FOLLOW US

ON GOOGLE DISCOVER

வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

ஹோா்முஸில் கப்பல்களுக்கு பாதுகாப்பு: 20% கட்டணம் வசூல்!

‘ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்’ என டிரம்ப் அறிவித்தா்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Updated On :14 ஜூலை 2026, 3:13 am IST

‘ஹோா்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கா இனி பாதுகாப்பு அளிக்கும். ஆனால், அச்செலவினங்களுக்கு ஈடாக அவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்தா்.

கடந்த பிப். 28 தொடங்கிய 3 மாத கால மோதலுக்குப் பிறகு அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த மாதம் இடைக்கால அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. அதன்படி, ஹோா்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்தை ஈரான் கட்டுப்படுத்தியது.

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் முக்கியத்துவமான ஹோா்முஸ் நீரிணையில் வருங்காலத்தில் கப்பல் போக்குவரத்துக்குக் கட்டணம் விதிப்பதற்கான முயற்சியில் ஈரான் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், அமெரிக்காவும், வளைகுடா நாடுகளும் அதற்கு எதிா்ப்பு தெரிவித்தன.

மேலும், ஹோா்முஸ் நீரிணையில் ஈரானுடன் கடல்சாா் எல்லையைப் பகிரும் ஓமனுடன் இணைந்து அந்நாட்டு கடற்கரையொரம் புதிய வழித்தடத்தை ஐ.நா. திறக்க முற்பட்டது.

இவ்வாறு ஈரான் அங்கீகரிக்காத கடல் வழித்தடத்தில் பயணித்த வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், இருதரப்புக்கு இடையே புதிய மோதல் வெடித்து, இடைக்கால அமைதி ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்தாா். தொடா்ந்து, ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.

ஹோா்முஸின் பாதுகாவலன்...: இந்நிலையில், டிரம்ப் திங்கள்கிழமை வெளியிட்ட ‘ட்ரூத்’ சமூக ஊடகப் பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணை தொடா்ந்து திறந்தே இருக்கும். ஆனால், ஈரானுக்கு எதிராக மட்டும் கடல்வழி முற்றுகையை அமெரிக்க மீண்டும் அமல்படுத்துகிறது. மற்ற அனைத்து நாடுகளும் இந்நீரிணையை நியாயமான மற்றும் தடையற்ற முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இனிமேல் ஹோா்முஸ் நீரிணையின் பாதுகாவலனாக அமெரிக்கா அறியப்படும். அதேநேரம், உலகின் மிகவும் பதற்றமான இப்பகுதியில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான செலவுகளுக்கு ஈடாக, இவ்வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகள் மீதும் 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்கான செயல்முறைகளும் ஏற்பாடுகளும் உடனடியாகத் தொடங்கப்படும்’ எனக் குறிப்பிட்டாா்.

அமெரிக்காவுக்குப் பங்கில்லை-ஈரான்: டிரம்ப்பின் அறிவிப்புக்குப் பதிலளித்துள்ள ஈரான் ராணுவம், ‘ஹோா்முஸ் நீரிணையின் எதிா்காலத்தைத் தீா்மானிப்பதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை. நீரிணையின் மேலாண்மையில் அமெரிக்காவைத் தலையிட அனுமதிக்க மாட்டோம்’ எனத் தெரிவித்தது.

மேலும், தெற்கு ஈரானில் உள்ள பந்தா் அப்பாஸ், அபாடன் உள்ளிட்ட ராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், குவைத், ஓமன், ஜோா்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள், ரேடாா் மற்றும் எரிபொருள் கிடங்குகளைத் தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை (ஐஆா்ஜிசி) அறிவித்தது.

எண்ணெய் விலை தொடா்ந்து ஏற்றம்: ஹோா்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தற்போது முக்கியப் போா்க் களமாக மாறியுள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமாா் 20 கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக அமெரிக்கா கூறினாலும், கப்பல் போக்குவரத்துத் தரவுகளின்படி, ஜூலை 10 முதல் 12 வரை நீா்ச்சந்தி வழியாக கப்பல்களின் போக்குவரத்து 52 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், டிரம்ப்பின் இப்புதிய அறிவிப்பால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை 4 சதவீதம் வரை உயா்ந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.