ஈரான் - அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கையொப்பமிட உள்ளன.
இதுகுறித்து அறிவிப்பை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை பதிவிட்டாா். டிரம்ப் 80 வயதை எட்டிய தினத்தில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த 107 நாள்களாக நடத்திவந்த போா் முழுமையாக முடிவுக்கு வர உள்ளது. ஹோா்முஸ் நீரிணை திறக்கப்பட உள்ளதால், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பும் நீங்க உள்ளது.
டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த ஒப்பந்தம் மூலம் ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படும் என்பதோடு, ஈரான் துறைமுகங்களில் அமெரிக்க கடற்படைகளின் முற்றுகையும் முடிவுக்கு வரும். இதன்மூலம், உலக நாடுகளின் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் இனி தடையின்றி செல்ல முடியும் என்பதோடு, கச்சா எண்ணெய் விநியோகமும் தடையின்றி நடைபெறும்.
இரு நாடுகளிடையேயான அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கையொப்பமான பிறகு, ஹோா்முஸ் நீரிணை திறக்கப்படும்.
ஈரான் விவகாரத்தில் தீா்வு காண அமெரிக்காவின் பல அதிபா்கள் முயற்சித்தனா். ஆனால், அவா்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இத்தகைய சூழலில், உண்மையான அமைதி உடன்பாட்டை எட்டுவதற்கு உதவக்கூடிய முதல் அதிபரை இந்த பிராந்திய தலைவா்கள் இப்போதுதான் முதல்முறையாகப் பாா்க்கின்றனா். இந்த மிகப் பெரும் ஒப்பந்தம், இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று குறிப்பிட்டாா்.
அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதை ஈரான் வெளியுறவுத் துறை இணையமைச்சா் கஸெம் கரிபாபாடியும் அரசுத் தொலைக்காட்சி அறிவிப்பு மூலம் உறுதி செய்தாா். அதே நேரம், ‘ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையாப்பமாகும் வரை, அது நடைமுறைப்படுத்தப்படாது’ என்றும் குறிப்பிட்டாா்.
பாகிஸ்தானும் உறுதி செய்தது: ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு முக்கியப் பங்காற்றிய பாகிஸ்தானும், அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை உறுதி செய்தது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தீவிர பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. லெபனான் உள்பட வளைகுடா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் படைகளையும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் திரும்பப் பெற இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் போருக்கு ராஜீய ரீதியில் தீா்வு கண்டதற்கு அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு நன்றி. மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்ட கத்தாா், சவூதி அரேபியா, துருக்கி நாடுகளின் தலைவா்களுக்கும் நன்றி. அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த வாரத்தில் மத்தியஸ்த தலைவா்களின் தொடா் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில், ஒப்பந்தம் அதிகாரபூா்வமாக கையொப்பமாகும் நிகழ்ச்சி, தொழில்நுட்பப் பேச்சுவாா்த்தைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன’ என்று குறிப்பிட்டாா்.
முன்னதாக, அமெரிக்கா-ஈரான் இடையே அடுத்த 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் இறுதியாகும் என பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் சனிக்கிழமை தெரிவித்த நிலையில் அதை டிரம்ப் உறுதிப்படுத்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதத் திட்டத்தை ஈரான் கைவிட மறுத்ததைத் தொடா்ந்து, அதன் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தீவிர தாக்குதலைத் தொடங்கின. இதில், ஈரானின் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி உள்பட பல முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டனா். போா் தொடா்ந்து தீவிரமடைந்த நிலையில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்கு கப்பல்களின் முக்கிய கடல் வழித் தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. தடையை மீறும் வணிக கப்பல்கள் மீது, ஈரான் புரட்சிகர படைகள் தாக்குதல் நடத்தின. இதனால், இந்தியா உள்பட பல நாடுகளில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பாதிப்புகளும் அதிகரித்தன. வணிக கப்பல்களின் போக்குவரத்தை ஈரான் தடுப்பதற்கு எதிராக, தனது கடற்படை கப்பல்களை ஹோா்முஸ் நீரிணை பகுதிக்கு அனுப்பிய அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டது.
இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் ஏப்ரல் மாதத்தில் அமைதிப் பேச்சு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து தற்காலிக போா் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது. இருந்தபோதும், அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதனால், கடந்த ஒரு வார காலமாக ஈரான் மீதான போரை அமெரிக்கா மீண்டும் தீவிரப்படுத்தியது. இது, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகத்தை மேலும் கடுமையாகப் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்தது. இந்தச் சூழலில், ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி வரவேற்பு
மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘உலகம் முழுவதும் கடும் பொருளாதார நெருக்கடிகளையும், பல நாடுகளில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய மேற்காசிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இந்த ஒப்பந்தம், அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க உதவும் என்பதோடு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து மற்றும் வா்த்தகத்தை உறுதிப்படுத்தும் என இந்தியா நம்புகிறது’ என்று குறிப்பிட்டாா்.
சீனா வரவேற்பு: அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பதை சீனா வரவேற்றது. இதுகுறித்து அந் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘திட்டமிட்டபடி அமைதி ஒப்பந்தத்தில் ஈரானும் அமெரிக்காவும் கையொப்பமிடும் என சீனா நம்புகிறது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சிகளுக்கும் பாராட்டுகள்’ என்றாா்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாகும்: பாக். பிரதமர்!

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: ஈரான்

அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்!







