ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மு.க. ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை - இபிஎஸ்விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!
/

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டங்கள்: கருணாநிதி விளக்கம்

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பெரும்பாலான குடிநீர்த் திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 8:19 pm

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட பெரும்பாலான குடிநீர்த் திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று அத்துறையின் அமைச்சரும் பதிலளித்து விட்டார்.

அப்போது வெளியிட வேண்டிய அறிவிப்புகளை ஏப்ரல் 10ஆம் தேதி 110ஆவது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 3.80 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டமும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகக் கூறியுள்ளார். ராமநாதபுரத்தின் வறட்சியைக் கணக்கில் கொண்டு 1996-ல் திமுக ஆட்சியில் ரூ. 72.20 கோடியில் உவர் நீரை நன்னீராக்கும் 11 திட்டங்களைச் செயல்படுத்தினோம். இதன் மூலம் 237 கிராமங்கள் குடிநீர் வசதியைப் பெற்றன.

ரூ. 671 கோடி மதிப்பிலான ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு 30-1-2007-ல் பரமக்குடியில் நடைபெற்ற விழாவில் நான் அடிக்கல் நாட்டினேன்.

இத்திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிகள், மண்டபம், சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் ஆகிய போரூராட்சிப் பகுதிகளுக்கும் 27-6-2009-ல் குடிநீர் வழங்கப்பட்டன.

2ஆவது கட்டமாக இத்திட்டத்தின் வழியோரப் பகுதிகளான புதுக்கோட்டை மாவட்டத்தில் 32 குடியிருப்புகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 799 குடியிருப்புகளுக்கும், ராமநாதபுரத்தின் ஊரகப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டன.

மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சியில் 1971ஆம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரியம் தொடங்கப்பட்டது. 1995-96ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குடிநீர் வழங்கும் பணிகளுக்காக ரூ. 213.82 கோடி செலவிடப்பட்டது. ஆனால், 2000-01-ல் திமுக ஆட்சியில் குடிநீர் பணிகளுக்காக ரூ. 842 கோடி ஒதுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் திமுக ஆட்சியில் ரூ. 51 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு, 27-6-1999-ல் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், இது அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

கிருஷ்ணா குடிநீர்த் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான பணிகள் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றன. மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அது திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ஆனாலும் இத்திட்டத்தின் பெருமளவு பணிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.

எல்லாப் பெருமைகளையும் முதல்வர் ஜெயலலிதா தேடிக் கொள்ள முயன்றாலும் திட்டங்களின் பயன்களை அனுபவித்து வரும் மக்களுக்கு உண்மை தெரியும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.