

திருவண்ணாமலை: புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிக்காக, ரூ.624.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி-பெங்களூர் இடையே திண்டிவனம், செஞ்சி திருவண்ணாமலை, செங்கம், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மத்தூர், கிருஷ்ணகிரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.66 வழியே நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், நெய்வேலி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூர், ஓசூர், மும்பை செல்லும் வாகனங்கள் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றன.
புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வரை இச்சாலை 4 வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் கிருஷ்ணகிரி வரை இருவழிப் பாதையாக உள்ளது.
திண்டிவனத்திலிருந்து கிருஷ்ணகிரி வரை கடந்த சில ஆண்டுகளாகவே, குண்டும். குழியுமாக காணப்பட்ட இச்சாலையை செப்பனிட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். திருவண்ணாமலை எம்.பி. த.வேணுகோபால், மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் கமல்நாத்திடம் கோரிக்கை மனுவையும் அளித்திருந்தார்.
ரூ.624 கோடியில் திட்டம்: இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை, 182 கி.மீ. தூரத்துக்கு சாலையை பலப்படுத்தி சர்வதேசத் தரத்தில் போடுவதற்காக ரூ.624.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
9 புறவழிச் சாலைகள்: இந்த சாலைப் பணியின் ஒரு பகுதியாக செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, மாத்தூர், கன்னடஹள்ளி ஆகிய ஊர்களில் புறவழிச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.
நிலம் எடுப்புப் பணி: புறவழிச் சாலைகள் அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்தும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. நிலம் அளித்தவர்களுக்கான இழப்பீடு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் திட்ட இயக்குநர் வரதராஜன் கூறியது:
""சர்வதேசத் தரத்தில் இந்த சாலைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. பிப்ரவரி மாதத்தில் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடியும்.
9 புறவழிச் சாலைகள் அமைக்கப்படுவதால் எந்த ஊரிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. இப்போது குண்டும், குழியுமாக உள்ளப் பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.
திருவண்ணாமலைக்கு விடிவுகாலம்
திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் வாகனங்கள், திருவண்ணாமலை நகரின் உள்ளேதான் சென்றுவர வேண்டி உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இப்போது திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் இருந்து நல்லவன்பாளையம் வழியாக அத்தியந்தல் கிராமத்தில் முடியும் வகையில், புதிய புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது. இப்பணி முடிந்தால் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.