சசிகலா குடும்பம் அகற்றம்: ஓபிஎஸ்ஸின் அடுத்த 'மூவ்' என்ன?
சசிகலாவால் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், நீக்கப்பட்டதை அடுத்து, ஓபிஎஸ் எடுக்கப் போகும் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


சென்னை: சசிகலாவால் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், நீக்கப்பட்டதை அடுத்து, ஓபிஎஸ் எடுக்கப் போகும் அடுத்த நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதிமுகவின் தலைமை சசிகலாவின் குடும்ப ஆட்சியின் கீழ் சென்று விடக் கூடாது என்று போர்க்கொடி பிடித்து கட்சியில் இருந்து வெளியே வந்தவர் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வத்தை முதல்வர் இருக்கையில் இருந்து இறக்கிவிட்டு அதில் அமர நினைத்த சசிகலாவுக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்து பெங்களூர் சிறைக்குச் சென்றுவிட்டார்.
அவரால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனை, எப்படி கட்சியில் இருந்து விரட்டுவது என்று நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர்கள், அவருக்கு எதிராக தில்லி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வரும் சமயத்தை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டனர்.
முன்னதாக, வருமான வரித்துறை சோதனையில் டிடிவி தினகரன் போட்டியிட்ட ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடந்தது குறித்து ஆவணங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனால், தங்களைக் காத்துக் கொள்ளவே, தமிழக அமைச்சர்கள் இந்த அதிரடியை நடத்தியுள்ளனர் என்றும் சமூக ஆர்வலர்களால் கருத்துச் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, அதிமுகவில் இருந்து தான் ஒதுங்கிவிட்டதாகவும், கட்சி பலவீனமடைய காரணமாக இருக்க மாட்டேன் என்றும் டிடிவி தினகரனும், பெருந்தன்மையோடு பேட்டியும் கொடுத்துவிட்டார்.
இது பற்றி பேசிய ஓபிஎஸ், அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை நீக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்திருப்பது தங்களின் தர்ம யுத்தப் போராட்டத்துக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி என்று கூறினார்.
டிடிவி தினகரன் விலகியதால், பல குழப்பங்கள் முடிவுக்கு வந்தாலும், தற்போது ஓபிஎஸ் - இபிஎஸ் முன் எழும் கேள்விக்குறிகளும் எழுந்துள்ளளன.
இரு அணிகளும் இணைவது குறித்து தங்கள் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களுடன் வியாழக்கிழமை காலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மாஃபா பாண்டியராஜன் உறுதி செய்துள்ளார்.
பழனிசாமி அணி தரப்பில் சில முக்கியக் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காததால்தான் பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஒரே முக்கியக் கேள்வி
இரு அணி தரப்பிலும் எழும் ஒரே முக்கியக் கேள்வி இதுதான், முதல்வர் இருக்கையை அலங்கரிக்கப் போவது யார்? என்பதே. இரு அணிகளும் இணைவதில் இந்த ஒரு கேள்விதான் மிக முக்கிய சவாலாக இருக்கும். முதல்வர் பதவியை பழனிசாமியே தக்க வைத்துக் கொண்டால், பன்னீர்செல்வம் அணியில் இணைந்த பிறகு அவருக்கு உரிய மதிப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. இத்தனை அமைச்சர்களை வைத்திருக்கும் பழனிசாமி, தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வருவாரா? பன்னீர்செல்வம் செய்த தவறை தான் செய்ய மாட்டேன் என்று மறைமுகமாக அவர் கூறியுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, இவ்விரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சிலேயே சில சந்தேகங்களும் எழுகின்றன. அதாவது, உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, இரட்டை இலையை பெறுவதற்காக தினகரனால் போடப்பட்ட திட்டமா? அல்லது பன்னீர்செல்வத்தின் அணியை தடம்புரளச் செய்ய அமைச்சர்கள் பிண்ணிய வலையா? அல்லது, வருமான வரித்துறையினரின் சோதனை, இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்குகளால், அமைச்சர்களுக்கு ஏற்பட்ட அழுத்தமா? என்ற கேள்விகளுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை.
பன்னீர்செல்வத்துக்கு எதிரான சதி என்றால், இதனை அவரும் உணர்ந்தே இருப்பார்.
செவ்வாய்க்கிழமை மதியம், அதிமுக அணியில் இருந்து சசிகலா குடும்பத்தினர் விலகினால் மட்டுமே இணைப்புப் பற்றி பேச முடியும் என்று ஓபிஎஸ் சொல்ல, அன்று இரவே, கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்ததிலும், அன்று காலை அதிமுக அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் என்று தினகரன் கூறிய நிலையில், அதிமுக தலைமையகத்துக்குள் தினகரன் நுழைய முடியாது என ஆங்காங்கே அமைச்சர்கள் பேட்டி கொடுத்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம், நான் நேற்றே கட்சியில் இருந்து விலகி விட்டேனே என்று எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளியை வைத்ததில், ஒரு சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கிறது.
இது யாரை கவிழ்த்து / கவிழ்க்க போடப்படும் நாடகம் என்று புரியாமல், தமிழக மக்கள் சிந்திக்கவும் நேரம் இல்லாமல் பிரேக்கிங் நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தினகரனை நீக்கினால் பேச்சு என்று பன்னீர்செல்வம் கூறிய போது, இணைப்புக்கான சாவி பழனிசாமி அணியிடம் இருந்தது. இப்போது தினகரனை நீக்கிவிட்டதாகக் கூறியிருப்பதால், அந்த சாவி பன்னீர்செல்வத்திடம் வந்துள்ளது.
இனி, புரட்சித் தலைவி அம்மா அதிமுக அணியினர், அம்மா அதிமுக அணியோடு இணைவார்களா? அல்லது புரட்சித் தலைவி அம்மா அணியில், அம்மா அதிமுக அணியினரை இணைத்துக் கொள்வார்களா என்பதுதான் புரியாத புதிர். இது பன்னீர்செல்வம் எடுத்து வைக்கப் போகும் அடுத்த 'மூவ்' என்ன என்பதில் இருந்துதான் தெரிய வரும்.
ஒரு சில அமைச்சர் பதவிகளை மட்டும் பெற்றுக் கொண்டு கட்சியில் இணைவதற்கு பன்னீர்செல்வம் சம்மதிப்பாரா? முதல்வர் நாற்காலி தான் இதுவரை நடந்த போராட்டத்துக்கான பரிசாக, கருதுவாரா? அல்லது எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட வேண்டிய தருணத்தில் இரட்டை இலைச் சின்னமே முடங்கியிருப்பதை மீட்டால் போதும் என்று முடிவுகளை எடுப்பாரா?
அரசியலில் இதுவரை நிதானமாக காய் நகர்த்தி வரும் பன்னீர்செல்வம், இந்த தருணத்தில் எடுக்கப் போகும் முடிவை, தமிழக மக்கள் அனைவருமே எதிர்நோக்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...