

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை சீராக பராமரிக்க மாநில அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்குமா என அனைத்து தரப்பினரும் எதிர்நோக்கி உள்ளனர்.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாழும் இடமாக புதுச்சேரி திகழ்கிறது. சிறந்த சுற்றுலா தலமாக உள்ளதாலும், அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயிலைக் காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதே போல் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட மக்களும் புதுச்சேரிக்கு வருகின்றனர்.
ரெளடிகள் அட்டகாசம்:
பாரம்பரிய பெருமை மிக்க புதுச்சேரி தற்போது பெருகி உள்ள ரெüடிகளின் அட்டகாசத்தால் தனது சிறப்பை இழந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரில் பிரபல ரெüடிகளாக விளங்கிய மணிகண்டன், கருணா ஆகியோர் ஏற்கெனவே காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் தற்போது புதிதாக ரெüடிகள் உருவாகி உள்ளதால் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. புதிய ரெüடிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
குண்டர் சட்டத்துக்கு சிக்கல்:
6 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக்குமார் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் மாநில அரசோ இதன் மீது எந்த நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் ரெüடிகள் மேலும் ஊக்கம் பெற்று தங்கள் செயல்களை செய்து வருகின்றனர்.
வியாபாரிகள் அச்சம்:
ஏற்கெனவே புதுச்சேரி நகரில் கடை வியாபாரிகளை மிரட்டி ரெüடிகள் மாமூல் வசூலித்து வருகின்றனர். இதனால் வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ரெüடிகளை ஒழிக்கக் கோரி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதியும் முழு கடையடைப்புப் போராட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதியும் பட்டேல் சாலையில் உள்ள ஓட்டலிலும் மாமூல் கேட்டு ரெüடிகள் மிரட்டினர். உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் ஓட்டலை சூறையாடினர்.
இதே போல் பல்வேறு இடங்களில் மாமூல் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வெளிச்சத்துக்கு வராத நிலை உள்ளது.
சிறைக்குள்ளே சுதந்திரம்:
புதுச்சேரி காலாபேட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரெüடிகள் சகல வசதிகளோடு உள்ளனர். செல்போன் எளிதாக கைதிகளுக்கு கிடைக்கிறது.
கடை வியாபாரிகளுக்கு மாமூல் தர வேண்டும் என சிறையில் இருந்தே செல்போன் மூலம் மிரட்டல்கள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் வைக்கப்பட்டுள்ள செல்போன் ஜாமர் கருவிகளும் செயலிழந்து காணப்படுகின்றன. கைதிகளுக்கு உடந்தையாக உள்ள சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்பிரச்னை தீரும்.
ஒவ்வொரு கொலைச் சம்பவத்துக்கும் சிறையில் இருந்தே கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். செல்போன் நடமாட்டத்தை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாபேட் காவல் நிலையத்தில் தான் சிறையில் சிக்கும் செல்போன்கள் தொடர்பாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
அமைதியான நகராக விளங்கிய புதுச்சேரி தற்போது அமைதியின்றி காணப்படுகிறது. ரெüடிகளை கட்டுப்படுத்த காவல்துறை தேவையான நடவடிக்கை எடுக்க முதல்வர் ரங்கசாமி உத்தரவுகளை பிறப்பித்தால் மட்டுமே சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும். தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் குண்டர் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சட்டம் ஒழுங்கை மாநில அரசு முறையாக பராமரிக்க வில்லை என குறைகூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.