/

வடசென்னை அனல் மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி தொடக்கம்

வடசென்னை புதிய அனல் மின் நிலைய திட்டத்தின், இரண்டாவது நிலையில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Updated On :18 டிசம்பர் 2012, 7:11 pm

வடசென்னை புதிய அனல் மின் நிலைய திட்டத்தின், இரண்டாவது நிலையில் சோதனை அடிப்படையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் தாமதமாகி வந்த இந்த மின் திட்டம் மத்திய அரசு அனுமதியை அடுத்து சோதனை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் புதிய திட்டத்தின் இரண்டாவது நிலையில் (ஸ்டேஜ்-2) தலா 600 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், முதல் யூனிட்டுக்கான "ஜெனரேட்டர் ஸ்டேட்டர்', ஹரித்வாரில் உள்ள பி.ஹெச்.இ.எல். நிறுவனத்திலிருந்து நீளமான டிரய்லர் டிரக் மூலம் கடந்த ஆண்டு சென்னைக்கு எடுத்துவரப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் பினாப்பூர் கிராமத்தின் அருகே கவுலா ஆற்று பாலத்தின் மேல் டிரக் வந்தபோது, பாரம் தாங்காமல் பாலம் உடைந்து ஆற்றுக்குள் டிரக் கவிழ்ந்தது. இதில் ஸ்டேட்டரும் ஆற்றுக்குள் விழுந்து நாசமடைந்தது.

இதனால், கடந்த ஆண்டே உற்பத்தி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய இந்த முதல் யூனிட்டில் உற்பத்தி தடைபட்டது.

இந்த நிலையில், தயாராக இருந்த இரண்டாவது யூனிட்டுக்கான ஸ்டேட்டரை பி.ஹெச்.இ.எல். நிறுவனம் 2011 ஜனவரியில் அனுப்பியது. இது சாலை வழியாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்துக்கு பாதுகாப்பாகக் கொண்டுவரப்பட்டது.

இந்த ஸ்டேட்டர் 2-வது யூனிட்டில் பொருத்தப்பட்டு, உற்பத்தியை தொடங்குவதற்கான திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், இரண்டாவது யூனிட்டுக்கு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் நிபந்தனை விதித்தது.

இதனால், 2-வது யூனிட்டில் திட்டப் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டபோதும், சோதனை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ஏற்கெனவே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ள இந்த 2-வது யூனிட்டுக்கு, புதிதாக அனுமதி பெறவேண்டும் என மத்திய அமைச்சகம் நிபந்தனை விதித்திருக்கும் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். இந்த நிபந்தனை காரணமாக புதிய யூனிட்டில் உற்பத்தி தாமதமடையும் எனவும், 4 ஆயிரம் மெகா வாட் மின் பற்றாக்குறையால் தமிழகம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து 2-வது யூனிட்டில் உற்பத்தியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம், நீண்ட நாள்கள் தாமதமாகி வந்த இந்த 2-வது யூனிட்டில் திங்கள்கிழமைமுதல் சோதனை ஓட்ட மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

மத்திய அரசின் அனுமதி மூலம், 2-வது யூனிட்டில் சோதனை மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் முழு திறனான 600 மெகா வாட் உற்பத்தியை எட்டியதும் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்டு விடும்.

முதல் யூனிட்டுக்கான மாற்று ஸ்டேட்டரை ஏற்கெனவே பி.ஹெச்.இ.எல். நிறுவனம் அனுப்பி விட்டது. அந்த ஸ்டேட்டர் இன்னும் சில நாள்களில் சென்னை வந்துவிடும். அதன் பிறகு, அதை பொருத்தி வேகமாக உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதிய திட்டங்களில் உற்பத்தி பாதிப்பு: இந்த நிலையில் வர்த்தக ரீதியிலான உற்பத்தி தொடங்கப்பட்ட வல்லூர் அனல் மின் நிலைய முதல் யூனிட்டில், மீண்டும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த நவம்பர் 28-ம் தேதி வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, உற்பத்தி தொடங்கிய 2-வது நாளிலேயே தடைபட்டுபோனது. சில நாள்களில் நிலைமை சீரடைந்ததும், மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டது. 300 மெகா வாட் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த நிலையில் 18-ம் தேதி காலையில் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்: இதுபோல் சோதனை ஓட்டம் மூலம் 400 மெகா வாட் அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுவந்த, மேட்டூர் அனல் மின் நிலைய விரிவாக்கப்பட்ட (600 மெகா வாட்) திட்டத்திலும் இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த இரு நாள்களாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களில் இதுபோன்று ஆரம்பக்கால தடைகள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் தேவைப்படும்.

அதன் பிறகு வல்லூர் முதல் யூனிட்டில் சீரான மின் உற்பத்தி செய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.