ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

தமிழக பட்ஜெட்: புதிய வரிகள் இல்லை

கடுமையான வறட்சி, பயிர்ச் சாகுபடி பொய்த்த நிலைமை, பொதுவான பொருளாதார மந்த நிலை, கடுமையான மின்சார வெட்டு ஆகிய சூழலிலும் புதிய வரிகள் ஏதும்

News image
Updated On :21 மார்ச் 2013, 11:05 pm

கடுமையான வறட்சி, பயிர்ச் சாகுபடி பொய்த்த நிலைமை, பொதுவான பொருளாதார மந்த நிலை, கடுமையான மின்சார வெட்டு ஆகிய சூழலிலும் புதிய வரிகள் ஏதும் விதிக்காமல் தமிழ்நாடு அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப் பேரவையில் 2013-14-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு அறிக்கையை வியாழக்கிழமை தாக்கல் செய்தார். புதிய வரிகள் ஏதும் இல்லை, அதே சமயம் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அவர் அறிவித்தார். தமிழ்நாட்டின் தொழில் துறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடியும், அரசு அமல்படுத்திவரும் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.43,449 கோடியும் ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.    

2013-14-ஆம் நிதியாண்டில் வருவாய் கணக்கில் மட்டும் ரூ.664.06 கோடி உபரியாக இருக்கும். அரசின் வரவுக்கும், செலவுக்கும் இடையிலான மொத்தப் பற்றாக்குறை ரூ.22,938.57 கோடியாக இருக்கும். இந்தப் பற்றாக்குறையானது மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.எஸ்.டி.பி.) 2.84 சதவீதமாக இருக்கும்; இந்த அளவு 3 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கவேண்டும் என்ற வரம்புக்குள்ளேயே கட்டுப்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

10 அம்ச அணுகுமுறை: வேளாண்மை உள்ளிட்ட முதன்மைத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம், மின் உற்பத்தி-சாலை இணைப்பு உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த அதிக முதலீடு, தென் மாவட்டங்களில் சமச்சீரான தொழில் வளர்ச்சி, சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகை தொகுப்பு, தரம் மிக்க நகர்ப்புற கட்டமைப்புகளை ஏற்படுத்திட அதிக நிதி ஒதுக்கீடு, பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளோருக்கு நகர்ப்புற வீட்டு வசதித் திட்டம், நலத் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயற்சிகளை வழங்குதல், வறியோர்-ஆதரவற்றோரை பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்புத் திட்டத்தை வலுப்படுத்துதல், கல்வி-சுகாதாரம்-ஊட்டச்சத்து போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு ஆகிய 10 அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விரைவில் அறிவிப்பார்: காவிரி டெல்டா அல்லாத பிற மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி, சிறு-குறு-நடுத்தரத் தொழில் துறையின் சிறப்பு சலுகைத் தொகுப்பு, பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளை வலுப்படுத்தி பிரபலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார்.

விலையில்லா மடிக்கணினி, மாடு, ஆடு: அரசின் சமூக நலத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில் (2013-14) மொத்தம் ரூ.43,449 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி விநியோகத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் (2013-14) 5.6 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள விலையில்லா மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மாடு, ஆடு, கோழி திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2,000 கோடி: பொருளாதாரத்தில் உயர் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காக வரும் நிதியாண்டு (2013-14) வரவு-செலவுத் திட்டத்தில் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.2,000 கோடியும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் பொதுத்துறை-தனியார் துறை பங்கேற்பு மூலம் தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.

சிறந்த கல்விச்சூழலுக்கு: கல்வி கற்க உகந்த சூழலை ஏற்படுத்த வரவு-செலவுத் திட்டத்தில் ரூ.1,300 கோடியில் 10 அம்ச சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மொத்தம் 97.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி, 14 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.324 கோடி உள்பட மொத்தம் ரூ.1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

குடும்ப ஓய்வூதியர்களுக்கு: ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும். ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவினை ஈடு செய்ய தனி காப்பீட்டுத் திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.

புற்றுநோய் மையங்கள்: தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.30 கோடியில் மேலும் இரண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு...: மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடர வரும் நிதியாண்டில் (2013-14) ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பது குறித்த ஆய்வுப் பணியையும் அரசு மேற்கொள்ள உள்ளது.

மாமல்லபுரத்தில்...: சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக சென்னை அருகே மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் ரூ.250 கோடியில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் ("ஓஷியேனரியம்') அமைக்கப்படும். அரியலூரில் ரூ.2 கோடியில் அரிய தொல்படிவப் பொருள் அருங்காட்சியகம் ஏற்படுத்தப்படும்.

தமிழ் வளர்ச்சிக்கு சிறப்பு மானியம்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இப்போதுள்ள கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு மானியமாக ரூ.2 கோடி வழங்கப்படும்' என்றார் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

ரூ.20-க்கு அரிசி
இந்த நிதிநிலை அறிக்கையில் உணவு மானியத்துக்கு ரூ.4,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அமுதம் அங்காடிகள், கூட்டுறவு அங்காடிகள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்க அரசு ஆவன செய்யும்.

துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவை கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையிலும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.25 என்ற விலையிலும் ரேஷன் கடைகளில் இப்போது விநியோகிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டரை மணி நேரம் வாசித்த நிதியமைச்சர்
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கையை காலை 10.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு நிறைவு செய்தார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இரண்டரை மணி நேரம் விடாமல் நிதிநிலை அறிக்கையை அவர் வாசித்தார். அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனது முதல் நிதிநிலை அறிக்கையை 2011 ஜூன் மாதம் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன்பின் கடந்த நிதியாண்டிலும், இப்போதும் தொடர்ச்சியாக மூன்று நிதிநிலை அறிக்கைகளை அவர் தாக்கல் செய்துள்ளார்.

முக்கிய அம்சங்கள்

*  தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம்

*  கூட்டுறவு மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு விற்பனை

*  மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.750 கோடி

*  கூட்டுறவுக் கடன் இலக்கு ரூ. 4,500 கோடி

*  வேளாண்மைத் துறைக்கு ரூ.5,189 கோடி

*  உணவு மானியத்துக்கு ரூ.4,900 கோடி

*  2 லட்சம் பேருக்கு வீட்டு மனைப் பட்டா.

*  சென்னை, மதுரையில் புதிய மேம்பாலங்கள்.

*  மாமல்லபுரத்தில் ரூ.250 கோடியில் உயிரின காட்சியகம்.

*  வரும் நிதி ஆண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்

*  100 நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ.148

*  குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1,190 கோடி.

*  நலிந்த பிரிவினருக்கு 50 ஆயிரம் வீடுகள்

*  ஓய்வூதியதாரர்களுக்கு தனி மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

*  1.5 லட்சம் ஏழைப் பெண்களுக்கு 6 லட்சம் ஆடுகள்

குறிப்பு: நடப்பு நிதியாண்டு (2012-13) வரி வருவாய் ரூ.73,560 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டுடன் (2012-13) ஒப்பிடுகையில், வரும் நிதியாண்டில் (2013-14) தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 17 சதவீதம், அதாவது ரூ.86,065 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று வரும் நிதியாண்டில் அனைத்து வரி இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.