இதற்கிடையே வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து முடித்தேன். அது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றே அனைத்தும் செய்தேன். இதற்குப் பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சிப் போராட்டம், மெரீனாவில் நடந்தது. சட்டம் ஒழுங்குக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்று கருதி பிரதமரைச் சந்தித்து அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தினேன்.
ஆனால் பிரதமர் மோடி, மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருமாறு யோசனை கூறினார். அதன்படி சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எனது நடவடிக்கையை சரியாக மேற்கொண்டேன்.
அந்த நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார். அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே, வேறு ஒருவரை முதல்வராக ஆக்கவேண்டும் என்று சொன்னால், அது தேவையில்லாமல் ஒரு பிரச்னையை உருவாக்குமே என்று கேட்டபோது, அவரைக் கண்டித்துவிட்டோம். இனி யாரும் அப்படிப் பேசமாட்டார்கள் என்று கூறினார்கள். ஆனால் அதன் பிறகு செல்லூர் ராஜு, செங்கோட்டையன் போன்றவர்களும் அதே கருத்தைச் சொன்னார்கள். அதன்பிறகு என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன். நாட்டு மக்களும் தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும் வருத்தத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்று சொன்னேன்.