சென்னையில் இருந்து பழவேற்காட்டுக்கு நீர் வழிப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுமா?

சென்னையில் இருந்து பழவேற்காட்டுக்கு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கினால் வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில்
சென்னையில் இருந்து பழவேற்காட்டுக்கு நீர் வழிப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுமா?
Updated on
2 min read

சென்னையில் இருந்து பழவேற்காட்டுக்கு நீர் வழிப் போக்குவரத்து தொடங்கினால் வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 சென்னையின் வரலாறு பழவேற்காட்டில் இருந்து தொடங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா, ஆனால், அதுதான் உண்மை. சென்னை நகரம் உருவாவதற்கு முன்பே தற்போது திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு பெரும் வணிக நகரமாகத் திகழ்ந்துள்ளது. தற்போது பழவேற்காட்டில் 20-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் சரி சமமாக வசித்து வருகின்றனர்.
 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் ஆளுமையின் கீழ் பழவேற்காடு இருந்தபோது, நீர்வழி வணிகத்தில் பழவேற்காடு முக்கிய வணிகத் துறைமுகமாக விளங்கி வந்துள்ளது. டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள் தங்களின் நீர்வழி வணிகத்துக்கு பழவேற்காடு துறைமுகத்தை பயன்படுத்தியுள்ளனர்.
 நீர் வழிப் பாதையில் ஜப்பான் நாட்டுக்கு பழவேற்காட்டில் இருந்து தங்கம் எடுத்து செல்லப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ஜப்பான் நாட்டை சேர்ந்த இருவர் இங்கு வந்து பழவேற்காடுக்கும், ஜப்பானுக்கும் உள்ள வணிகத் தொடர்பு குறித்து ஆவணப் படம் ஒன்றை எடுத்து சென்றனர்.
 15-ஆம் நூற்றாண்டில் விஜய நகர ஆளுமையின் கீழ் இருந்து பழவேற்காட்டை போர்த்துகீசியர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அது முதல் பழவேற்காடு போர்த்துகீசியர்களின் துறைமுகமாக இருந்து வந்தது. அப்போது போர்த்துகீசியர்களிடம் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் மயிலாப்பூர் சென்றனர். அதன் பிறகு சென்னை பாரிமுனை அருகே ஜார்ஜ் கோட்டைடையை கட்டி, கடல் வணிகத்தில் ஈடுபட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 வரலாற்று தகவலின்படி பார்த்தால் தற்போது 375-ஆவது சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் பழவேற்காட்டின் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. இன்னமும் தனியார் தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பழவேற்காட்டின் வரலாற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
 ஆங்கிலேயர் ஆட்சியில் நீர்வழிப் போக்குவரத்துக்காக வங்காள விரிகுடா கடலோரம், பக்கிங்காம் கால்வாய் தமிழகத்தில் உள்ள மரக்காணத்தில் தொடங்கி (490 கி.மீ.) ஆந்திர மாநிலம் விஜயவாடா வரை அமைக்கப்பட்டது.
 அப்போது இந்தக் கால்வாயில் நீர்வழிப் போக்குவரத்தும் இருந்துள்ளது. தற்போது பக்கிங்காங் கால்வாயில் எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆறும் பழவேற்காட்டில் ஆரணி, சொர்ணமுகி, காளாங்கி, ஆசியாவின் இரண்டாவது ஏரியான பழவேற்காடு ஏரியும் இணைகின்றன.
 நெரிசலுக்குத் தீர்வு
 அண்மையில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவில் நீர் வழிப்போக்குவரத்து அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். பொன்னேரி வட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணூர் துறைமுகம், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, கப்பல் கட்டும் தளம், வடசென்னை அனல் மின் நிலையம், வல்லூர் அனல் மின் நிலையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
 எண்ணூர் துறைமுகத்துக்கு வெளிநாடு, ஒடிஸô உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நிலக்கரி கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டு. அங்கிருந்து சரக்கு ரயில், லாரி மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
 எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் நிலக்கரி, உணவு பொருள்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்கள் ஆகியன கனரக வாகனங்களில் எடுத்து செல்லப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசு, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
 எரிபொருள் தேவையும் குறையும்: மரக்காணத்தில் இருந்து சென்னை வழியாக அமைக்கப்பட்ட பக்கிங்காங் கால்வாயில் நீர் வழிப்பாதையை மீண்டும் துவக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 அதன் மூலம் வடசென்னை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், பொன்னேரி ஆகிய பகுதிகளில் வாகனப் போக்குவரத்தும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தேவையும் குறையும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் கருத்தாகும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com