சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவுக்கூடத்தில் தினமும் சுமார் 250 மாணவர்கள் மதியஉணவு சாப்பிட்டு வருகின்றனர். சத்துணவு கூட்டத்திற்கு பாலுபிள்ளை பொறுப்பாளராகவும், குப்பம்மாள், பாலு ஆகிய இரு சமையர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை மதியம் வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் பல்லி கிடந்ததை பார்த்து 10-ம் வகுப்பு மாணவர் ஆசைதம்பி, சமையலர் குப்பம்மாளிடம் கூறியுள்ளார். அவர் பல்லியை எடுத்து போட்டுவிட்டு யாரிடம் கூற வேண்டாம் எனக்கூறிவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெரும்பாலான மாணவர்கள் உணவு சாப்பிட மறுத்து பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.