பொதுப்பணித் துறையில் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
முக்கிய நீர்நிலைகள், அணைக்கட்டுகளின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தங்களை நிரந்தரப்படுத்துவது அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொதுப்பணித் துறையின் கீழ், நீர்வள ஆதாரம், கட்டட கட்டுமானம், பராமரிப்பு, மின் பராமரிப்பு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பிரிவுகளில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். குறிப்பாக, மேட்டூர், பெரியார், சோலையார், ஆழியாறு போன்ற முக்கிய அணைகளில் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். பராமரிப்புப் பணிகளை இரவு, பகல் முழுவதும் பார்த்தாலும் குறைந்த அளவே ஊதியம் கிடைப்பதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஊழியர்கள் நலச் சங்கத்தினர் கூறியதாவது:
மழைக்காலங்களில் அணைக்கட்டுகளில் உள்ள ஷட்டர்களை ஏற்றி, இறக்குவது போன்ற மிகவும் ஆபத்தான பணிகளைச் செய்யும் போது மரணம் ஏற்பட்டால் எந்தவித அரசு உதவி சலுகைகளும் கிடைப்பதில்லை. அரசு நிர்ணயித்த தினக்கூலி சம்பளமும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. தினக்கூலி பணியாளர்களில் பலரும் 45 வயதைக் கடந்தவர்கள்.
அவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் அளிக்கப்படுகிறது. மேலும், அமைச்சர்கள் இல்லங்கள், அரசு கட்டடங்கள், தச்சுப்பணி, மின்பணி என விடுமுறையின்றி பணியாளர்கள் 12 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர். அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர். சமாதி, மணிமண்டபங்கள், கரிகாலன் கல்லணை ஆகியன தினக்கூலி பணியாளர்கள் மூலமே பராமரிக்கப்படுகிறது.
பணி நிரந்தரம் அவசியம்:பொதுப்பணித் துறையில் ஏற்கெனவே பணிபுரிந்து வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். இதன்பிறகு, இதுவரை 5 ஆயிரத்து 300 பேர் வரை நிரந்தரம் செய்யப்பட்டு விட்டனர். இன்னும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாகவுள்ளன.
எனவே, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பரிசீலனையில் உள்ள ஆயிரத்து 200 தினக்கூலி பணியாளர்களை பணிவரன் முறை செய்ய வேண்டும். இந்தப் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுப்பணித் துறை ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

