புதுச்சேரி: பொலிவுறு நகரங்கள் திட்ட இரண்டாவது பட்டியலிலும் புதுச்சேரி உழவர்கரை நகராட்சி இடம் பெறாததால், மாநில மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு கடந்த 2014-இல் பொறுப்பேற்றதும், "ஸ்மார்ட் சிட்டி எனப்படும் பொலிவுறு நகரங்கள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு மொத்தம் ரூ. 48,000 கோடி செலவிடப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 100 நகரங்கள் அதிநவீன வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருக்கும்' என பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து, நாடு முழுவதும் இந்தத் திட்டத்துக்கான நகரங்களைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது. திட்டத்துக்கான போட்டியில் பங்கேற்பதற்கான வழிமுறைகள், சமர்ப்பிக்க வேண்டிய திட்ட வரைவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
உழவர்கரை நகராட்சி: அதன்படி, பொலிவுறு நகரத் திட்டத்துக்கு புதுச்சேரியின் உழவர்கரை நகராட்சி தேர்வு செய்யப்பட்டது. முதலில் திட்ட வரைவைச் சமர்ப்பித்து தேர்வு பெறும் 20 சிறந்த நகரங்களுக்கு பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் நிதி ஒதுக்கப்படும் என மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதன்படி, உழவர்கரை நகராட்சி சார்பில் பொதுமக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மகிந்திரா கன்சல்டிங் நிறுவனம் பொலிவுறு நகரத் திட்ட வரைவை தயார் செய்தது.
திட்ட வரைவின்படி உழவர்கரை நகராட்சி பசுமையான, பொருளாதார வளர்ச்சி நிறைந்த, ஒருங்கிணைந்த வளர்ச்சி நிறைந்த சிறந்த நேர்மையான நிர்வாகத்துடன், தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும்.
ரூ. 5,611 கோடி மதிப்பீடு: உழவர்கரை நகராட்சியை பொலிவுறு நகரமாக்கும் திட்டத்துக்கு ரூ. 5,661 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. சேதாரப்பட்டு- கரசூர் பகுதியில் 880 ஏக்கர் பரப்பளவில் கிரீன்பில்ட் நகரத் திட்டத்தைச் செயல்படுத்துவது, நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது, நவீன திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவது என வரைவுத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், முதல் கட்டமாக வெளியிடப்பட்ட, தேர்வு செய்யப்பட்ட 20 நகரங்கள் பட்டியலில் புதுச்சேரி உழவர்கரை நகராட்சி இடம் பெறவில்லை. இதனால், அப்போதைய முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார்.
மேலும், கடந்த பிப்ரவரி மாதம் கைவினைக் கலைஞர்கள் கிராமத் திறப்பு விழாவில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இரண்டாம் கட்ட பொலிவுறு நகரங்கள் பட்டியலில் புதுவை கண்டிப்பாக இடம் பெறும். இதற்கான மாற்றுத் திட்ட வரைவை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இரண்டாம் பட்டியலில் லக்னெள, வாரங்கல், பனாஜி, போர்ட்பிளேர், ராஞ்சி, பரீதாபாத் உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், புதுச்சேரி உழவர்கரை நகராட்சி இடம் பெறவில்லை.
பிரான்ஸ் அரசு ஆர்வம்: பிரான்ஸ் நாட்டு ஆளுகையின் கீழ் புதுச்சேரி 250 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த நிலையில், தற்போது பொலிவுறு நகரத் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க அந்த நாட்டு அரசும் தயாராக இருந்தது.
உழவர்கரை நகராட்சி சார்பில் ரூ. 5,611 கோடிக்கு திட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டதால், புதுச்சேரி இந்தத் திட்டத்தின் கீழ் இடம் பெறவில்லையோ என சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஐயம் எழுந்துள்ளது.
பொலிவுறு நகரத் திட்டத்துக்கான சிறப்பு அதிகாரி தீனதயாளன் கூறுகையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் கடிதத்தை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் கூறுகையில், நகரில் நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கும் வகையில் கிரீன்பில்ட் திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டத்துக்கு தேர்வு செய்ய இது தடையாக இருக்கும்பட்சத்தில் வரும் ஜூலை மாதம் திருத்தி அமைக்கப்பட்ட வரைவு திட்டத்தை சமர்ப்பிப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.