முடங்கிக் கிடக்கும் பனைபொருள் பயிற்சி மையம்

கடலூரில் 5 மாநிலத்தவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த மண்டல பனைபொருள் பயிற்சி மையம், மத்திய அரசின் நிதியுதவி இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது.
முடங்கிக் கிடக்கும் பனைபொருள் பயிற்சி மையம்
Published on
Updated on
2 min read

கடலூரில் 5 மாநிலத்தவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த மண்டல பனைபொருள் பயிற்சி மையம், மத்திய அரசின் நிதியுதவி இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது.

தமிழகத்தின் மாநில மரமாகப் போற்றப்பட்டு வருவது பனை மரம். 2002-03ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் 8.50 கோடி பனைமரங்கள் உள்ளன. இவற்றில், தமிழகத்தில் மட்டும் சுமார் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. .

பனை மரங்கள் மூலம் பதநீர், கருப்புக்கட்டி, கற்கண்டு, நுங்கு ஆகிய உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன. மேலும், வீடுகளுக்கான கூரை, வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படும் பொருள்களையும், கலைப் பொருள்களையும் தயாரிக்க பனை பயன்படுகிறது. இந்தத் தொழிலை நம்பி தமிழகத்தில் லட்சக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர். இந்தத் தொழிலை மேம்படுத்தவும், தொழிலில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கவும் மத்திய அரசின் கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் கடலூரில் கடந்த 1971ஆம் ஆண்டில் மண்டல பனை பொருள் பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் செயல்படும் ஒரே பயிற்சி மையமான இங்கு தமிழகம், புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இலங்கையைச் சேர்ந்தவர்களும் சிறப்பு அனுமதி பெற்று பயிற்சி பெறுவார்கள்.

4.39 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி மையத்தில் 5 வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, பனை மரம் ஏறுதல், பதநீர் இறக்குதல், பதநீர் சார்ந்த மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரித்தல், நார் பொருள்கள் மூலமாக கலைப்பொருள்கள் உருவாக்குதல், வீட்டு உபயோகத்துக்கான கூடைகள், துடைப்பம் உள்ளிட்டவை தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன. உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்யவும் பல்வேறு முக்கிய நகரங்களில் கூட்டுறவு விற்பனை வாரியமும் அமைக்கப்பட்டிருந்தது.

பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு உதவித்தொகை, போக்குவரத்துச் செலவு மற்றும் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை மத்திய கதர் கிராமத் தொழில் ஆணையம் தமிழக கதர் கிராமத் தொழில் வாரியம் மூலமாக வழங்கி வந்தது.

இங்கு 1978ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு 110 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. 2001ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பயிற்சி மையத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதை மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. இதனால், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படாமலும், வகுப்பறைகள் பராமரிக்கப்படாமலும் கைவிடப்பட்டது. சுமார் 20 பேர் வரையில் பணியாற்றி வந்த பயிற்சி மையத்தில் தற்போது 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களுக்கும் அரசு ஊதியம் வழங்குவதில்லை. அவர்கள் பனை ஏறும் தொழிலாளர்கள் மூலமாக பயிற்சி மையத்தில் உள்ள பனை மரத்தில் பதநீர் இறக்கி அதை விற்பனை செய்வது, சில தனியார் நிறுவனங்களுக்கு பனை பொருள்களை உற்பத்தி செய்து வழங்குவதில் கிடைக்கும் சிறிய லாபத்தில் தங்களுக்கான ஊதியத்தின் ஒரு பகுதியை பெற்று வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர்களை உருவாக்கிய பயிற்சி மையம் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, மாநில அரசே இந்தப் பனைபொருள் பயிற்சி மையத்துக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, மீண்டும் பயிற்சியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். ஏனெனில், பனை மரங்கள் அழிந்து வரும் நிலையில், பனை மரம் ஏறும் தொழிலும் நலிவடைந்து வருகிறது. கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமெனில், ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய பனைத் தொழிலை மேம்படுத்த வேண்டும். அதற்கு சில லட்சம் ரூபாய் செலவிட்டாலே ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி, நகராட்சி, அரசு அலுவலகங்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை பனைபொருள் பயிற்சி மையம் மூலமாகவே பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதனால், பனைத் தொழில் மிகுந்த வளர்ச்சியைப் பெற்று வந்தது. அதே உத்தரவை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் இந்தத் தொழிலானது வளர்ச்சியைப் பெறுவதுடன், இளைஞர்களும் வேலைவாய்ப்பைப் பெறுவர்.

தற்போது சித்த மருத்துவம் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில் மருத்துவத்துக்குத் தேவையான தரமான பனை வெல்லம், கற்கண்டு ஆகியவை கிடைக்காமல், பொதுமக்கள் தரமற்றதை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதைத் தவிர்க்க, பதநீர் இறக்கும் தொழிலை ஊக்கப்படுத்தினால், கேட்பாரற்ற நிலையில் வெட்டப்பட்டு வரும் 5 கோடி பனை மரங்களும் பணம் கொழிக்கும் கற்பகவிருட்சமாக மாறும் என்கின்றனர் பனை ஆர்வலர்கள். எனவே, தமிழக அரசே பனை பொருள் பயிற்சி மையத்தை ஏற்று தொடர்ந்து நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com