ராஜபாளையத்தில் அரசு பேருந்து மோதியதில் உயிரிழந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரின் வாரிசுதாரருக்கு, அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.3.22 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராஜபாளையம், சமுசிகாபுரம், வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் வீராச்சாமி (67). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர். இவர் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். 13.1.2008-ம் தேதி ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் ஜெயசக்தி மாரியம்மன்கோவில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மகராஜாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஓட்டி வந்த அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்து வீராச்சாமி மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார்.
அவரது வாரிசுதாரரான அவரது பிள்ளைகள் மகேஸ்வரி, அமுதா, பாலாஜி ஆகியோர் தங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகம், வீராச்சாமியின் வாரிசுதாரருக்கு ரூ.3.22 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு:
ராஜபாளையம் வட்டம், கடம்பன்குளம்-கம்மாப்பட்டியைச் சேர்ந்தவர் இருளப்பன் (60). இவர் கூலி வேலை மற்றும் மாட்டு தரகு வேலை செய்து வந்தார். ராஜபாளையம்-தென்காசி சாலையில் கம்மாப்பட்டி விலக்கு அருகே 4.3.2012-ம் தேதி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செங்கோட்டை பிரனூர் பார்டர், அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவர் ஓட்டி வந்த பைக், இருளப்பன் மீது மோதியது. பலத்த காயமுற்ற அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 30.4.2013-ம் தேதி இறந்துவிட்டார்.
இதனையடுத்து இவரது வாரிசுதாரர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், அம்பாசமுத்திரம், தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி, வாரிசுதாரருக்கு ரூ.1.04 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.