முடிவுக்கு வந்த 60 ஆண்டு திரை சகாப்தம்

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 1931-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் இருந்தே இலக்கிய ஈடுபாட்டில் இருந்த வாலி, "நேதாஜி' எனும் கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். இதன் முதல் பிரதியை எழுத்தாளர் கல்கி வெளியிட்டார்.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் 1931-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் இருந்தே இலக்கிய ஈடுபாட்டில் இருந்த வாலி, "நேதாஜி' எனும் கையெழுத்து பத்திரிகையை நடத்தினார். இதன் முதல் பிரதியை எழுத்தாளர் கல்கி வெளியிட்டார்.

வாலிக்கு ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாக படம் வரையும் திறமையையும் பெற்றிருந்தார். "ஆனந்த விகடன்" இதழில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே வர வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தவரிடம் பள்ளித் தோழர் ஒருவர் ""மாலியைப் போல் நீயும் நல்ல சித்திரக்காரனாக வர வேண்டும்'' என்று கூறி வாலி என்று பெயர் சூட்டினார் என்று கூறப்படுகிறது.

வாலியின் இலக்கிய ஈடுபாட்டை அறிந்து வியந்த அன்றைய திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி வானொலிக்கு கதைகள், நாடகங்களை எழுதிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

கலையுலகில் நாடக ஆசிரியராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட வாலி, 1958-ஆம் ஆண்டில் வெளிந்த "அழகர் மலைக்கள்ளன்' என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதையடுத்து 1962-ஆம் ஆண்டு எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இசையமைப்பில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடி "இதயத்தில் நீ' படத்தில் இடம் பெற்ற "'பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா...'' என்ற பாடல் வாலிக்கு தனித்த அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களுக்கு பாடல்களை எழுதிய வாலி தமிழ் திரையுலகில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

காலத்தால் அழியாத பாடல்கள்: ஆண்டுகள் பல கடந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களை எழுதிய பெருமையைப் பெற்றவர் கவிஞர் வாலி.

""ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை....'', "நான் ஆணையிட்டால்...'', ""காற்று வாங்க போனேன்...'', ""சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ...'', "'அந்த நாள் ஞாபகம்...'', ""தரைமேல் பிறக்க வைத்தான்'', ""புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்'', ""இறைவா உன் மாளிகையில்...'', போன்ற காலத்தால் அழியாத பாடல்களை எழுதியுள்ளார்.

நூற்றுக்கணக்கான பக்தி பாடல்களையும் எழுதியுள்ள வாலியின் வரிகளில் டி.எம்.சௌந்தரஜான் பாடிய ""கற்பனை என்றாலும் கற் சிலை என்றாலும்...'' பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

5 தலைமுறைகளைக் கண்டவர்: எம்.ஜி.ஆர்.-சிவாஜி, ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன், ரஜினிகாந்த்- கமல்ஹாசன், விஜய்-அஜித்-தனுஷ்-சிம்பு வரை ஐந்து தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதி சாதனை படைத்தவர் கவிஞர் வாலி.

இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா, சுதர்சனம், ஜி.கே.வெங்கடேஷ், சங்கர்-கணேஷ், வி.குமார், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா, வித்யாசாகர், டி.இமான், ஜி.வி.பிரகாஷ்குமார், அனிருத் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

சிறுகதைகள், கவிதைகள், உரைநடை என 20-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். "அம்மா', "பொய்க்கால் குதிரை', "நிஜ கோவிந்தம்', "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "கிருஷ்ண விஜயம்' ஆகிய கவிதை நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

"ஹே ராம்', "பார்த்தாலே பரவசம்', "பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ள வாலி, "வடை மாலை' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் சாதனை புரிந்த வாலிக்கு, 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இதைத் தவிர 1970 (எங்கள் தங்கம்), 1979 (இவர்கள் வித்தியாசமானவர்கள்), 1989 (வருஷம் 16), (அபூர்வ சகோதரர்கள்), 1990 (கேளடி கண்மணி), 2008 (தசாவதாரம்) என ஐந்து முறை சிறந்த பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருதுகள் மற்றும் திரைத்துறை விருதுகளை பெற்றிருக்கிறார்.

கடைசிப் பாட்டு: வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கவுள்ள "காவியத்தலைவன்' படத்துக்காக ""கோடாலி முடிச்சுப் போட்டு...'' என்ற பாடலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வாலி எழுதிக் கொடுத்துள்ளார். இப்பாடல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகவுள்ளது.

இறுதிச் சடங்கு: ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரிலுள்ள அவரது இல்லத்தில் வாலியின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கவிஞர் வாலியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இறுதி சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) மாலை நடைபெறுகிறது.

ஆளுநர் ரோசய்யா இரங்கல்

சென்னை, ஜூலை 18: கவிஞர் வாலியின் மறைவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

தமிழில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் வாலியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமும் ஆற்றொணா துன்பமும் அடைந்தேன். அவருடைய பாடல்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் இதயத்தைத் தொடுவதுடன் ஒரு செய்தியையும் சொல்லும். அவருடைய மறைவால் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் ரோசய்யா.

நிரப்ப முடியாத வெற்றிடம் - கவிஞர் வைரமுத்து

சென்னை, ஜூலை.18: கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

""தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அழைத்த போதெல்லாம் அன்பாகப் பேசி மகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்துவிட்டேன். வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை.

கண்ணதாசன் என்ற கவியரசருக்கு சற்றே இணையாக நெடுந்தூரம் நடந்து வந்த சிறப்பும் வாலிக்கே வாய்த்தது. எம்.ஜி.ஆரின் பிம்பத்தை உயர்த்திப் பிடித்ததில் வாலியின் வார்த்தைகளுக்குப் பெரும் பங்கு உண்டு.

