கடல்நீர் முன்னோக்கி வருவதால் ஏற்படும் மண் அரிப்பு காரணமாக சிதம்பரம் அருகே உள்ள 7-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
÷நிலம் புயலினால் உண்டான அலை சீற்றத்தால் கடற்கரை மணல் வேகமாக அரிக்கப்பட்டு மீனவர் வலை பழுது பார்க்கும் மையம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை புதன்கிழமை முற்றிலுமாக உருக்குலைந்தபோது இந்த அழிவுக்கான தொடக்கமாக அபாயமணி ஒலித்துள்ளது.
÷சிதம்பரத்துக்கும் கடலூருக்கும் இடையே அமைந்துள்ள இந்த கடற்கரையோர கிராமங்கள் கடல் சீற்றத்தால் ஏற்படும் மணல் அரிப்பினால் பேராபத்தை எதிர்நோக்கி உள்ளன.
÷கடந்த 10 ஆண்டுகளில் அரை கிலோமீட்டர் தூரம் கடல் கிராமத்தை நோக்கி நகர்ந்து வந்துள்ளதாக அந்த கிராம மக்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். சித்திரப்பேட்டை, தம்மணாம்பேட்டை, நாயக்கர்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டோடை, அய்யம்பேட்டை ஆகிய ஏழு மீனவ கிராமங்கள்தான் இந்த மிகப்பெரிய பாதிப்பை எதிர்நோக்கி உள்ளன.
÷இது குறித்து பெரியக்குப்பத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில்: "கடற்கரை கிராமங்களிலேயே மிகவும் மேடான கிராமம் பெரியக்குப்பம்.
÷கடலூரில் சுனாமி தாக்குதலுக்கு முன், கடல், ஊரிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அதற்கு பிறகு குறிப்பிடத்தக்க தூரம் முன்னே நகர்ந்து வந்தது. ÷கடந்த ஆண்டு ஏற்பட்ட தானே புயலின் போது கடல் மேலும் நகர்ந்து வந்தது. இப்போது, நிலம் புயல் தாக்கத்தினால் கடல் அலைகள் மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவர்கள் மீது மோதும் அளவுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டது.
÷அடுத்த சில ஆண்டுகளில் கடல் மேலும் முன்னேறி வருமானால் நாங்கள் ஊரையே காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்' என்றார்.
÷மீனவ கிராமங்களின் வீடுகள் அபாயத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
÷ஊருக்கும் கடலுக்கும் இடையே இருக்கும் கடற்கரையில்தான் மீனவர்கள் தங்கள் படகுகளை நிறுத்தியும் வலைகளைப் பாதுகாப்பாகவும் வைத்திருந்தனர். ஆனால், தற்போது அந்த இடைப்பட்ட நிலப்பரப்பை கடல் கபளீகரம் செய்துவிட்டதால் படகுகளை நிறுத்த இடமில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
÷இது குறித்து மீனவர் சுப்புராயன், அரசப்பன் ஆகியோர் கவலையுடன் கூறும்போது: "கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த கிராமங்களை ஒட்டி தென்னை மரங்கள் நிறைய இருந்தன. அங்கிருந்து கடலுக்குச் செல்ல வேண்டுமானால் சில நூறு அடி தூரம் சுடும் மணலில் நடந்துதான் செல்ல வேண்டும்.
÷கடற்கரையிலேயே நாங்கள் படகுகளையும் வலைகளையும் வைத்திருப்போம். ஆனால் தற்போது மணல் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக எங்கள் ஊர் மேடாகவும் கடல் பள்ளத்திலும் உள்ளது.
÷இங்கிருந்த பல நூறு தென்னைமரங்கள் விழுந்துவிட்டன. இப்போது படகுகளை நிறுத்தி வைப்பதற்குகூட இடமில்லை. ஊரில் படகுகளை நிறுத்தினால், தொழிலுக்கு போகும்போது அவைகளை கடலில் இறக்குவது மிகவும் சிரமம்.
