தாமரைப்பாக்கத்தில் அழியும் நிலையில் அணைக்கட்டு
திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கத்தில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே


திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கத்தில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பழமையான அணைக்கட்டு பராமரிப்பின்றி அழியும் நிலையில் காணப்படுகிறது.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் ஏரி அருகே உற்பத்தி ஆகிறது குசஸ்தலை ஆறு. 136 கி.மீ. தொலைவு ஓடும் இந்த ஆறு கேசவபுரம் அணைக்கட்டைக் கடந்து, பூண்டி ஏரியை அடைகிறது. அங்கிருந்து தாமரைப்பாக்கம், வள்ளூரைக் கடந்த எண்ணூர் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.
வடகிழக்குப் பருவ மழைக்காலத்தின்போது பூண்டி ஏரியில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீர், குசஸ்தலை ஆறு வழியாக விடப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தி பயன்படுத்துவதற்காக தாமரைப்பாக்கம் அருகே அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.
கடந்த 1868-ல் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது. இதில் 15 பெரிய மதகுகளும், 100 சிறிய அளவிலான மதகுகளும் காணப்படுகின்றன.
பல ஆண்டுகள் பழமையான இந்த அணைக்கட்டு, தாமரைப்பாக்கம், வெள்ளியூர், அகரம், புன்னப்பாக்கம், பாகல்மேடு பகுதிகளில் குடிநீர் ஆதாரம் மற்றும் விவசாய நிலங்களின் பாசன வசதிக்கு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.
உடைந்த மதகுகள்: இந்த அணைக்கட்டில் 9 அடி வரை நீரைத் தேக்கி வைக்கலாம். இதனால் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் பெருகி, விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வந்தது.
பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டு தற்போது எந்தப் பராமரிப்பும் இன்றி பழுதடைந்து காணப்படுகிறது.
அணைக்கட்டில் பெரும்பாலான மதகுகள் உடைந்து விட்டன. திடீரென அதிகளவில் மழை பொழிந்து வெள்ளம் ஏற்பட்டால் அனைத்து நீரும் வீணாக கடலுக்குச் செல்லும் நிலையே தற்போது உள்ளது.
வடகிழக்குப் பருவ மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுப்பணித் துறை, தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் குறைந்தபட்ச பராமரிப்புப் பணிகளையாவது மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இப் பகுதி செழிப்படையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
விவசாயி வேதனை: இதுதொடர்பாக தாமரைப்பாக்கத்தைச் சேர்ந்த விவசாயி ராமன் என்பவர் கூறியது:
தாமரைப்பாக்கம் அணைக்கட்டு எங்கள் பகுதி விவசாயிகளுக்கு மிகவும் பயன் தருகிறது. ஆனால், அணைக்கட்டில் உள்ள மதகுகள் உடைந்து காணப்படுகின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அணைக்கட்டில் குறைந்தபட்ச பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...