துரைத்துள்ளது.

உயர் மின்னழுத்த (ஹெச்டி) மீட்டர்களுக்கான வைப்புத் தொகையை ரூ. 40 ஆயிரத்திலிருந்து ரூ. 65 ஆயிரமாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மறு இணைப்புக்கான கட்டணம் 8 மடங்காக... மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அடுத்த 6 மாதத்துக்குள் மறு இணைப்பு கோரும் எல்டிசிடி இணைப்புகளுக்கு இப்போதுள்ள ரூ. 300-ஐ ரூ. 2,500-ஆக உயர்த்த மின் வாரியம் பரிந்துரைத்துள்ளது.

இதுபோல் ஹெச்டி இணைப்புக்கு இப்போதுள்ள ரூ. 3000-ஐ ரூ. 4000-ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மீட்டர் அட்டைக்கு... புதிய இணைப்பைப் பெறும் நுகர்வோர் மீட்டர் அட்டையை தொலைத்துவிட்டாலோ அல்லது கிழித்துவிட்டாலோ, புதிய மின் அட்டையை பெற ரூ. 10 கட்டணம் செலுத்த வேண்டும். இப்போது இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இதுபோல் ஹெச்டி மற்றும் எல்டிசிடி இணைப்புகளுக்கான அட்டையை பெற ரூ. 100 கட்டணம் விதிக்க வேண்டும் எனவும் மின் வாரியம் பரிந்துரைத்துள்ளது.

இதுபோல் மீட்டர் சோதனைக்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து பிற சேவைக்கான கட்டணங்களை பன் மடங்காக உயர்த்த, உத்தேச உயர்வுக் கட்டண பட்டியலுடன் ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் சமர்ப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.