சுற்றுச்சூழல் அனுமதிக்கான மனுக்கள் எதுவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் நிலுவையில் இல்லை என்று அத்துறையின் இணை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய பிளைவுட் தொழில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (ஐ.பி.ஐ.ஆர்.டி.ஐ.) 49-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம். 74 சதவீத திட்டங்களுக்கு மாநில அரசுகளிடமும், 17 சதவீத திட்டங்களுக்கு மண்ட அளவிலும்தான் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். 9 சதவீத திட்டங்களுக்கு மட்டுமே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி பெற வேண்டும்.
சுற்றுச்சூழல் அனுமதிக்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் வந்த மனுக்களை பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் அனுமதிக்கான மனுக்கள் எதுவும் எங்கள் அமைச்சகத்தில் நிலுவையில் இல்லை.
இந்திய பிளைவுட் தொழில்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது நமக்கு 63 மில்லியன் கியூபிக் மீட்டர் மரங்கள் தேவைப்படுகின்றன.
இந்தத் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்ட வேண்டும். இதனைத் தவிர்க்க மூங்கில், சவுக்கு, கரும்பு சக்கை, சணல், நெல் உமி, நெல் மற்றும் கோதுமை வைக்கோல், தென்னை நார், பருத்தி தண்டுகள், வாழைத் தண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி வீடுகள் கட்டுவதில் இந்த நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது.
வெறும் ஆராய்ச்சி, பயிற்சியோடு நின்றுவிடாமல் அதனை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. இந்தத் தொழிலில் ரூ. 35 ஆயிரம் கோடி அளவுக்கு வணிகம் நடைபெறுகிறது. சுமார் 8 லட்சம் பேர் இதன் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதன் மூலம் நாட்டின் இயற்கை வளங்கள் பாதுகாப்படுகின்றன என்றார் ஜெயந்தி நடராஜன்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி டாக்டர் காயத்ரிதேவி, ஐ.பி.ஐ.ஆர்.டி.ஐ. இணை இயக்குநர் சுசில்குமார் நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










