டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆவணப் பரிசோதனையில் இன்று முதல் ஒற்றை சாளர முறை: ஏற்றுமதி, இறக்குமதியில் காலதாமதம், முறைகேடு குறையும்!

சுங்கத் துறை ஆவணப் பரிசோதனையில் ஒற்றை சாளர முறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்றுமதி,

News image
Updated On :31 மார்ச் 2016, 8:11 pm

முகவை க.சிவக்குமார்

சுங்கத் துறை ஆவணப் பரிசோதனையில் ஒற்றை சாளர முறை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியில் தேவையற்ற காலதாமதம், முறைகேடுகள் குறைய வாய்ப்புள்ளது.
 சுங்கத் துறையில் ஏற்றுமதி செய்ய "ஷிப்பில் பில்' முறையிலும், இறக்குமதி செய்ய "பில் ஆஃப் என்ட்ரி' எனும் முறையிலும் ஆவண பரிவர்த்தனை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த முறையில் பதிவாகும் ஆவணங்களை www.icegate.gov.in என்ற இணையதளத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்வர். பின்னர், சுங்கக் கட்டணம் செலுத்திய பிறகு சரக்குகளைப் பார்வையிட்டு கள ஆய்வு செய்வர். பின்னர் சரக்குகள் விடுவிக்கப்படும். இதேபோல், ஏற்றுமதியிலும் மதிப்பீடு, கள ஆய்வுக்கு பிறகு கன்டெய்னர்களில் சரக்குகளை ஏற்றி மூடி முத்திரையிட்டு பின்னர் துறைமுகங்களுக்கு அனுப்பி வைப்பர்.
 இதற்கிடையே, பன்னாட்டு ஒப்பந்த நடைமுறைகளின் அடிப்படையில் பெரும்பாலான சரக்குகளுக்கு பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் பெறுவது கட்டாயம்.
 இறக்குமதி செய்ய தடையில்லா சான்றிதழ் கட்டாயம்: வெளிநாடுகளிலிருந்து விளைபொருள்கள், மரங்கள் உள்ளிட்டவைகளை இறக்குமதி செய்ய பூச்சி, நோய்க் காரணிகள் ஏதும் இந்தியாவில் ஊடுருவாமல் இருக்க தாவர பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறையின் (Plant Quarantine) சான்றிதழும், உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய இந்திய உணவு பாதுகாப்புத் தரச் சான்று ஆணையத்தின் (FSSAI-Food Safety Standards Authority of India) சான்றிதழும் பெற வேண்டும். இவ்வாறாக, பொருள்களின் தன்மைக்கு ஏற்றவாறு, 44 துறைகள் தடையில்லா சான்றிதழ்களை வழங்குகின்றன.
 சுங்கத் துறையின் ஆவணப் பரிவர்த்தனைகள் முடிந்துவிட்டாலும் தடையில்லா சான்றிதழ்களைப் பெற தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். உரிய துறை அதிகாரிகள் சரக்குகளை நேரில் சென்று ஆய்வு செய்து, சரியாக இருக்கும்பட்சத்தில் தடையில்லா சான்றிதழ்களை அளிப்பர். இந்தச் சான்றிதழ்களை முகவர்கள் சுங்கத்துறையில் ஒப்படைத்த பிறகு சரக்குகள் விடுவிக்கப்படும்.
 ஒற்றை சாளர முறை அறிமுகம்: இந்த நிலையில், சரக்குகளை விடுவிக்க சுமார் 3 முதல் 15 நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதைத் தவிர்க்க அனைத்து ஆவணங்களையும், ஒருங்கிணைக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தை (Integrated Declaration) இறக்குமதியாளர்கள் அல்லது முகவர்கள் சுங்கத் துறையில் சமர்ப்பித்தால் போதுமானது.
 சுங்கத் துறை மதிப்பீட்டுக்கு பிறகு தடையில்லா சான்றிதழ்களைப் பெற தொடர்புடைய துறைக்கு சுங்கத் துறையே அனுப்பி வைக்கும். பிறகு அந்தந்தத் துறைகளிலிருந்து சரக்குகளை ஆய்வு செய்து தடையில்லாச் சான்றிதழ்கள் சுங்கத்துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
 முதல் கட்டமாக 5 துறைகளில்...: முதல்கட்டமாக தாவர நோய்த் தடுப்பு, உணவுப் பாதுகாப்பு, விலங்குகள் நோய்த் தடுப்பு, அரிய வகை விலங்கினங்கள் பாதுகாப்பு, மருந்துக் கட்டுபாட்டுத் துறை உள்ளிட்ட 5 துறைகளில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், தேவையற்ற காலதாமதம், முறைகேடுகள் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
"கால அவகாசமோ, குறைதீர் அதிகாரியோ தேவை'
 இதுகுறித்து சென்னை சுங்க இல்ல முகவர்கள் சங்கத் தலைவர் நடராஜன், செயலர் கே.வி.வி.கிரி ஆகியோர் கூறியது:
 திட்டம் இரு ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள், முகவர்கள், ஊழியர்கள் அறிந்து கொள்ள கால அவகாசம் தேவை. மேலும் சுமார் 40-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களைப் பெற அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். புதிய முறையில் காலதாமதம் அல்லது வேறு காரணங்கள் குறித்து சுங்கத் துறையால் இதர துறைகளைக் கேள்வி எழுப்ப முடியாது.
 எனவே, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குறை தீர்க்கும் அதிகாரியை (Nodal Officer) ஒவ்வொரு அலுவலகத்திலும் 24 மணி நேரமும் இருக்கச் செய்ய வேண்டும். அவருக்கு கண்காணிக்கவும், தவறுகளைச் சரிசெய்யவும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்றனர்.
"படிப்படியாக டிஜிட்டல் மயமாகும்'
 இதுகுறித்து மத்திய சுங்கம் மற்றும் ஆயத்தீர்வை வாரிய இணை ஆணையர் (ஒற்றைச்சாளர முறை திட்டம்) ராஜேந்திர மீனா கூறியது:
 சுங்கத் துறையுடன் அனைத்து துறைகளுக்கும் தகவல் அனுப்ப சிறப்பு தொகுப்பு முக்கிய துறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இனி இறக்குமதியாளர்கள் தடையில்லா சான்றிதழ்களைப் பெற அலைய வேண்டிய அவசியம் இல்லை.
 ஏற்றுமதி- இறக்குமதி ஆவணப் பரிசோதனையில் வெளிப்படைத் தன்மை கடைப்பிடிக்கப்படும். சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆவணங்களும் மின்னணு ஆவணமாக (Digital Documents) செயல்வடிவம் பெறுவதால், சுங்கத் துறை படிப்படியாக முழுமையான டிஜிட்டல் பயன்பாட்டுக்கு மாற்றம் பெறும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.