

வந்தவாசி-காஞ்சிபுரம் பிரதான சாலை குண்டும், குழியுமாக மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது. இதனை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை சுமார் 40 கி.மீ. தூரம் உள்ளது. இந்தச் சாலையில் தென்னாங்கூர், மாலையிட்டான்குப்பம், தேத்துரை, பெருநகர், கூழமந்தல், செய்யாறு சிப்காட், தூசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்தச்சாலை வழியாக திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கும், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன.
செய்யாறு சிப்காட் தொழிற்சாலைகளில் பணிபுரியும் வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் இந்தச் சாலை வழியாகத்தான் தொழிற்சாலை வாகனங்களில் சென்று திரும்புகின்றனர். மேலும் செய்யாறு சிப்காட் தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களும் இந்தச் சாலையில் செல்கின்றன. மேலும் வந்தவாசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கல்லூரிப் பேருந்துகளில் இந்த வழியாகச் செல்கின்றனர்.
இந்த நிலையில் இந்தச் சாலை போதிய பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
குறிப்பாக வடநாங்கூர், மாலையிட்டான்குப்பம், தேத்துரை, பெருநகர், கூழமந்தல் உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து மிக மோசமாகக் காணப்படுகிறது.
4 கி.மீ. தொலைவைக் கடக்க 15 நிமிடங்கள்
இந்தச் சாலையில் கூழமந்தல் கிராமத்திலிருந்து செய்யாறு சிப்காட் வரையிலான சுமார் 4 கி.மீ. தூரச் சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.
இந்த 4 கி.மீ. தூரத்தை வாகனத்தில் கடக்க அதிகபட்சம் 4 நிமிடங்கள் போதுமானதாகும்.
ஆனால் சாலை மோசமாக உள்ளதால் இந்த 4 கி.மீ. தூரத்தைக் கடக்க தற்போது குறைந்தபட்சம் 15 நிமிடங்களுக்கும் மேலாகிறது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
மேலும் சேதமடைந்துள்ள இச்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு உடல் வலியும், வாகனம் ஓட்டுபவர்களுக்கு பெரும் சிரமமும் ஏற்படுகிறது.
எனவே, முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சாலையை செப்பனிட்டு சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.