புதுவை விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: தமிழக அரசு நிலம் ஒதுக்குமா?

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு ஒதுக்கித் தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுவை விமான நிலைய விரிவாக்கத் திட்டம்: தமிழக அரசு நிலம் ஒதுக்குமா?
Updated on
2 min read

புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு ஒதுக்கித் தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 1989-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விமான நிலையத்தில் முதன்முதலாக சென்னை- புதுச்சேரி வாயுதூத் விமானம் வாரம் 3 முறை இயக்கப்பட்டது. போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், இந்த விமான சேவை 1992-ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. மேலும், விமான ஓடுதளம் 1,222 மீட்டர் நீளம் மட்டுமே இருந்ததால், நடுத்தர விமானங்கள் இயக்கப்படவில்லை.

எனவே, விமான நிலைய விரிவாக்கத்துக்காக ரூ. 18.67 கோடி மதிப்பிலான 19.92 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தி, விமான நிலைய ஆணையத்திடம் புதுச்சேரி அரசு ஒப்படைத்தது. இதையடுத்து, விமான ஓடுதளத்தை 1,500 மீ. நீளத்துக்கு விரிவுபடுத்தி, புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்டது.

இதையடுத்து, தனியார் விமான நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் விமானப் போக்குவரத்து 17-01-2013-இல் தொடங்கியது. சிறிய டோர்னியர் ரக விமானங்கள் இங்கு இயக்கப்பட்டன.

பின்னர், பெரிய வகை விமானங்களை இயக்குவதற்காக, 2013-ஆம் ஆண்டு ஜனவரியில் விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையம் திறக்கப்பட்டது.

2013, ஜனவரி 17ஆம் தேதி முதல் தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் மூலமாக புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு வாரம் இரண்டு முறை விமானங்கள் இயக்கப்பட்டன.

ஆனால், பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக ஏற்பட்ட தொடர் நஷ்டத்தால் 2014-ஆம் ஆண்டு, ஜனவரி 31-இல் இந்த விமான சேவையும் நிறுத்தப்பட்டது. நடுத்தர வகை விமானங்களை இயக்கும் வகையில் விரிவுபடுத்தி, விமான நிலையம் மேம்படுத்தப்பட்ட ஓராண்டுக்குள் அதைப் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

அதன்பிறகு, 2014, பிப்ரவரி 1 முதல் புதுச்சேரி விமான நிலையம் முழுமையாக மூடிக் கிடந்தது. இந்த நிலையில், மீண்டும் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் சார்பில் 48 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டன. 3 மாதங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் போதிய வருவாய் இல்லாததாலும், விமான எரிபொருள் நிரப்பும் முனையம் இல்லாததாலும் அலையன்ஸ் ஏர் நிறுவனமும் தனது சேவையை நிறுத்திக் கொண்டது.

220 ஏக்கர் நிலம் தேவை: புதுச்சேரி விமான நிலையத்தில் பெரிய ரக விமானங்களை இயக்கும் வகையில் விமான ஒடுபாதையின் நீளத்தை விரிவுபடுத்த வேண்டும். மேலும், அதிநவீன விமான வழிகாட்டி சாதனங்களையும் நிறுவ வேண்டும். இதற்கு 220 ஏக்கர் நிலம் கூடுதலாகத் தேவைப்படுகிறது.

புதுச்சேரி பகுதியில் இந்த நிலம் இல்லாத நிலையில், விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியில் 220 ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு தமிழக அரசிடம் பல முறை புதுச்சேரி மாநில அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழக அரசிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இதனால், பல ஆண்டுகளாக புதுச்சேரி விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டம் முடங்கி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகால என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது, தமிழகத்தில் அதிமுக அரசுடன் சுமுகமான உறவு இல்லாததால், விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தைப் பெற முடியவில்லை.

தற்போது புதிதாக காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தைப் பெற தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சென்னை விமான நிலையம் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. புதுச்சேரி விமான நிலையம் விரிவுபடுத்தப்பட்டால் மாற்று ஏற்பாடாக விமானங்களை இங்கிருந்து இயக்க முடியும்.

எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுச்சேரி விமான நிலையத்துக்குத் தேவையான 220 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தருவாரா என்பது புதுவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com