கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிமுகவில் பிளவே கிடையாது: கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை உறுதி

அதிமுகவில் பிளவே கிடையாது. அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்று கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பிதுரை

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:19 pm

DIN

அதிமுகவில் பிளவே கிடையாது. அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்று கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பிதுரை உறுதிபடத் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை திங்கள்கிழமை காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் நேரில் சந்தித்துப் பேசினார் மு.தம்பிதுரை. இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி:
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, மறைந்த ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம் அதிமுக. பல ஆண்டுகளாக நல்ல ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிற கட்சி. இந்தக் கட்சியில் எந்தப் பிளவும் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்.
விஜயபாஸ்கர் சந்தித்தது ஏன்? என்னை அமைச்சர்கள் சந்தித்துப் பேசுவது என்பது நான் கட்சியின் மூத்த நிர்வாகி என்பதால்தான். எனது மக்களவைத் தொகுதியில் உள்ள எம்.எல்.ஏ. அவர். இதனால் என்னை பார்க்க வந்தார். அதில் உட்கருத்தைச் சொல்வது தவறானது.
இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஓ.பி.எஸ். கூறியுள்ளாரே?
கட்சியில் பிளவு என்பது கிடையாது. ஜனநாயகத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதற்காக இந்த ஆட்சியைத் தந்தார்களோ, அந்த ஆட்சியைத் தக்க வைத்து நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் அனைவருக்கும் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதைத்தான் நாட்டு மக்களும், அதிமுக தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படுவதே அதிமுக தொண்டர்களின் கடமை. இந்த ஆட்சியும் அப்படியே செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா தனது கடைசி காலத்தில் உடலை வருத்தி நாட்டு மக்களுக்கு நல்லது செய்வோம் எனக் கூறி வாக்குச் சேகரித்து ஆட்சியைத் தந்து தக்கவைத்தார்.
இப்போதைய காலகட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஒற்றுமையாக உள்ளனர். இந்த ஆட்சி நிலையான ஆட்சி. நல்லாட்சி தரக்கூடியது.
இரட்டை இலை விவகாரம்: இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முழுமையாக முடக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு மட்டுமே சின்னம் ஒத்திவைக்கப்படுகிறது எனக் கூறியுள்ளது. முழுமையாக முடக்கியதாகச் சொல்லவில்லை. கட்சியின் சின்னத்தை முடக்க வேண்டுமென்றால் அந்தக் கட்சியில் பிளவு இருக்க வேண்டும். மூன்றில் இரண்டு பகுதி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தால்தான் பிளவு எனக் கூற முடியும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அனைவரும் அந்த வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட வேண்டும் என்பதே குறிக்கோள். கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால் ஓ.பன்னீர்செல்வம் வந்து சொல்லட்டும். நாங்கள் பேசுவதற்குத் தயார். யார் கருத்து வேறுபாடுகளுடன் இருந்தார்களோ, அவர்கள் வந்து பேசட்டும். அதற்காக நான் அழைப்பு விடுப்பதாக அர்த்தமில்லை. ஒரு எம்.பி. என்ற முறையில் நான் எனது கருத்தைச் சொல்கிறேன். ஒன்றுபட்டுத்தான் இருக்கிறோம். கருத்து வேறுபாடுகள் ஜனநாயகத்தில் இயற்கை. அந்த வேறுபாடுகளை அகற்றி ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
இரட்டை இலை கிடைக்கும்: இரட்டை இலை சின்னம் அதிமுக தொண்டர்களுக்குக் கிடைக்கும். அதைப் பெறுவதற்கு ஒற்றுமையாகச் செயல்படுவோம். பிளவு என்பதே கிடையாது. எங்களுக்குள் அணி என்பதே இல்லை. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு மட்டும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதால் இரட்டை இலை சின்னத்தைத் தரவில்லை. அதேசமயம் சின்னம் முடக்கப்படவில்லை. நாங்கள் இரட்டை இலையில் தான் போட்டியிடுவோம்.
ஓ.பி.எஸ். உள்பட நாங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சி தொடர வேண்டும். இந்த ஆட்சி தொடர அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
இதற்கான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர் என்பதால் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளேன். ஆட்சி நிலையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட ஆட்சி. இந்த ஆட்சி தொடர வேண்டும். கட்சியில் பிளவு கிடையாது. ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் மு.தம்பிதுரை.

ஓ.பி.எஸ். கருத்துக்குவரவேற்பு
இரு அணிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தால் அது வரவேற்கத்தக்கது என்று மு.தம்பிதுரை தெரிவித்தார்.
அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைவது தொடர்பாக இதுவரை தன்னை யாரும் அணுகவில்லை எனவும், இணைவது தொடர்பாக யாரேனும் அணுகினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு தம்பிதுரை வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று ஓ.பி.எஸ். சொன்னது வரவேற்கத்தக்கது.
இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மூத்த அமைச்சர்கள், தலைவர்கள் இருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து பேசுவார்கள். அவர்கள் (ஓ.பி.எஸ். தரப்பு) பேசுவதற்கு வந்தால், ஒற்றுமையுடன் சேருவதற்கு வந்தால் அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம் என்றார் தம்பிதுரை.

லஞ்ச விவகாரமா?  எனக்குத் தெரியாது
இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் தரப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தம்பிதுரை கூறினார்.
இரட்டை இலை சின்னத்தை மீட்க இடைத்தரகருக்கு டி.டி.வி. தினகரன் தரப்பில் இருந்து பெருந்தொகை தரப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தப் புகார்கள் குறித்து, மு.தம்பிதுரையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை என்றார்.

முதல்வருடன் இரு முறை பேச்சு
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை, மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை இரண்டு முறை சந்தித்துப் பேசினார்.
திங்கள்கிழமை காலையும், மாலையும் என தலைமைச் செயலகத்தில் முதல்வரை தம்பிதுரை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நண்பகல் 12.30 மணியளவில் தம்பிதுரை சந்தித்தார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் வரை நடைபெற்றது.
மாலையில் சந்திப்பு: நண்பகலில் நடைபெற்ற சந்திப்பின் போது, தொகுதி தொடர்பான திட்டங்கள் குறித்து முதல்வரைச் சந்தித்துப் பேச வந்ததாகத் தெரிவித்தார். மேலும், அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை எனவும் அவர் கூறினார்.
ஆனால், மீண்டும் மாலையில் முதல்வர் எடப்பாடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பும் சுமார் அரை மணி நேரம் வரை நீடித்தது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாகப் பேசினார் அவர். அப்போது, கட்சியில் எந்தப் பிளவும் இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
கட்சி தொடர்பான விவரங்கள்: கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள் அதனைப் போக்கி ஒன்றாகச் செயல்பட வேண்டும், ஆட்சியும், அதிமுக என்ற இயக்கமும் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தனது பேட்டியின் போது அவர் முன்வைத்தார்.
மேலும், கட்சியின் நலன் சார்ந்த விஷயங்களையும் அவர் பேட்டியில் தெரிவித்தார். தனது பேட்டியின் எந்தவொரு இடத்திலும் அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அதுதொடர்பான கேள்விகளையும் அவர் புறக்கணித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.