
அரசின் கொள்முதல் அறிவிப்பை எதிர்நோக்கி பன்னீர் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தமிழர் திருவிழாவான பொங்கல் விழா. கிராமங்களில் உழவர் திருநாளாக, மாட்டுப் பொங்கலாக, காணும் பொங்கலாக 5 நாள்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
விவசாயி தனது விவசாயப் பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு நாளையும் அப்போது கொண்டாடுவது வழக்கம்.
இதில் முக்கியப் பங்கு வகிப்பது பன்னீர் கரும்புகளாகும். வீட்டு வாசலில் பொங்கலிட்டு, அதை தோகையுடன் கூடிய கரும்புடன் படையலிட்டு கடவுளுக்கு படைப்பதே சிறப்பானது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் மக்களுடன் பங்கெடுக்க விரும்பிய தமிழக அரசு இந்தக் கரும்பை கடந்த பொங்கலின் போது நியாய விலைக் கடைகள் மூலம் இலவசமாக வழங்கியது. வருகிற பொங்கல் பண்டிகைக்கும் அரசால் இலவசமாக கரும்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.
இந்தக் கரும்புகள் கடலூர், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பான்மையாகப் பயிரிடப்படுகின்றன. 10 மாதங்கள் கண்ணும் கருத்துமாக வளர்த்த பின்னரே கரும்புகள் முழுமையாக அறுவடைக்கு வரும். கடந்த பொங்கலின் போது அரசால் இலவசமாக வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் கரும்பு பயிரிடப்படும் பரப்பு அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் பத்திரக்கோட்டை, கீரப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 600 ஹெக்டேரில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 30 சதவீதம் அளவுக்கு கூடுதலாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பியம்பேட்டையைச் சேர்ந்த விவசாயி வீ.தணிகாசலம் கூறியதாவது:
கடந்த பொங்கலுக்கு தமிழக அரசு கரும்பு ஒன்றுக்கு ரூ. 11 வீதம் மொத்தமாகக் கொள்முதல் செய்தது. அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 முழம் மட்டுமே கரும்பு வழங்கப்பட்டது. தற்போது முழுக் கரும்பையும் அரசு வழங்கும் என்ற நம்பிக்கையில் கூடுதலான பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளோம்.
ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரையில் செலவு செய்துள்ளோம். தற்போது போதிய அளவு பருவமழை பெய்யாததால், மோட்டார் வைத்து தண்ணீர் பாய்ச்சுவதால் கூடுதல் செலவாகியுள்ளது. தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே கரும்பு பயிரிட்டுள்ளோம் என்றார் அவர்.
பத்திரக்கோட்டையைச் சேர்ந்த மு.விஜயலட்சுமி கூறியதாவது:
கடந்த பொங்கலுக்கு முதல்வர் ஜெயலலிதா கரும்பு வழங்கியதால், இப்போதும் வழங்குவார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. அதை நம்பியே நான் கூடுதலாக 50 சென்ட் பரப்பளவில் கரும்பு பயிரிட்டுள்ளேன். அரசு வாங்கவில்லையெனில், நாங்கள் அதிகமான நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கும். போதிய விலை கிடைக்காதபட்சத்தில் வெட்டுக் கூலிகூடக் கிடைக்காது. எனவே, அரசு எங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கையில், கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றார் அவர்.
இவர்களைப் போன்று பொங்கல் பண்டிகைக்காக கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசின் அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.