/

மணிவிழா கொண்டாடினார் மு.க.ஸ்டாலின்

News image
Updated On :1 மார்ச் 2013, 9:38 pm

திமுக சென்னைபொருளாளர் மு.க.ஸ்டாலின் மணி விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மணி விழாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகித்தார்.

விழாவில் மனைவி துர்காவுக்கு, ஸ்டாலின் மாலை அணிவித்தார். பிறகு கருணாநிதி, அன்பழகனிடம் இருவரும் வாழ்த்துப் பெற்றனர்.

விழாவில் ராஜாத்தி அம்மாள், கருணாநிதியின் மகள்கள் செல்வி, கனிமொழி, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம், இயக்குநர் அமிர்தம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில்  மு.க.அழகிரியின் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை.

அண்ணா நினைவிடத்தில்... மணிவிழாவுக்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பிறகு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் ஸ்டாலினை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.

தொண்டர்களிடம் வாழ்த்து:அதன் பின்னர் ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு மனைவி துர்காவுடன் ஸ்டாலின் வந்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் அவர்களை மேளதாளத்துடன் வரவேற்றனர்.

தொண்டர்களை ஸ்டாலின் சந்திப்பதற்காக மிகவும் பிரமாண்டமான முறையில் மேடையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பந்தலில் குவிந்திருந்தனர்.

தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த 60 கிலோ எடையுள்ள கேக்கை ஸ்டாலின் வெட்டினார்.

அதன் பின் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பூங்கொத்துகள், பணத்தாள் மாலைகள், வீரவாள் உள்பட விதவிதமான பரிசுப் பொருள்கள் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டன.

தொண்டர் ஒருவர் 1,000 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட குடையைப் பரிசாக அளித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கரகாட்டம், ஒயிலாட்டம் என விதவிதமான முறைகளில் ஊர்வலமாக வந்து ஸ்டாலினுக்குப் பரிசுகளை அளித்தனர்.

நிதி வசூல்: பிறந்த நாளுக்கு வருவோர் தேர்தல் நிதியுடன் வருமாறு ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி மேடையில் மிகப் பெரிய உண்டியல் அமைக்கப்பட்டிருந்தது. அதில் தொண்டர்கள் வரிசையில் நின்று தேர்தல் நிதி அளித்தனர்.

திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மத்திய அமைச்சர்கள் பழநிமாணிக்கம், காந்திச்செல்வன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட ஏராளமானோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.