÷கடல் இதேபோல் தொடர்ந்து ஊரை நோக்கி முன்னேறி கொண்டே வருமானால் எங்களுக்கு வாழ்வாதாரமே இருக்காது' என்றனர்.
÷இதற்கிடையில், கடந்த புதன்கிழமை கடல் பெரியக்குப்பம் தெருவுக்குள் நுழைந்துவிட்டது. அங்கு சென்ற போலீஸôர் கடற்கரையோர வீடுகளில் வசிப்போரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
÷பாதிப்புக்குள்ளான தனலட்சுமி மற்றும் அன்னக்கொடி கண்களில் கண்ணீருடன் நம்மிடம் பேசியபோது:
÷கடல், எங்கள் வீடுகளுக்கு மிக அருகே வந்துவிட்டதால், இந்த வீடுகளை நிரந்தரமாக காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு குடிபெயர்ந்து விடும்படி போலீஸôரும், கிராம நிர்வாகமும் சொல்லியுள்ளன.
÷ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த விட்டை விட்டு நாங்கள் எங்கே செல்ல முடியும் கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன்னர், எங்கள் வீடுகளில் இருந்து கடல் வெகு தொலைவில் இருந்தது. ஆனால், இப்போதோ கடல் அலைகள் எங்கள் வீட்டுப் படிக்கட்டுக்கு வந்துவிட்டன என்றனர்.
÷மேலும், ஓர் அதிர்ச்சிக்குரிய செய்தியையும் கிராம மக்கள் கூறுகின்றனர். இந்த கடற்கரையோரத்தில் உள்ள கெம்பிலாஸ்ட் தொழிற்சாலையும், நாகார்ஜுனா எண்ணெய் நிறுவனமும் சொந்தப் பயன்பாட்டுக்காக சிறிய அளவில் இரண்டு துறைமுகங்களை அமைத்துள்ளன.
÷இந்த இரண்டு துறைமுகங்களுக்கு இடையே தான் பாதிப்புக்குள்ளான இந்த ஏழு கிராமங்களும் உள்ளன.
÷இது குறித்து பேட்டோடையை சேர்ந்த நாகலிங்கம் கூறிய போது: "இந்த இரண்டு துறைமுகங்கள் கடல் அலைகளை அதன் போக்கில் விடாமல் தடுக்கின்றன. இதனால், கடல் அலைகள் குறிப்பிட்ட குறுகலான பகுதியில் மட்டும் வேகமாக வந்து மோதுவதால் மண் அரிப்பு வேகமாக ஏற்படுகிறது.
÷இதனால்தான் எங்கள் கிராமங்களுக்கு ஆபத்து உண்டாகிறது. ஆண்டாண்டு காலமாக இதே பகுதியில் எந்த தொந்தரவும் இல்லாமல் அமைதியாக வசித்து வருகிறோம். இந்த தொழிற்சாலைகள் வந்ததற்கு பிறகே எங்கள் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டிருக்கிறது. ÷இன்னும் சில ஆண்டுகளில் மண் அரிப்பு காரணமாக இந்த கிராமங்களே காணாமல் போகும் நிலைதான் ஏற்படும்' என்றார்.
÷மேற்கண்ட கிராமங்கள் அருகே உள்ள நாகார்ஜுனா, கெம்பிளாஸ்ட் தொழிற்சாலைகள் நிலங்களை மணல் போட்டு உயர்த்தியுள்ளதால், தற்போது வெள்ளநீர் வடியாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு நெற்பயிர்கள் கடந்த 10 தினங்களாக நீரில் மூழ்கியுள்ளன. ÷இதனால் இப்பகுதியில் விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
÷பேட்டோடையில் உள்ள ரேஷன் கடை ஒன்றும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. இதனால், அதனுள் வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் அருகே உள்ள சமுதாயக் கூடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ÷எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் இக்கிராமங்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.