திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

இளவரசன் உடலை ஆராய நிபுணர்கள் குழு

தருமபுரி இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமா என்பது பற்றி ஆராய 2 டாக்டர்களைக் கொண்ட புதிய குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2013, 11:54 pm

தருமபுரி இளவரசன் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமா என்பது பற்றி ஆராய 2 டாக்டர்களைக் கொண்ட புதிய குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.தங்கராஜ், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தடயவியல் துறையின் தலைவர் டாக்டர் பி.சம்பத்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த இரு மருத்துவர்களும் வியாழக்கிழமை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள இளவரசனின் சடலத்தை நேரில் ஆராய வேண்டும். தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, மறு பிரேதப் பரிசோதனை அவசியமா என்பது தொடர்பான அறிக்கையை வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உரிய முடிவெடுக்கும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இளவரசன் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால் மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இளவரசனின் நண்பரான வழக்குரைஞர் ஏ.ரமேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிபுணர்கள் இருவர், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர், சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஒருவர் மற்றும் ஏற்கெனவே பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் மூன்று பேர் பிரேதப் பரிசோதனையின் விடியோ பதிவை உயர் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாயன்று பார்த்து ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு தங்கள் கருத்து குறித்து நீதிபதிகளிடம் அவர்கள் தனித்தனியாக அறிக்கை அளித்தனர். ஜிப்மர் மருத்துவமனையின் மருத்துவர்கள் இருவரும் பிரேதப் பரிசோதனை அறையில் நிகழ்ந்துள்ள பல தவறுகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் மறு பிரேதப் பரிசோதனை தேவையில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சவீதா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் டெகல், மறு பிரேதப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார். மற்ற 4 டாக்டர்களும் மறு பிரேதப் பரிசோதனை அவசியமில்லை என்று கூறியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனை விடியோப் பதிவை பார்த்து டாக்டர்கள் அளித்த இந்த கருத்துகள் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை வாதம் நடைபெற்றது. நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள் சங்கரசுப்பு, என்.ஜி.ஆர்.பிரசாத், எஸ்.பிரபாகரன் ஆகியோர் ஏற்கெனவே நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் பல தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால் மறு பிரேதப் பரிசோதனை அவசியம் என்று வாதிட்டனர். எனினும் அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் எஸ்.சண்முகவேலாயுதம், வழக்கமான விதிமுறைகளின் அடிப்படையில், அனுபவம் மிகுந்த டாக்டர்களைக் கொண்டே பிரேதப் பரிசோதனை நடைபெற்றுள்ளது.

பிரேதப் பரிசோதனை தவறானது என்பதை உறுதி செய்யக் கூடிய குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கூடாது என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மறு பிரேதப் பரிசோதனை தேவையா என்பது பற்றி ஆராய 2 டாக்டர்கள் கொண்ட புதிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

தற்போதைய சூழ்நிலையில், ஏற்கெனவே நடந்த பிரேதப் பரிசோதனை தவறாக நடந்ததோ என்று நாங்கள் சந்தேகப்பட எந்தக் காரணமும் இல்லை. எனினும் நியாயமற்ற ஒரு கோரிக்கையை மனுதாரர் வலியுறுத்தவில்லை என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இதனை ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலையிலிருந்து வந்த ஒருவரின் நீதிக்கான அழு குரலாகவே கருதுகிறோம் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.