தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அருப்புக்கோட்டை வட்டாரத்தில் நீர்வள நிலவள திட்டத்தை செயல்படுத்த மாதிரி கிராமம் தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரப்பகுதியில் உள்ள செங்கோட்டையார் உபவடிநிலப்பகுதியில் நீர்வள நிலவளத்திட்டத்தை செயல்படுத்த மாதிரி கிராமமாக சிதம்பராபுரம் கிராமம்

Updated On :16 ஜூன் 2015, 3:59 pm

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரப்பகுதியில் உள்ள செங்கோட்டையார் உபவடிநிலப்பகுதியில் நீர்வள நிலவளத்திட்டத்தை செயல்படுத்த மாதிரி கிராமமாக சிதம்பராபுரம் கிராமம் வேளாண்மைத்துறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இம்மாவட்டத்தில் இத்திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உலக வங்கி குழு கூடுதல் வேளாண்மை இயக்குநர் குணசேகரன் வழிகாட்டுதலின் படி இக்கிராமத்தில் குழுவினர் ஆய்வு செய்து மாதிரி கிராமமாக சிதம்பராபுரம் கிராமத்தை தேர்வு செய்துள்ளனர். இங்கு  வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு பயிர் செயல்விளக்கத் திடல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து வேளாண்மை துறை இணை இயக்குநர்(பொறுப்பு) செண்பகராஜ் விளக்கமாக எடுத்துரைத்தார். சிறு மற்றும் குறு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ராகி, குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை பயிர்களில் செயல்விளக்கத் திடல்களும் அமைக்கப்பட்டது.

மேலும், இத்தானியங்களை மதிப்பு கூட்டும் பொருளாக சந்தையில் விற்பனை செய்வதற்கு 20 விவசாயிகள் அடங்கிய செங்கோட்டையார் அருப்புக்கோட்டை வட்டார சிறுதானிய சாகுபடி குழுவும் தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு நீர்வள நிலவளத்திட்டம் மூலம் ரூ.2.27 லட்சம் மதிப்பிலான சிறுதானிய மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் 100 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட இருக்கிறது.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்யும் சிறு, குறு தானியங்களில் உள்ள கல் தூசிகளை நீக்கி அவற்றை சுத்தம் செய்யவும், தானியங்களில் உள்ள உமியை பிரித்தெடுக்கவும் இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக விவசாயிகளிடம் இருந்து சிறு தொகை வசூல் செய்யப்படும். மேலும், நெல் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி செயல் விளக்கத்திடல்கள் இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் அவர் எடுத்துரைத்தார். 

இந்த ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குநர்(மாநில திட்டம்) ஜோசப்மரியரெக்ஸ், வேளாண்மை உதவி இயக்குநர் மணிசேகரன், அருப்புக்கோட்டை வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.