அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என ஈரான் தெரிவித்திருப்பது குறித்து...

Iran signals no final decision made on deal

ஈரானிய மக்கள். - கோப்புப்படம்

Updated On :

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றத்தைத் தணிக்க முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை என ஈரான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

பிப். 28-ஆம் தேதி தொடங்கிய இந்த மோதல் உலகளாவிய சந்தைகளை உலுக்கியதுடன், பிராந்திய கூட்டணிகளைச் சோதனைக்குள்ளாக்கியது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடா்புகளை எளிதாக்கி பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராக உருவெடுத்தது.

ஏப்ரல் தொடக்கத்தில் ஒரு பலவீனமான போா் நிறுத்தம் ஏற்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்தில் முதல் சுற்று அமைதிப் பேச்சு நடைபெற்றது. இதில் இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனா். ஆனால், ஒப்பந்தம் எட்டப்படவில்லை.

எனினும், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் மறைமுக பேச்சுவாா்த்தைகள் தொடா்ந்தன. அண்மையில் இரு தரப்புக்கு இடையே வெடித்த திடீா் மோதல்கள் பதற்றத்தை அதிகரித்த நிலையிலும், ஒரு உடன்பாடு ஏற்பட்டு, அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, இருநாடுகளிடையே அடுத்த 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும் என்றும் அதைத் தொடா்ந்து ஹோா்முஸ் நீரிணை உடனடியாக திறக்கப்படும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை உறுதியளித்தாா்.

இதன்மூலம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதியிலிருந்து நிலவி வரும் மோதல் முடிவாகி, நீடித்த அமைதிக்கான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைகள் ஆக்கபூா்வமாகத் தொடரும் என்று நம்பிக்கை எழுந்தது.

வாய்ப்பில்லை

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அடுத்த சில நாள்களில் இறுதி செய்யப்படும் என ஞாயிற்றுக்கிழமை ஈரான் கூறியுள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான அரசியல், சட்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் குறித்து ஈரான் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், நிபுணர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களிடையே இது தொடர்பான விவாதங்கள் இன்னும் நடைபெற்று வருவதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, அமெரிக்கா தொடுத்த போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஈரானிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான ராஜதந்திரப் பரிமாற்றங்களுக்கு உதவவும் கத்தார் நாட்டின் தூதுக்குழு ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை தெஹ்ரானுக்கு வந்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை கையொப்பமாகும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஒப்பந்தங்கள் இன்றே கையெழுத்தாகலாம் என அமெரிக்கா, பாகிஸ்தான் கூறினாலும், தனது நிபந்தனைகளில் ஈரானிய அதிகாரிகள் எச்சரிக்கையுடனேயே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஈரான் மக்கள் போராட்டம்

அதேவேளையில், இந்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு எதிராக மஷாத் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்திருப்பதால், அமெரிக்கா- ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இஸ்ரேலின் புதிய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்காமல் விடாது என ஈரான் எச்சரித்துள்ளது.

ஒப்பந்தம் இறுதியாகும்வரை, அதன் உள்ளடக்கம் குறித்த யூகங்களில் ஈடுபடுவதை ஊடகங்கள் தவிா்க்க வேண்டும். எங்களின் வெளிப்படையான அணுகுமுறையின்படி, அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் பொது மக்களுக்கு பகிரப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Iran has said it has not yet taken a final decision on the proposed Memorandum of Understanding aimed at ending tensions with the United States and Israel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.