அவர் உயிர் பிரிந்திருக்கலாம்; உடலை ஐம்பூதங்கள் பிரித்துக் கொண்டிருக்கலாம். அவருடைய தமிழ், மரணம் தொட முடியாத உயரத்தில் இருக்கிறது.

அது காலமெல்லாம் அவர் புகழைப் பாடிக் கொண்டிருக்கும். இறங்கும் கண்ணீரை துடைத்துக் கொண்டு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

தலைவர்கள் இரங்கல்

சென்னை, ஜூலை 18: கவிஞர் வாலி மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த்: வாலி மறைவு செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

"ஏழை ஜாதி', "ஆனஸ்ட்ராஜ்', "பாட்டுக்கொரு தலைவன்' உள்பட என்னுடைய பல படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். மூன்று தலைமுறை கலைஞர்களுக்கும் பாடல் எழுதி சரித்திரம் படைத்தவர். வாலியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

ராமதாஸ்: தமிழ் உலகம் போற்றும் சிறந்த கவிஞர்களில் வாலியும் ஒருவர். தத்துவப் பாடல்களை எழுதுவதில் முத்திரை பதித்தவரான அவர் துள்ளல் பாடல்களையும் எழுதியுள்ளார். இதுவரை 10 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதிய சாதனைக்குச் சொந்தக்காரர். பல துறைகளில் சிகரங்களைத் தொட்ட வாலியின் மறைவு ஈடு செய்ய முடியாதது.

வைகோ: சாகாவரம் பெற்ற இதிகாசக் கவிதைகளை, திரைப்படப் பாடல்களை அமுத மழையாக வழங்கிய கவிதா மேகம் கலைந்துவிட்டது.

"தரைமேல் பிறக்க வைத்தான்', "நான் ஆணையிட்டால்', "கொடுத்தெல்லாம் கொடுத்தான்' என எண்ணற்ற பாடல்கள் மூலம் எம்.ஜி.ஆரை கோடானு கோடி மக்களின் நெஞ்சில் நிறுத்தினார்.

கவிமன்னன் வாலியைக் காலன் கொண்டு சென்றாலும், தனது பாடல்களால் அவர் காலத்தை வென்று நிற்பார்.

கி.வீரமணி (திராவிடர் கழகம்): வாலியின் கருத்தாழம் மிகுந்த கவிதைகளும், திரைப்பாடல்களும் காலத்தை வென்றவை. வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது எப்படி என்பதைக் காட்ட அவரைப் போன்ற வித்தகரை தமிழகத்தில் எளிதில் காண முடியாது.

தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கம்): கண்ணதாசன் மறைவுக்குப் பிறகு, திரைப்பட உலகில் ஒரு மிகப் பெரிய வெற்றிடம் ஏற்படாமல் பார்த்துக் கொண்ட பெருமை கவிஞர் வாலியையே மட்டுமே சேரும்.

திரைப்பட உலகின் சாம்ராஜ்யத்தில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த கண்ணதாசனுக்கு இணையாக பாடல் எழுதி சரித்திரம் படைத்தவர் வாலி. எம்.ஜி.ஆரின் அரசியல் ஏற்றத்துக்கு வாலியின் பல பாடல்கள் ஏணியாக அமைந்ததை யாரும் மறுக்க முடியாது. வாலியிடம் மோனையும், எதுகையும் முத்தமிடும் வசந்தமயமான வார்த்தைகளுக்கு என்றும் பஞ்சமே இருந்ததில்லை. தமிழ் இருக்கும் வரை வாலி வாழ்வார்.

மனதை மாற்றிய கண்ணதாசன்...

திரையுலகில் பாடலாசிரியராக தடம் பதிக்க முடியாமல் இருந்த கவிஞர் வாலி, சினிமா ஆசைக்கு விடை கொடுத்துவிட்டு மும்பைக்குச் சென்று தனது சகோதரர் மூலம் வேறு ஏதாவது வேலை தேடலாம் என்கிற முடிவுக்கு வந்தார். பெட்டி, படுக்கையுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது அவரை தற்செயலாக சந்திக்க வந்த பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், இயக்குநர் ஸ்ரீதரின் "சுமைதாங்கி' படத்துக்காக - தான் அன்று பாடிய "மயக்கமா... கலக்கமா... மனதிலே குழப்பமா...' என்கிற கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடலை பாடிக் காட்ட, அதில் வரும் ""உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'' என்ற வரிகளைக் கேட்ட வாலி மனம் மாறி தனது முடிவை மாற்றிக்கொண்டார். பின் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். இதை வாலி பல முறை மேடைகளில் சொல்லியிருக்கிறார்.

பிரபல பாடல் வரிகள்...

"நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்...', "புதிய வானம் புதிய பூமி...', "ஏமாற்றாதே ஏமாறாதே...', "வெள்ளிக் கிண்ணம்தான் தங்க கைகளில்...', "அத்தை மடி மெத்தையடி...', "கண் போன போக்கிலே கால் போகலாமா...', "காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்...', "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்...', "மன்னிக்க வேண்டுகிறேன்...', "தரை மேல் பிறக்க வைத்தான்...', "நான் மலரோடு தனியாக...', "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...', "மலரே குறிஞ்சி மலரே...', "அம்மா என்றழைக்காத உயிரில்லையே...', "அந்த நாள் ஞாபகம்...', "கல்லை மட்டும் கண்டால்....' ஆகியவை கவிஞர் வாலியின் பிரபல திரைப்பட பாடல் வரிகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com